Published:Updated:

``அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

பா.ம.க-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கைக்குக் குறையாமல் தங்களுக்கும் வேண்டும் என்று பா.ஜ.க-விடம் தே.மு.தி.க விடாப்படியாக நிற்கிறது.

``அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி
``அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

தேர்தல் புயல் கரையை நெருங்கும் வேளையில், கூட்டணி மேகங்கள் இருளத் தொடங்கிவிட்டன. தி.மு.க கூட்டணிக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்ட வேளையில், தங்கள் பக்கமும் ஒரு வலுவான அணி அமைக்க அ.தி.மு.க முனைப்புக்காட்டி வருகிறது. அ.தி.மு.க-வுடன் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தோடு பி.ஜே.பி பேச்சுவார்த்தை நடத்துகிறது.

 தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சார்பாக, அவரின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க 14 தொகுதிகளில் போட்டியிட்டு, திருப்பூர் தொகுதியில் மட்டும் இரண்டாமிடம் பெற்றது. மற்ற 13 தொகுதிகளிலும் மூன்றாமிடமே அக்கட்சிக்குக் கிடைத்தது. 5.2 சதவிகித வாக்குகளுடன், மூன்றாமிடம் பெற்ற பி.ஜே.பி-க்கு அடுத்த இடத்தை அந்தத் தேர்தலில் தே.மு.தி.க பெற்றது. 

அடுத்து வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் 103 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க-வுக்கு 2.4 சதவிகித வாக்குகளே கிடைத்தன. இந்த வாக்குகளை அடிப்படையாக வைத்துதான், தே.மு.தி.க-வுடன் தொகுதிப் பங்கீட்டை பி.ஜே.பி மேற்கொண்டிருக்கிறது. 

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் அதன் முடிவுகள், தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இரு பெரிய திராவிடக் கட்சிகளுமே நன்கு உணர்ந்துள்ளன. தி.மு.க தலைமையிலான கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி அந்த அணியில் ஏற்கெனவே இணைந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள் என வலுவான அணியாகத் தி.மு.க கூட்டணி பார்க்கப்படுகிறது. இந்த அணியை எதிர்கொள்ள அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியும் வலுவானதாக இருக்க வேண்டும் என பி.ஜே.பி விரும்புகிறது. 

பா.ம.க ஒருபுறம் அ.தி.மு.க-வுடனும், பி.ஜே.பி-யுடனும் பேசிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. கூட்டணி பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை, இரு தரப்புமே வெளிப்படையாகத் தெரிவித்துள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து தே.மு.தி.க, மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். ``2014 தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில் போட்டியிட்ட போது, எங்களுக்கு 14 தொகுதிகளும் பா.ம.க-வுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. பின்னர் நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில் எங்களின் வாக்கு சதவிகிதம் 2.4 ஆக குறைந்தது. அதை அடிப்படையாக வைத்து, மூன்று தொகுதிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பி.ஜே.பி பேச்சு நடத்துகிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளும், விஜயகாந்த் மீதுள்ள பற்றால் விழும் வாக்குகளும் எங்களுக்கு எப்பவும்போல விழும். 2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு சறுக்கல், அவ்வளவுதான். மேலும், தென் தமிழகத்தில் டி.டி.வி.தினகரனை எதிர்கொள்ள பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணியில் எங்களால் மட்டுமே முடியும். இதையும் மேற்கோள்காட்டி, பா.ம.க-வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே எண்ணிக்கையில் தே.மு.தி.க-வுக்கும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளிலேயே அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு, இப்போது மூன்று தொகுதிகளுக்குள் எங்களால் சுருக்கிக்கொள்ள முடியாது’’ என்றனர்.

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ள விஜயகாந்த், வரும் சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் கூட்டணி குறித்தான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.