Published:Updated:

”அசாதாரணச் சூழல் நிலவுகிறது; இடைக்கால நிர்வாகியை அனுப்புங்கள்” உள்துறைக்கு சபாநாயகர் கடிதம்

”அசாதாரணச் சூழல் நிலவுகிறது; இடைக்கால நிர்வாகியை அனுப்புங்கள்” உள்துறைக்கு சபாநாயகர் கடிதம்
”அசாதாரணச் சூழல் நிலவுகிறது; இடைக்கால நிர்வாகியை அனுப்புங்கள்” உள்துறைக்கு சபாநாயகர் கடிதம்

”அசாதாரணச் சூழல் நிலவுகிறது; இடைக்கால நிர்வாகியை அனுப்புங்கள்” உள்துறைக்கு சபாநாயகர் கடிதம்

”மாநிலத்தில் அசாதாரணச் சூழல் நிலவுவதால், உடனே இடைக்கால நிர்வாகியை அனுப்புங்கள்” என்று உள்துறைக்கு புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் எழுதியிருக்கிறார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் வலியுறுத்தலின் அடிப்படையில், கடந்த 11-ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், லைசென்சும் பறிமுதல் செய்யப்படும் என்று டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை நிறுத்தி சோதனை செய்யாமல், அவர்களின் வாகன எண்களைக் குறித்து, நீதிமன்றத்தின் மூலம் சம்மன் அனுப்பி அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி. அதன்படி 11,12 ஆகிய இரு தினங்களில் மட்டும் சுமார் 30,000 பேர்களின் வாகன எண்கள் குறிக்கப்பட்டு, அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டது காவல் துறை.

அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன், கடந்த 12-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். 39 மக்கள் நல கோரிக்கைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, அவரது அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தலைவர்கள் என அனைவருடனும் இரவில் அங்கேயே தரையிலேயே படுத்து உறங்குகின்றார். மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கிரண் பேடி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நேற்று காலை அதிவிரைவுப் படை மற்றும் தொழில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த  வீரர்கள் புதுச்சேரி வந்தடைந்தனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் ஆளுநர் மாளிகையைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

அவர்களின் துணையுடன் ஆளுநர் மாளிகையை விட்டு காரில் வெளியேறிய கிரண் பேடி, நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை சென்றார். அங்கிருந்து டெல்லி செல்லும் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்ட விதிகளை மதிக்கவேண்டிய மாநில முதல்வரே சட்ட விரோதமாகச் செயல்பட்டுவருகிறார். முதல்வர் எனக்கு அனுப்பிய கடிதம் 7-ம் தேதிதான் கிடைத்தது. அதில் இருந்த கோரிக்கைகள் எல்லாமே பழைய கோரிக்கைகள்.

அதில் சில, ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டவை. மேலும், அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க அவர் போதுமான அவகாசத்தை எனக்கு அளிக்கவில்லை. அதேபோல, 13-ம் தேதிக்குள் பதிலளிக்கவில்லை என்றால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிடவும் இல்லை. இந்த விவகாரத்தில், முதல்வர் சட்ட விரோதமாகச் செயல்பட்டதுடன், என்னையும் பணிசெய்ய விடாமல் தடுக்கிறார். அரசியல் காரணங்களுக்காகவே முதல்வர் இந்தச் செயலில் ஈடுபட்டுவருகிறார். ஹெல்மெட் விவகாரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத்தான் செயல்படுத்துகிறேன்” என்றார்.

அதேபோல, “புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஒவ்வொரு மூன்றாவது நாளும் ஒருவர் உயிரிழக்கிறார். ஆனால், ஹெல்மெட் சட்டத்தைப் படிப்படியாக அமல்படுத்தலாம் என்றும், தற்போது அப்படியே விட்டுவிடலாம் என்ற முதல்வர் நாராயணசாமியின் பொதுவான அறிவிப்பால், மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அதோடு, ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. முதல்வரின் அறிவிப்பு காவல் துறையினரையும் இரட்டை மனநிலைக்குத் தள்ளுகிறது. எனவே, தங்கள் துறை மூலம் முதல்வர் நாராயணசாமிக்கு தெளிவான வழிமுறைகளைக் காட்டுங்கள்” என்று கிரண் பேடி மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் அனுப்பிவைத்திருப்பதால், கொதிப்பில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

ஆளுநருக்கு எதிராக முதல்வரே போராட்டத்தில் இறங்கியிருப்பதால், மாநிலம் முழுவதும் பதற்ற நிலை நீடித்துவருகிறது. இதற்கிடையில், டெல்லியில் இருக்கும் கிரண்பேடி, புதுச்சேரி சட்டம் ஒழுங்கு குறித்த சிறப்பு அறிக்கையைத் தாக்கல் செய்ய புதுச்சேரி காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தலைமைச்செயலர் அஸ்வனி குமாரிடம் அறிக்கையைத் தாக்கசெய்தார், சீனியர் எஸ்.பி அபூர்வா குப்தா. இந்தச் சூழலில், ”ஆளுநர் கிரண் பேடி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அரசில், ஆளுநர் கிரண் பேடியின் தலையீடு அதிகமாக இருக்கிறது. தற்போது, மாநிலம் முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவிவருவதால், புதுச்சேரிக்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும்” புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு