Published:Updated:

"நீங்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா?” பி.ஜே.பி-யைத் தாக்கும் சிவசேனா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நீங்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா?” பி.ஜே.பி-யைத் தாக்கும் சிவசேனா!
"நீங்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா?” பி.ஜே.பி-யைத் தாக்கும் சிவசேனா!

"நீங்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா?” பி.ஜே.பி-யைத் தாக்கும் சிவசேனா!

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பரபரப்பாக இருக்கிறது பி.ஜே.பி. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடியும், பி.ஜே.பி. தலைவர் அமித் ஷாவும் பிஸியாகி விட்டார்கள். ஆனால், கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைப்பதில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது பி.ஜே.பி. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பல கட்சிகள், இந்தமுறை முறுக்கிக்கொண்டு நிற்கின்றன. தெலுங்கு தேசத்தை ஏற்கெனவே இழந்துவிட்டார்கள். இப்போது, சிவசேனாவும் பி.ஜே.பி-யுடன் முரண்பட ஆரம்பித்துள்ளது.

பிப்ரவரி 11-ம் தேதி, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார், சந்திரபாபு நாயுடு. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர், நேரில் சென்று நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு அடுத்து, சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத்தும் நேரில் சென்று ஆதரவு தந்தது, சந்திரபாபு நாயுடுவுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. ஏனென்றால், அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பி.ஜே.பி-க்கு நெருக்கமான கட்சியாக சிவசேனா இருக்கிறது. அந்தக் கட்சியின் ஆதரவுடன்தான், மராட்டிய மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது பி.ஜே.பி. அப்படிப்பட்ட சிவசேனாவிலிருந்து முக்கியத் தலைவர் ஒருவர் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது சர்ப்ரைஸ் தானே? அதுவும் இல்லாமல், ``கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்றே கலந்துகொள்ள வந்தேன்” என்றும் அறிவித்துச் சென்றார் சஞ்சாய் ராவத். இதுதான் பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியைத் தந்தது. ``சிவசேனா நம்பகமான கட்சியல்ல” என்ற ரீதியில், அதன் நிர்வாகிகள் பேச ஆரம்பித்தனர்.

"நீங்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா?” பி.ஜே.பி-யைத் தாக்கும் சிவசேனா!

அவ்வளவுதான்... `பொறுத்தது போதும்’ என்று பொங்கி எழுந்து விட்டது, சிவசேனா. அந்தக் கட்சியின் மனசாட்சியாகப் பார்க்கப்படும் `சாம்னா’ நாளிதழ், பி.ஜே.பி-யைக் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளது. அதில், ``தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தபோது சிறந்த தலைவராகத் தெரிந்த சந்திரபாபு நாயுடு, அதிலிருந்து விலகியதும் தீண்டத்தகாதவர் ஆகிவிட்டாரா? அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவசேனா பங்கெடுத்ததை, ஏதோ வானமே இடிந்து விழுந்ததைப்போல பெரிதுபடுத்திப் பேசுகிறார்கள்.

மாநிலப் பிரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறது ஆந்திரப்பிரதேசம். அதனாலேயே, நாயுடுவின் உண்ணாவிரதத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துகொண்டது சிவசேனா. அதை விமர்சிப்பவர்கள் எவரென்று பார்த்தால், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தவர்கள். அந்தக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி பாகிஸ்தான் ஆதரவு மனநிலை கொண்டவர். அந்தக் கட்சியின் எம்.பி. ஃபயாஸ் அகமது, `நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதி பெஹ்பூல் பாட் ஆகியோரின் உடல்களை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று கேட்டவர். அப்படிப்பட்ட கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிகாரத்தை அனுபவித்தவர்கள், அதையெல்லாம் மறந்துவிட்டு சிவசேனாவை விமர்சிக்கிறார்கள்” என்று, காட்டமாக எழுதப்பட்டுள்ளது.

அதோடு, ``கூட்டணிக் கட்சிகளை இவர்கள் புறக்கணித்தால் பிரச்னையில்லை. ஆனால், இவர்களை கூட்டணிக்கட்சிகள் புறக்கணித்தால் பிரச்னையா? நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மீண்டும் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவை நாடமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்றும் தாக்கியிருக்கிறது சாம்னா. 

"நீங்கள் செய்தால் சரி; நாங்கள் செய்தால் தவறா?” பி.ஜே.பி-யைத் தாக்கும் சிவசேனா!

இதுவரை, மோடியையும் அமித் ஷாவையும் பல்வேறு தருணங்களில் விமர்சித்திருக்கிறது சிவசேனா. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்களிலும் பி.ஜே.பி-க்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தார், அதன் தலைவர் உத்தவ் தாக்கரே. ஆனால், பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பதும், பி.ஜே.பி-யின் கூட்டணி தர்மத்தைக் கேள்விக்கு உட்படுத்தியிருப்பதும் புதியவை. தொகுதிப்பங்கீட்டில் பி.ஜே.பி. இறங்கிவர மறுப்பதும், உத்தவ் தாக்கரேவை உஷ்ணமாக்கியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு