தேர்தல் 2019
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

“சோளிங்கரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீரவசனமாக பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போதே பக்கத்திலிருக்கும் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் நண்பரது வீட்டில் புகுந்து விளையாடியிருக்கிறது வருமானவரித் துறை...” என்றபடி வந்து அமர்ந்த கழுகாரிடம், “துரைமுருகன் விவகாரத்தில், என்னதான் நடக்கிறது?” என்று கேட்டோம்.

“துரைமுருகனின் காட்பாடி, காந்திநகர் வீட்டில், மார்ச் 29-ம் தேதி இரவு 10 மணிக்குப் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தொடர்ந்து அவருடைய மகனுக்குச் சொந்தமான கல்லூரிகள் உட்பட மூன்று இடங்களில் மார்ச் 30-ம் தேதி முழுவதும் சோதனை நடத்தினார்கள். வீட்டிலிருந்து இரண்டு பைகளில் வெறும் ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறினார்கள். பின்னர், வருமான வரித்துறைத் தரப்பிலிருந்து ‘சில ஆவணங்களும், பத்து லட்சம் ரூபாய் பணமும் மட்டும் கைப்பற்றப்பட்டது’ என்று தகவல் வெளியானது.”

“தி.மு.க-வுக்கு இந்த ரெய்டு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதுபோலவே?”

“ஆமாம். வேலூரில் கதிர் ஆனந்துக்கு எதிராகப் போட்டியிடும் ஏ.சி சண்முகம் வலுவான நபர். ‘சண்முகம் வீட்டில் எந்த ரெய்டும் நடத்தாமல், எதற்காக தி.மு.க-வை மட்டும் குறிவைக்கவேண்டும்’ என்று தி.மு.க தரப்பு உஷ்ணமாகிவிட்டது. உடனடியாக, அறிவாலயத்தில் சட்ட ஆலோசனையும் நடைபெற்றது. அதன்படி வருமானவரித் துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.”

“வருமான வரித்துறை எதற்காக வேலூரைக் குறிவைத்ததாம்?”

“வருமானவரித் துறையிடம் கேட்டால், ‘தகவல் இல்லாமலா நாங்கள் ரெய்டுக்குப் போவோம்’ என்கிறார்கள். துரைமுருகன் மட்டுமல்ல... நிறைய நபர்களை நாங்கள் கண்காணித்துவருகிறோம்’ என்றும் சொல்கிறார்கள். ‘துரைமுருகன் மகன் களத்தில் நிற்பதில், அதிருப்தியில் இருந்த தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவரே வருமான வரித்துறையிடம் போட்டுக்கொடுத்து விட்டார்’ என்கிற பேச்சு துரைமுருகன் முகாமில் எழுந்துள்ளது. அந்தச் சந்தேகம் அடுத்த இரண்டு நாள்களில் வலுவடைந்தும்விட்டது.”

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

“ஓ! துரைமுருகன் நண்பரின் இடங்களில் நடந்த ரெய்டைச் சொல்கிறீரா?”

“வேலூர் அருகே பள்ளிக்குளம் பகுதியில் தி.மு.க-வின் பகுதிச் செயலாளரும் துரைமுருகனின் நண்பருமான சீனிவாசனின் வீடு உள்ளது.  அவரது வீட்டில் சோதனைநடத்துவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏப்ரல் 1-ம் தேதி காலை அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான சிமென்ட் குடோனுக்குள் ஒரு டீம் நுழைந்துள்ளது. குடோனிலிருந்த பைகள், சாக்குகளில் பண்டல், பண்டலாகப் பணம் இருந்துள்ளது. பண்டல்களில் சட்டமன்றத் தொகுதிவாரியாக, வார்டு வாரியாக எண்களும் எழுதப்பட்டிருந்தன.”

“வேறு எங்கெல்லாம் சோதனை நடத்தப் பட்டதாம்?”

“துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலியின் வீடு கல்புதூரில் உள்ளது. அங்கிருந்தும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாம். எவ்வளவு என்பதுபற்றி வருமானவரித் துறையினர் வாய்திறக்க மறுத்து விட்டார்கள்.”

“சோதனை நடக்கும்போதே புகைப்படங்கள், வீடியோ வெளியாகிவிட்டதே?”

