Published:Updated:

`பொங்கல் பரிசுத் திட்டத்தில் ரூ.25- 30 கோடி ரூபாய் முறைகேடு!’ - தி.மு.க குற்றச்சாட்டு

`பொங்கல் பரிசுத் திட்டத்தில் ரூ.25- 30 கோடி ரூபாய் முறைகேடு!’ - தி.மு.க குற்றச்சாட்டு
`பொங்கல் பரிசுத் திட்டத்தில் ரூ.25- 30 கோடி ரூபாய் முறைகேடு!’ - தி.மு.க குற்றச்சாட்டு

பொதுவிநியோகத் திட்டத்தில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கடந்தவாரம் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அ.தி.மு.க, தி.மு.க  இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன. இந்த நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் கடைசி நாளான இன்று தி.மு.க அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ பொன்முடி, ` பொதுவிநியோகத் திட்டத்தின் 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசில் முறைகேடு நடந்துள்ளதை சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்தோம்.

நிதிநிலை அறிக்கையில் 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1985.46 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  துணை நிதி நிலை மதிப்பீட்டில் 2019.11 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குமே 1,000 ரூபாய் வழங்கி இருந்தாலும் 2,010 கோடி ரூபாய் மட்டுமே ஆகி இருக்கும். ஆனால், எப்படி நிதிநிலை அறிக்கையில் அதிகமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதுதான் நாங்கள் முன் வைத்த கேள்வி. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.  இந்த விவகாரத்தில் 25-30 கோடி ரூபாய் அளவில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை'' என தெரிவித்தார்.