Published:Updated:

உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!
பிரீமியம் ஸ்டோரி
உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

Published:Updated:
உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!
பிரீமியம் ஸ்டோரி
உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!
உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

1949 செப்டம்பர் 17 - அண்ணாவின் பேச்சை கேட்பதற்காகத் தொண்டர் களால் நிரம்பி வழிந்தது சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா. மழை வருவதற்கு அறிகுறியாகக் கரு மேகங்கள் சூழ ஆரம்பித்திருந்தன. மணியம்மை திருமணம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே மோதலை உண்டாக்கியிருக்க...  ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சிக்கு ராபின்சன்னில் விதை போட்டார் அண்ணா. ‘`பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் கண்ணீர் விட்டவன் நான் என் போன்றோர் பெரியாரின் போக்கை ஏற்கவில்லை’’ என அண்ணா உரையாற்றிக் கொண்டிருந்தபோது திரண்டிருந்த ‘கண்ணீர்த் துளிகள்’ மீது மழைத் துளிகள் விழுந்தன. ராபின்சன்னில் ஆரம்பித்த தி.மு.க-வின் வரலாறு, இன்றைக்கு சபரீசனில் வந்து நிற்கிறது.

உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸின் ஆட்சிக்கு முடிவுரை எழுதிய அண்ணாவின், திராவிட முன்னேற்றக் கழகம் கருணாநிதி வசம் ஆனது. ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டமாக அவரது மகன் ஸ்டாலின் கைக்கு வந்திருக்கிறது. தி.மு.க-வில் இருந்து பிரிந்து, அ.தி.மு.க.வை உருவாக்கி, ஆட்சியில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். அவர் இறக்கும் வரையில் தி.மு.க-வால் ஆட்சி கட்டிலில் அமர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட பிறகு நடைபெற்ற 1989 சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. ‘விடுதலைப் புலிகள் ஆதரவாளர்’ எனச் சொல்லி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த 1991 சட்டபைத் தேர்தலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட... கருணாநிதி மட்டுமே தேர்தலில் கரையேற முடிந்தது. அ.தி.மு.க. ஆட்சி முடிந்து, 1996 தேர்தலில் ஜெயலலிதா எதிர்ப்பலைகள் எழுந்தபோது கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்த்தார். நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து நடத்தப்பட்ட அந்த தேர்தலிலும் மகத்தான வெற்றி. அது மத்திய தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவைகளில் பங்கு வகிக்க உதவியது.

அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றது தி.மு.க. 13 மாதத்திலேயே மத்தியில் வாஜ்பாய் அரசு கவிழ... 1999 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்தியா தயாரானது. மதச்சார்பின்மை கட்சி, சிறுபான்மையினர் ஆதரவாளர் என முத்திரைக் குத்தப்பட்ட தி.மு.க-வின் முகம் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் மாறியது. பி.ஜே.பி-யோடு கூட்டணி அமைத்தது தி.மு.க. முந்தைய 1998 எம்.பி. தேர்தலில் ஜெயலலிதா பி.ஜே.பி-க்கு ஐந்து தொகுதிகள்தான் கொடுத்தார். கருணாநிதியோ ஆறு தொகுதிகள் அளித்தார். 18 தொகுதிகளில் நின்ற தி.மு.க. 12 இடங்களில் வென்றது. வாஜ்பாய் அமைச்சரவையிலும் ஒட்டிக் கொண்டது.

1996 - 2001 தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்து, ‘தொடரட்டும் இந்த பொற்காலம்’ எனச் சொல்லி, 2001 சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது தி.மு.க. தி.மு.க. அணியில் பி.ஜே.பி., எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., த.மா.கா. ஜனநாயகப் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம், ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தி.மு.க. வெறும் 27 இடங்களில் மட்டும் ஜெயித்தது.