“அதுதான் தி.மு.க தரப்பைக் கோபம் அடையச் செய்துள்ளது. அவை வருமானவரித் துறை தரப்பிலிருந்தே கசியவிடப்பட்ட தாகச் சொல்கிறார்கள். வருமான வரித்துறை தரப்பினரோ, ‘இன்று துரைமுருகன். நாளையிலிருந்து இன்னும் நிறையப் பேருக்கு ரெய்டு இருக்கிறது’ என்று நமட்டுச் சிரிப்புச் சிரிக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

“ஓஹோ!”

“தி.மு.க வேட்பாளர்களில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கரன்சிக்குப் பஞ்சம் இல்லாதவர்கள். அவர்களைக் குறிவைக்கும்படி டெல்லியிலிருந்து உத்தரவு வந்துள்ளது என்கிறார்கள். அதில் முதல் விக்கெட் துரைமுருகன். தேர்தலுக்குள் தி.மு.க-வில் இன்னும் சிலருக்கு இதேபோல் நெருக்கடியை ஏற்படுத்தும் திட்டமும் உள்ளதாம். குறிப்பாக டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய தலைவர்கள் போட்டியிடும் இடங்களில் வருமான வரித்துறை களத்தில் இறங்கியுள்ளதாம். ஜெகத்ரட்சகன் விஷயத்தில், ‘அமலாக்கப்பிரிவை வைத்து ஏதேனும் செய்ய முடியுமா’ என்று திட்டமிடு கிறார்கள். அதேபோல், ‘ஆ.ராசா மூலம் தி.மு.க வேட்பாளர்களுக்குப் பண விநியோகம் நடக்கலாம்’ என்று அவரையும் கண்காணித்து வருகிறார்கள். தயாநிதி மாறன் நிலையும் அதுதானாம். ‘முக்கியப் புள்ளிகளுக்கு நெருக்க மானவர்கள் யார், எங்கிருந்து பணம் செல்கிறது. யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள், இவர்கள் போட்டியிடும் தொகுதியில் உள்ள தி.மு.க ஆதரவுத் தொழில் அதிபர்கள் யார்’ என்ற விவரங்களை எல்லாம் விசாரித்துவருகிறார்கள். ‘தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதுபோன்று ரெய்டு நடத்தினால் தி.மு.க தரப்பினர் துவண்டுவிடுவார்கள்’ என்று கணக்குப்போடுகிறது டெல்லி தரப்பு.”

“மத்திய அரசின் கண்ணசைவுடன்தான் இதெல்லாம் நடக்கிறதா?”

“அவர்கள் ஆசி இல்லாமல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தமாட்டார்கள் என்று தி.மு.க-வினர் நம்புகிறார்கள். அதேசமயம் டெல்லி மேலிடம் நினைத்தால், இப்படியான ரெய்டுகளை எப்படியும் மாற்ற முடியும் என்கிற அளவுக்கு இன்னும் சில சம்பவங்களும் நடந்துள்ளன. அவற்றையும் கேளும்... தி.மு.க-வினருக்குக் குறிவைத்த வருமானவரித் துறையினர், இன்னொரு இடத்திலும் ரெய்டு நடத்தினர். ஆனால், அங்கு நடந்ததே வேறு.”

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

“சொல்லும்... சொல்லும்!”

“மூத்த அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் ஒப்பந்ததாரர் சபேசன் நடராஜன். இவரது வீட்டில் மார்ச் 31-ம் தேதியன்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சுமார் பத்து மணி நேரத்துக்கும் மேலாக, அவரது வீட்டில் ரெய்டு நடந்துகொண்டிருந்தது. அப்போது அதிகாரிகளுக்கு ஒரு போன் வந்துள்ளது. அத்துடன் சோதனையை நிறுத்தி விட்டு, அதிகாரிகள் கிளம்பிவிட்டார்கள்.”

“அதிர்ச்சியாக இருக்கிறதே?”

“200 கோடி பணத்தைக் குறிவைத்து ரெய்டு நடத்தச் சென்ற அதிகாரிகள், வெறும் பதினாறு கோடி ரூபாய் மட்டுமே சிக்கியதாகத் தகவல் தெரிவித்துள்ளார்கள். அதேபோல், சபேசன் கொடுத்தத் தகவலின் அடிப்படையில், அவருடைய நண்பர் வீட்டில் நடைபெற்ற சோதனையில், 77 லட்சம் ரூபாய் கைப்பற்றப் பட்டது. ஆனால், இது குறித்தத் தகவல்களை வருமானவரித் துறை பெரிதுபடுத்தவில்லை. இதுதவிர முக்கிய அமைச்சர் ஒருவரின் தரப்பிலிருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் சபேசன் தரப்புக்குச் சுமார் 200 கோடி ரூபாய் வங்கிப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் ஆதாரம் கிடைத்தும் வருமானவரித் துறை அமைதியாக இருந்துவிட்டது என்கிறார்கள். உடுமலை - தாராபுரம் சாலையில் உள்ள காரத்தொழுவு கிராமத்தில் ஒரு தோப்பில் 25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாம். அப்போதும் போன் வரவே... பாதியில் பின்வாங்கியதாம் வருமானவரித் துறை. இதெல்லாம் தெரிந்துதான் தி.மு.க தரப்பு ஏகத்துக்கு டென்ஷன் ஆகிவிட்டது.”

