Published:Updated:

ஆளுநர் மாளிகை முன் தரையில் அமர்ந்த முதல்வர்! - புதுச்சேரியை திரும்பிப் பார்க்க வைத்த நாராயணசாமி

ஆளுநர் மாளிகை முன் தரையில் அமர்ந்த முதல்வர்! - புதுச்சேரியை திரும்பிப் பார்க்க வைத்த நாராயணசாமி
ஆளுநர் மாளிகை முன் தரையில் அமர்ந்த முதல்வர்! - புதுச்சேரியை திரும்பிப் பார்க்க வைத்த நாராயணசாமி

முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்களுடன் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்த 11-ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், லைசென்சும் பறிமுதல் செய்யப்படும் என்று டி.ஜி.பி சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகன எண்களைக் குறித்து நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

அதன்படி 11,12 ஆகிய இரு தினங்களில் மட்டும் சுமார் 30,000 பேர்களின் வாகன எண்கள் குறிக்கப்பட்டு அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கிறது போக்குவரத்துக் காவல்துறை. கிரண் பேடி வெளியிட்ட இந்தத் தகவல் பத்திரிகைகளில் வெளியாகி மக்களைக் கொந்தளிக்க வைத்தது. அதேபோல அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் இந்தச் சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் இறங்கின. காங்கிரஸ் கட்சியின் சக்தி செயலியை அறிமுகப்படுத்தும் விழாவுக்காக மாஹே சென்றிருந்த முதல்வர் நாராயணசாமி இன்று காலை புதுச்சேரி திரும்பினார்.

உடனே தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் அவசர ஆலோசனையை நடத்தினார். அமைச்சர்கள் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் நாராயணசாமி கறுப்பு வேட்டி மற்றும் கறுப்புச் சட்டை அணிந்து வெளியே வர, அமைச்சர்கள் அனைவரும் கறுப்புத் துண்டை தோளில் போட்டிருந்தனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து போராட்டம் நடத்தியது போல ஏதோ நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த காவல்துறை, ஆளுநர் மாளிகைக்கு காவலைப் பலப்படுத்தியது. தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் எம்,எல்.ஏ-க்களுடன் ஆளுநர் மாளிகையை நோக்கி நடந்து சென்றார். ஆனால், ஆளுநர் மாளிகைக் காவலர்கள் பேரிகார்டு போட்டு இவர்களைத் தடுத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள் ஆளுநர் மாளிகையின் முன் அமர்ந்தனர்.

இந்தத் தகவல் பரவியதும் காங்கிரஸ் தொண்டர்களும், கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் தொண்டர்களும் அங்கு குவிந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்தே கிரண் பேடி அதிகாரதுஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவரது அத்துமீறல்களைப் பற்றி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் எந்தப் பதிலும் இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமையை இழந்துவிட்டோம். மக்கள் நலத்திட்டங்கள் எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார். அனைத்திலும் தனக்குத்தான் முழு அதிகாரம் என்று சொல்லிக் கொண்டு மாநில நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.

தற்போது ஹெல்மெட் விவகாரத்தில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு அவரே சாலையில் இறங்கி ஹெல்மெட் அணியாதவர்களை வாகனங்களில் இருந்து இறக்கிவிட்டு அத்து மீறலில் ஈடுபட்டார். கடந்த 7-ம் தேதி இலவச அரிசி, வேட்டி சேலை உள்ளிட்ட 39 மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகள் அவரது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவற்றுக்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார். இவரின் இத்தகைய செயல்களால் ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலமே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் இந்த காலவரையற்றப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். எத்தனை நாள்களானாலும் மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை எங்களது போராட்டத்தை கைவிடுவதாக இல்லை” என்று தெரிவித்தார்.

கிரண் பேடிக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க தொண்டர்கள் அவரது உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. சிறிது நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஆளுநர் கிரண் பேடியிடம் எடுத்துச் சென்றார் சீனியர் எஸ்.பி அபூர்வா குப்தா. அதையடுத்து இரண்டு முறை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஆளுநர் கிரண்பேடி. ஆனால், ``அவர் வேண்டுமானால் இங்கு வரட்டும். எங்களால் வர முடியாது. கோப்புகளுக்கு அனுமதி கொடுக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நாங்கள் நகர மாட்டோம்” என்று மறுத்துவிட்டார் நாராயணசாமி.

முதல்வர் நாரயாணசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களும் மொத்தமாக ஆளுநர் மாளிகையின் முன் போராட்டத்தில் அமர்ந்துள்ளதால் மாநிலம் முழுவதும் பதற்றத்தில் இருக்கிறது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் அமர்வது இதுவே முதல் முறை. ஆளுநர் கிரண் பேடி பின்புற வாயில் வழியாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறிவிடாத படி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம் ஆகியோர் அங்கு அமர்ந்திருக்கிறார்கள். 

இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், `பல்வேறு விவகாரங்களைச் சுட்டிக்காட்டி நீங்கள் கடந்த 7-ம் தேதி அனுப்பிய கடிதத்துக்குப் பதில் கோரியே நீங்கள் ஆளுநர் மாளிகை முன்பாக தர்ணாவில் ஈடுபட்டிருப்பதாக நான் அறிகிறேன். எனது பதிலுக்காகக் காத்திருக்காமல் சட்டவிரோதமாகப் போராட்டத்தில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனைக்கு நான் தயாராக இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.