Published:Updated:

சி.ஏ.ஜி அறிக்கை வெளியான நாளே இந்திய மண்ணைத் தொட்ட ரஃபேல் போர் விமானங்கள்!

சி.ஏ.ஜி அறிக்கை வெளியான நாளே இந்திய மண்ணைத் தொட்ட ரஃபேல் போர் விமானங்கள்!
சி.ஏ.ஜி அறிக்கை வெளியான நாளே இந்திய மண்ணைத் தொட்ட ரஃபேல் போர் விமானங்கள்!

ஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், முதல் ரஃபேல் விமானம் நேற்று மாலை 6.01 மணிக்கு இந்திய மண்ணைத் தொட்டது. பெங்களூரு ஏலஹங்கா விமானப்படை விமான நிலையத்தில் இந்த ரகத்தைச் சேர்ந்த முதல் விமானம் தரையிறங்கியது. பெங்களூருவில் பிப்ரவரி 20 முதல் 25-ந் தேதி வரை நடைபெறவுள்ள 12-வது விமானக் கண்காட்சியில் மூன்று  ரஃபேல் ரக விமானங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் இரு விமானங்கள் பயிற்சி விமானங்கள். 

முன்னதாக இந்த விமான கண்காட்சியில் ரஃபேல் விமானங்கள் பங்கேற்காது என்று சொல்லப்பட்டது. எனினும், கண்காட்சியில் பங்கேற்கும் ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்காக டெஸால்ட் நிறுவனம் தயாரித்தது இல்லை. இவை பிரான்ஸ் நாட்டு விமானப்படை விமானங்கள்.  

இந்திய விமானப்படைக்காகத் தயாரிக்கப்படும் ரஃபேல் விமானங்கள் இன்னும் தயாரிக்கப்படவும் இல்லை. வரும் செப்டம்பர் மாதத்தில்தான் இந்தியாவுக்கான முதல் விமானம் வழங்கப்படவுள்ளது. இந்த விமானங்கள் வழங்கப்பட்டதும் இந்திய விமானப்படையில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ள ரஷ்யத் தயாரிப்பான மிக் -21 ரக போர் விமானங்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும். இரட்டை இன்ஜீன்கள் கொண்ட ரஃபேல் ரக போர் விமானங்கள் வானிலும் தரையிலும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டவை.

நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி நேற்று அளித்த அறிக்கையில், முந்தைய காங்கிரஸ் அரசை விட 2.8 சதவிகித அளவு குறைந்த விலைக்கு 36 ரஃபேல் விமானங்களை வாங்க பாரதிய ஜனதா ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கை வெளியான நாளே பிரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கியுள்ளன.