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

“கழகங்களில் உள்ளடி வேலைகள் உச்சத்தில் இருக்கிறதுபோல?”

“ஆமாம். எதிர்க்கட்சி வேட்பாளர்களைச் சமாளிப்பதைவிட உட்கட்சி பூசலைச் சமாளிப்பதுதான் வேட்பாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இது தி.மு.க., அ.தி.மு.க இரு கூட்டணிகளிலும் நடக்கிறது. மத்தியச் சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறனுக்கு எதிராக உள்ளடி வேலை செய்கிறார்கள் கீழ்மட்ட நிர்வாகிகள் சிலர். ‘தென் சென்னையில் போட்டியிடும் ஜெயவர்தனுக்கு வேலை செய்யுங்கள்’ என்று சென்னை முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை அமைச்சர் ஜெயக்குமார் மடைமாற்றிவிட்டதால், மத்தியச் சென்னையில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சாம் பால் திணறிவருகிறார். அதேபோல், சேலம்  தி.மு.க வேட்பாளர் பார்த்திபனுக்கு, வீரபாண்டியார் தரப்பு  ஒத்துழைக்க மறுக்கிறதாம்.”

“ம்...”

“சுதீஷ் தரப்பில், ‘கள்ளக்குறிச்சியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை பொன்முடி தரப்பு சரிக்கட்டிவிட்டது’ என்று புலம்பல் கேட்கிறது. வேலூரில் கதிர் ஆனந்த், களத்தில் நின்றது முதலே அங்கிருக்கும் முதலியார் சமூகத்தைச்சேர்ந்த தி.மு.க-வினர் கடுப்பில் இருக்கிறார்கள். தர்மபுரியில் அன்புமணிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ள செந்தில்குமார் கரைசேருவது கடினம் என்கிறார்கள். அதற்குக் காரணம் தலைமைக்கு நெருக்கமான தி.மு.க புள்ளி ஒருவர் உள்ளடி வேலை பார்ப்பதுதான் என்கிறார்கள். அந்த மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தலிலும் இதே நிலைதான் உள்ளது.”

மிஸ்டர் கழுகு: இன்று துரைமுருகன்... நாளை யார்? - பீதியில் தி.மு.க புள்ளிகள்...

“அ.தி.மு.க தரப்பில்?”

“தம்பிதுரை கரூரில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் ஒரு டீம் வலுவாக வேலைசெய்துவருகிறது. கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால், மத்திய அமைச்சராகிவிடுவார் என்று அதே கட்சியைச் சேர்ந்த ஒரு புள்ளி உள்ளடி வேலை செய்கிறாராம். சிவகங்கையில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக அந்தக் கட்சியில் உள்ள முக்குலத்தோர் சமூக நிர்வாகிகள் சத்தமில்லாமல் குழிதோண்டிவருகிறார்கள். இதனால், கடைசிநேரத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்” என்ற கழுகார் சிறகைவிரித்துப் பறந்தார்!

படங்கள்: தி.விஜய், கே.ஜெரோம் ச.வெங்கடேசன், தே.சிலம்பரசன்

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போகுமா?

காட்பாடி ரெய்டை முன்வைத்து, ‘இடைத்தேர்தல் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் தள்ளிப்போகுமா?’ என்கிற பேச்சும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், ஆர்.கே.நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்தே, அங்கெல்லாம் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதேமாதிரியான சம்பவம் காட்பாடியில் நடந்திருக்கிறது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
   
வேலூர் மாவட்டத்தில், தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மூன்று அல்லது இரண்டு தொகுதிகளில் தேர்தலைத் தள்ளிப்போட்டால், அ.தி.மு.க-வுக்கு லாபம் என்று கணக்குப்போடுகிறார்களாம். “தேர்தல் தள்ளிப்போகுமா?” என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, “தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.