முரசொலி மாறனின் உடல்நிலை மோசமானது. இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். திடீரென்று அவர் இறந்துபோக... அரசு மரியாதையுடன் நடந்த அவரது இறுதிச் சடங்கில் பிரதமர் வாஜ்பாய் பங்கேற்றார். இந்த சம்பிரதாயங்கள் முடியும் வரையில் காத்திருந்து, காங்கிரஸ் அணிக்குத் தாவியது தி.மு.க. அதற்காகத் திரைக்கதை ஒன்றையும் எழுதினார்கள். ‘1998-ல் வாஜ்பாய் அரசு கவிழக் காரணமான அ.தி.மு.க 2001-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், மாநில பி.ஜே.பி-யினர் வெளிப்படையாக ஆதரவு அளித்தனர். பா.ஜ.க-வின் பிற்போக்கு அரசியல் ஆரோக்கியத்துக்குக் கேடாக அமைந்தது. அதனால், மத்திய அமைச்சரவையில் நீடிக்க விரும்பாமல் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் விலகத் தீர்மானிக்கப்பட்டது’ என்றது தி.மு.க-வின் தீர்மானம்.

1980 தேர்தலுக்குப் பிறகு 2004 தேர்தலில்தான் தி.மு.க-வும் காங்கிரஸும் அணி சேர்ந்தன. பா.ம.க. ம.தி.மு.க, இடதுசாரிகள், முஸ்லிம் லீக் கட்சிகளும் சேர்ந்து அமைக்கப்பட்ட 7 கட்சி கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது. 15 இடங்களைக் கைப்பற்றியது  தி.மு.க.  மத்தியில் மன்மோகன் சிங் அமைச்சரவையிலும் இணைந்து கொண்டது தி.மு.க.

2006  சட்டசபைத் தேர்தலிலும் அதே கூட்டணி. ம.தி.மு.க. மட்டுமே போயஸ் கார்டனுக்குத் தாவியது. 2004 எம்.பி. தேர்தலில் மொத்த தொகுதிகளையும் வாரிச் சுருட்டிய அணியால், 2006 சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற முடியவில்லை. தி.மு.க. 96 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. பேராசிரியர் அன்பழகனே துறைமுகம் தொகுதியில் 410 ஓட்டுகள் வித்தியாசத்தில் ‘பரிதாப வெற்றி’ பெற்றார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991 தேர்தலைத் தவிர,  சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. அதிலும் ஓட்டை விழுந்தது. அறுதிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைக்கூட தி.மு.க.வால் கைப்பற்ற முடியாததால்  காங்கிரஸ் தயவில்தான் ஆட்சியை நடத்தியது. ஆட்சியைப் பிடித்தாலும் தி.மு.க-வின் வாக்கு வங்கி சரிந்து போயிருந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டியது தேர்தல் முடிவுகள். காரணம் விஜயகாந்தின் என்ட்ரி.

தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அழகிரி போட்ட ரூட்தான், ‘திருமங்கலம் ஃபார்முலா’வாக பரவியது. இந்த சூத்திரத்தை 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அரங்கேற்றியதாகப் புகார் கிளம்பியது. ‘இலங்கை இறுதி யுத்தத்தில் மறைமுகப் பங்கு வகிக்கும் காங்கிரஸுடன் தி.மு.க. ‘கை’ கோத்திருக்கிறது’ எனக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது சப்பைக்கட்டு கட்டியது தி.மு.க. போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி பந்த் எல்லாம் நடத்தி ஸ்டண்ட் அடித்தது.

உதயசூரியனுக்கு அக்னிப்பரீட்சை!

இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. “உண்ணாவிரதம் விளைவாக மத்திய காங்கிரஸ் அரசு எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது’’ என கருணாநிதி பேட்டி கொடுத்தது எல்லாம் இன்றைக்கு கேலிப் பொருளாக பேசப்படுகிறது. ‘`உங்கள் உண்ணாவிரதத்துக்குப் பிறகும் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாகச் செய்திகள் வந்திருக்கிறதே?’’ எனப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘`மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பார்களே, அதைப் போல எல்லா போர் முனைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் இதுபோல நடக்கக் கூடும்’’ என்றார் கருணாநிதி.

2009 மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்தது. தி.மு.க. 18 இடங்களை வென்றது. மே 19-ம் தேதி முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரன் கொல்லப் பட்டார். அப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவையில் சேர்வதற்கான கோதாவில் இறங்கியிருந்தது தி.மு.க.

