Published:Updated:

இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’

இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’
பிரீமியம் ஸ்டோரி
News
இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’

மூத்த மகன் பொதுப்பணித்துறை அமைச்சர் - இளைய மகன் முதலமைச்சர்... பெரிய பேரனுக்கு ஹாசன்... - சின்னப் பேரனுக்கு மாண்டியா! -

இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’

தேவகவுடா குடும்பத்தின் அதிரிபுதிரி வாரிசு அரசியலால் சூடுபிடித்திருக்கிறது கர்நாடகத்தின் தேர்தல் களம். ஏற்கெனவே முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிகளில் இருக்கும் தன் இரு மகன்களின் குஸ்தி சண்டையால் மண்டைகாய்ந்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடா, பிரச்னையை சமாளிக்க, தன் இரு பேரன்களுக்காக இரு நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். இது அவரது சொந்தக் கட்சியில் மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்குள்ளும் கடும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது!

கர்நாடகத்தின் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதி, தேவகவுடாவின் கோட்டை. 1996-ல் வாஜ்பாய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 16 நாள்களில் ஆட்சியைப் பறிகொடுத்தப் பிறகு, கர்நாடக முதல்வராக இருந்த தேவகவுடாவுக்கு அடித்தது ஜாக்பாட். காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியாவின் 11-வது பிரதமராக அரியணை ஏறினார் தேவகவுடா. அவர் பிரதமராகும் முன்பே 1991-ல் முதல்முறையாக ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் பெற்ற வெற்றி, டெல்லி அரசியலை அவருக்குப் பழக்கப்படுத்தியிருந்தது.

இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே காங்கிரஸ் கட்சி, தனது ஆதரவை விலக்கிக்கொள்ள, தேவகவுடாவின் ஆட்சி கவிழ்ந்து, ஐ.கே.குஜ்ரால் பிரதமரானார். இதன்பிறகு பலமுறை பிரதமராகும் எண்ணம் தேவகவுடாவின் மனதுக்குள் நடனம் ஆடினாலும், வாய்ப்புகள்தான் தாளம் போடவில்லை. ஒக்கலிகா சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியை, கடந்த 15 ஆண்டுகளாக தேவகவுடா தக்கவைத்துள்ளார். அதைத்தான் பேரனுக்காக தேவகவுடா இப்போது விட்டுக்கொடுத்துள்ளார்.

தேவகவுடாவின் மூத்த மகன் ரேவன்னா, கர்நாடகா அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். இளைய மகன் குமாரசாமி முதலமைச்சராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான ‘ஈகோ’ யுத்தம் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குள் கொழுந்துவிட்டு எரிகிறது. நிலைமையைச் சமாளிக்க பெரிய மகன் வழிப்பேரன் பிரஜ்வல் ரேவன்னாவுக்குத் தன் ஹாசன் தொகுதியையும், சின்ன மகன்வழி பேரன் நிகில் குமாரசாமிக்கு மாண்டியா தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் தேவகவுடா. இளைய மகன் முதல்வர், மூத்த மகன் பொதுப்பணித்துறை அமைச்சர், பேரன்கள் இருவரும் எம்.பி வேட்பாளர்கள்... என மொத்தக் குடும்பமும் வாரிசு அரசியலில் இறங்கியிருப்பது, அவரது கட்சிக்குள் மட்டுமல்லாது, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’

“அவரு குடும்பமே எல்லாத்தையும் பேக்கோ? நாவு ஏனு வேடிக்க மாடுபேக்கா?” (அவர் குடும்பமே எல்லாத்தையும் ஆளணுமா? நாங்க என்ன வேடிக்கை பார்க்கிறதா?) என்று கொந்தளிக்கிறார்கள் கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள். அதேசமயம் பேரன்களுக்கே எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்துவிட்டதால், போட்டியிட நல்ல தொகுதி கிடைக்காமல் விழிபிதுங்கியுள்ளார் தேவகவுடா. பெங்களூரு வடக்குத் தொகுதியை முதலில் குறிவைத்துப் பார்த்தார். ஆனால், அத்தொகுதியில் முன்னாள் பி.ஜே.பி முதல்வர் சதானந்த கவுடா போட்டியிடுவதால், நாகமங்களா மடம் தலையிட்டு, ‘ஒக்கலிகா சமூகத் தலைவர்களிடம் போட்டி வேண்டாம்’ என சமாதானம் செய்து, தேவகவுடாவைத் திருப்பி அனுப்பிவிட்டது.

இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’

இரண்டாவதாக மைசூரு தொகுதியை காங்கிரஸ் கட்சியிடம் கேட்டுள்ளார். இத்தொகுதி முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமைய்யாவின் கோட்டை என்பதால், அவர் விட்டுத்தரவில்லை. ஒருவழியாகத் தும்கூர் தொகுதி தேவகவுடாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தொகுதியின் நடப்பு காங்கிரஸ் எம்.பி-யான முட்டஹனுமே கவுடாவும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ராஜன்னாவும் தேவகவுடா நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர். அவர்களை சமாதானம்செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி தவிப்பதால், இத்தொகுதியும் பறிபோய்விடுமோ என பீதியில் உறைந்துள்ளார் தேவகவுடா.

இது தேவகவுடா அரசியல் ‘தாண்டியா!’

இதனிடையே, மாண்டியா தொகுதியில் மூன்று முறை ஜெயித்த ரஜினியின் நெருங்கிய நண்பரும், மறைந்த காங்கிரஸ் தலைவருமான அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக இத்தொகுதியில் களமிறங்குகிறார். கர்நாடக சினிமா உலகத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த அம்பரீஷுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது. மாண்டியா தொகுதியில் தனது இளைய பேரன் நிகில் குமாரசாமி போட்டியிடுவதால், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மூலமாக போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு சுமலதாவுக்கு தேவகவுடா தூது விட்டுள்ளார். அதை அவர் ஏற்காததோடு, எடியூரப்பா மூலமாக பி.ஜே.பி-யின் ஆதரவையும் திரட்டிவிட்டாராம். தேவகவுடா குடும்பத்தின்மீது கோபத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களும், கர்நாடகா திரையுலகமும் சுமலதாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதால், வெலவெலத்துப் போயிருக்கிறது தேவகவுடா குடும்பம்.

நிலைமை இப்படியே சென்றால், மொத்தமாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கரை சேராது என்கிறார்கள் கர்நாடகத்தின் அரசியல் விமர்சகர்கள்!

கட்டுரை, படங்கள்: சு.குமரேசன்