Published:Updated:

`தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது!'  - தொகுதிப் பங்கீட்டால் கடுகடுத்த முத்தரசன்

``மத்திய பா.ஜ.க ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காகப் போராடும் ஒரு கட்சியின் உணர்வையும் தி.மு.க தலைமை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்."

`தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது!'  - தொகுதிப் பங்கீட்டால் கடுகடுத்த முத்தரசன்
`தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது!'  - தொகுதிப் பங்கீட்டால் கடுகடுத்த முத்தரசன்

`தி.மு.க கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். எந்தக் கட்சிக்கு எத்தனை சீட் என்பது குறித்து தங்கள் விருப்பத்துக்கேற்ப பத்திரிகைகள் எழுதுகின்றன. தொகுதிப் பங்கீட்டைக் கட்சிகளின் தலைவர்கள் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம். இதை மற்றவர்கள் முடிவு செய்யமுடியாது. அதேநேரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தன்மானம் மிக்கது. எதற்காகவும் தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது' - சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், கொந்தளிப்புடன் வெளிப்படுத்திய வார்த்தைகள் இவை. 

சேலம், கோட்டை மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவு நேற்று முன்தினம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 26-வது மாநில மாநாட்டில்தான் இப்படியொரு வார்த்தைகளை அவர் பதிவு செய்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் இவ்வாறு பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

``தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது'' என முத்தரசன் பேசியதன் பின்னணியைப் பற்றி சி.பி.ஐ கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். ``நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை சீட் என்பதைப் பற்றி அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கவில்லை. தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளோடு பேசும்போது, `சி.பி.எம் கட்சிக்கு 2 இடங்களும் சி.பி.ஐ கட்சிக்கு ஓர் இடமும் ஒதுக்கப்பட இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளனர். எங்களை மட்டும் பாரபட்சமாக நடத்துவதாகத்தான் இதைப் பார்க்கிறோம். இந்த சமத்துவமற்ற செயல்பாட்டைத்தான் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுப் பேசினார் முத்தரசன்" என விவரித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், 

``அதேசமயம், சி.பி.எம் கட்சியோடு எங்களை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. ஆனால், அவர்களுக்கு கூடுதலாகவும் எங்களுக்குக் குறைத்துக் கொடுப்பதையும் நியாயமான ஒன்றாக நாங்கள் பார்க்கவில்லை. சொல்லப் போனால், அனைத்திலும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், அகில இந்தியக் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் எதாவது பிரச்னை வந்தால், அதில் அகில இந்தியக் கட்சியின் செயல்பாடு என்பது மிக முக்கியம். ஒரு எம்.பி பதவியில் இருந்தாலும் நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம். எனவே, சீட் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல. பங்கீட்டில் சமத்துவம் இருக்க வேண்டும். 

மத்திய பா.ஜ.க ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காகப் போராடும் ஒரு கட்சியின் உணர்வையும் தி.மு.க தலைமை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சி.பி.எம் கட்சிக்கும் எங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், எங்களை எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் நிலை உருவாகும். மக்கள் நலக் கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தபோது, சி.பி.எம்-மைவிடவும் அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறோம்.

தளி தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தோம். அந்தத் தொகுதியில் வெறும் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றோம். மக்கள் நலக் கூட்டணியில் இரண்டாம் இடம் பிடித்த வரிசையில் நாங்களும் திருமாவளவனும் விஜயகாந்தும் இருக்கிறோம். அதே தேர்தலில் மூன்று தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். கஜா புயல் நிவாரணத்துக்காக 4 மாவட்டங்களில் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தோம். மக்கள் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்திருக்கிறோம். அப்படியிருக்கும்போது, எங்களை ஒதுக்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. சீட் ஒதுக்கீடு போன்ற தகவல்கள் வெளியாகும்போது, அதற்கு எதிராக தி.மு.க தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது" என்கின்றனர் ஆதங்கத்துடன்.