இலவச கலர் டி.வி., காஸ் ஸ்டவ், இரண்டு ஏக்கர் நிலம், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில், இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச ஆம்புலன்ஸ் திட்டம், இலவச கான்கிரீட் வீடு திட்டம், குடிநீர் திட்டங்கள் என பல சாதனைகளை நிகழ்த்தியும் 2011 சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தது தி.மு.க. விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு எல்லாம் தாண்டி ஸ்பெக்ட்ரம் ஊழல், நில அபகரிப்புகள், சட்டம் ஒழுங்கு, கட்டப் பஞ்சாயத்து, கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் தலையீடு, குடும்பத் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், வாரிசுகளின் சினிமா தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு, ஆகியவை மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தன. எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துகூட தி.மு.க.வுக்கு கிடைக்காமல் விஜயகாந்துக்குப் போனது. தி.மு.க. வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது.

2011 சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நிவாரணம் தேட முயன்றது தி.மு.க. தேர்தலில் ஜெயிக்க தே.மு.தி.க-வுக்கு தூதுவிட்டார்கள். தனிப்பட்ட முறையில் சில கருத்துக்களை சொல்லி அதைக் கெடுத்தார் அழகிரி. “காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்’’ என்பதில் பிடிவாதமாக இருந்தார் ஸ்டாலின். ‘`நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியோடு இணைந்து தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி கிடைக்கும்’’ எனப் பழுத்த அனுபவசாலியான கருணாநிதியின் அறிவுரை எடுபடவில்லை. காங்கிரஸ் இல்லாத அணி உருவானது. தேர்தலில் படுதோல்வி அடைந்தது தி.மு.க. 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றிலும் ஜெயிக்கவில்லை.

அடுத்து 2016 சட்டசபைத் தேர்தல். தி.மு.க. ஜெயித்து ஆட்சியில் அமரும் என எதிர்பார்த்த வேளையில் அதிலும் மண் விழுந்தது. கூட்டணி தொடங்கி வேட்பாளர் தேர்வு வரையில் அத்தனையும் ஸ்டாலின் கட்டளைப்படியே நடந்தது. அ.தி.மு.க. கூட்டணிக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே இருந்த வாக்கு வித்தியாசம் ஒரு சதவிகிதம்தான். நூலிலையில் வெற்றியைத் தவறவிட்டார் ஸ்டாலின்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத தேர்தல்.  ‘உதய சூரியன்’ சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட நிர்பந்தங்கள் செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின. அதை உண்மையாக்கும் வகையில் ம.தி.மு.க., வி.சி.க. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலா ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. கடைசி நேரத்தில் உள்ளே வந்த பாரிவேந்தருக்கும் ஈஸ்வரனுக்கும் சீட் கொடுத்த ஸ்டாலின், 2014-ம் ஆண்டு முதல் அணியில் இடம்பெற்ற உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுத்த மனிதநேய மக்கள் கட்சிக்கு கதவை மூடினார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக சோனியாவையும் ராகுலையும் சந்திக்க ஸ்டாலின் சென்றபோது சபரீசன் அழைத்து செல்லப்படுகிறார். தேர்தல் வேலைகள் அத்தனையிலும் சபரீசனின் ரோல் இருக்கிறது. இன்னொருபுறம் உதயநிதியின் செயல்பாடு களும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன.

‘ராகுல் பிரதமர்’ என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும், மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகள் இன்னும் ராகுலைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரணியில் அ.தி.மு.க. பல கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்திருக்கிறது. தமிழகத்தில் வீசும் மோடி எதிர்ப்பலையையும் தினகரனின் அ.ம.மு.க, அண்ணா தி.மு.க.வின் வாக்குகளைப் பிரிக்கும் என்ற எதிர் பார்ப்பையும் நம்பிக் களமிறங்குகிறது தி.மு.க.

ஒருவேளை தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று, மத்தியில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் என்ன நடக்கும்? ‘பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க. இணையும்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்துவருகிறார் ஸ்டாலின் என்பதால் எதையும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

முழு அதிகாரம் வாய்ந்த தலைவராக ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எல்லோரையும்விட அதிக எதிர்பார்ப்பில் இருப்பவர் ஸ்டாலினாகத்தான் இருக்கும்.

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - ஓவியம்: ஹாசிப்கான்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism