Published:Updated:

`6 ப்ளஸ் 1 அல்லது 7 ப்ளஸ் 1...’ - அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி நிலை என்ன?

விஜயகாந்த் செல்வாக்கால் அன்றைக்கு அ.தி.மு.க-வே பதறிப்போயிருந்தது. இப்போது தே.மு.தி.க-வையும் சேர்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.

`6 ப்ளஸ் 1 அல்லது 7 ப்ளஸ் 1...’ - அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி நிலை என்ன?
`6 ப்ளஸ் 1 அல்லது 7 ப்ளஸ் 1...’ - அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி நிலை என்ன?

அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி முடிவாகிவிட்டதாகவே சொல்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். `உங்களை நம்பித்தான் நான் வளர வேண்டியுள்ளது. உங்கள் சமுதாய வாக்குகளால்தான் நான் எம்.எல்.ஏ ஆனேன். அம்மாவே படையாட்சியாருக்குச் செய்யாததை நான் செய்திருக்கிறேன்' எனப் பா.ம.க தரப்பிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

`நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் எவை?' என்பது குறித்து தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. `கூட்டணி தொடர்பாக பா.ஜ.க-வுடன் ரகசியப் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறோம்' என நேற்று பேசியிருக்கிறார் அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம். இதேபோல்தான், மாநிலக் கட்சிகள் பலவும் பிரதானக் கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க அணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. அதேநேரம், `தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற வேண்டும்' எனத் தி.மு.க-வில் உள்ள சீனியர்கள் சிலர் பேசி வருவதால் கொதிப்பில் இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. `பா.ம.க இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம்' எனத் தொடக்கத்திலேயே திருமாவளவன் கூறிவிட்டார். கூட்டணிகள் இறுதி வடிவத்துக்கு வராமல் இருப்பதால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

கொடநாடு விவகாரம் தொடங்கி ஆளும்கட்சியின் செயல்பாடுகள் குறித்து பா.ம.க இதுவரையில் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்க இருக்கும் 2,000 ரூபாய் திட்டத்தையும் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இதை வைத்து, அ.தி.மு.க, பா.ம.க கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்கின்றனர் அக்கட்சியின் பொறுப்பாளர்கள். இதுதொடர்பாக அ.தி.மு.க-வின் சேலம் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``அ.தி.மு.க, பா.ம.க கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடியும் தருவாயில் உள்ளன. `அக்கட்சிக்கு 5 இடங்கள் வரையில் ஒதுக்கலாம்' என முதல்வரின் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், ராஜ்யசபா சீட்டோடு சேர்த்து 6 ப்ளஸ் 1 அல்லது 7 ப்ளஸ் 1 என்ற அடிப்படையில் பேச்சு நடந்து வருகிறது.

இதுகுறித்து பா.ம.க தரப்பு தூதுவர்களுக்குப் பதில் அளித்த முதல்வர் தரப்பினர், `உங்கள் தகுதிக்கேற்ப சீட்டுகளை ஒதுக்குகிறோம். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, `விஜயகாந்த் வேண்டாம்' என்பதால், உங்களுக்கு 7 சீட்டுகளை ஒதுக்கினார் அம்மா. அப்போது உங்களை ஜெயிக்க வைக்க முடியவில்லை. இந்தமுறை உங்களுடைய வெற்றிக்காக உறுதியாகப் பாடுபடுவோம். தர்மபுரியில் பா.ம.க உறுதியாக வெல்லும். அதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், நிச்சயமாக ராஜ்யசபா தருகிறோம். எங்களை நம்புங்கள். உங்களை நம்பித்தான் வளர வேண்டிய சூழல் உள்ளது. உங்கள் சமுதாய வாக்குகளால்தான் எடப்பாடி எம்.எல்.ஏ ஆனார். அம்மாவே படையாட்சியாருக்குச் செய்யாததை அவர் செய்திருக்கிறார். 

தி.மு.க-வோடு நீங்கள் பேசவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். `இந்தக் கூட்டணி தோல்விடையும்' எனத் தி.மு.க-வில் உள்ள சிலர் பேசி வருகின்றனர். துரைமுருகனின் பேச்சையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் வெற்றிபெறக் கூடாது என்பதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள். கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்துங்கள்' எனக் கூறியுள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த பா.ம.க தரப்பினர், `அம்மா இருக்கும்போதே 7 ப்ளஸ் 1 வாங்கினோம்' எனக் கூற, `அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அன்று நீங்கள் தி.மு.க-வோடு சேர்ந்துவிடக் கூடாது என அம்மா நினைத்தார். விஜயகாந்த் செல்வாக்கால் அன்றைக்கு அ.தி.மு.க-வே பதறிப்போய் இருந்தது. இப்போது தே.மு.தி.க-வையும் சேர்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.

உங்களுக்கு இணையான சீட்டை தே.மு.தி.க-வும் கேட்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றும் உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது விஜயகாந்த் பெரிய சக்தியாக இருந்தார். அதனால் அவருக்கு பா.ஜ.க கூட்டணியில் 14 இடங்களை ஒதுக்கினார்கள். 2016 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வலுவான சக்தியாக மாறிவிட்டீர்கள். அதை நான் மதிக்கிறேன். அவரும் நம்முடைய கூட்டணிக்கு வேண்டும். நீங்களும் வேண்டும். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மிகவும் கீழே இறங்கிப்போனால், வெளியில் எங்களை பலவீனமானவர்களாகப் பார்ப்பார்கள். எங்கள் வாக்குகளை உங்கள் பக்கம் கொண்டு வருகிறோம்' என உறுதியளித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகும்’’ என்றார் நிதானமாக. 

`அ.தி.மு.க, பா.ம.க கூட்டணி முடிவாகிவிட்டதா?' எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எதிரொலி மணியனிடம் கேட்டோம். ``கூட்டணிகள் குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. அதற்கான அதிகாரம் மருத்துவர் அய்யாவிடம் இருக்கிறது. பேச்சுவார்த்தைகளைப் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை" என்றார் உறுதியாக.