Published:Updated:

`பிளான் பியூஷ் கோயல்..!’ தமிழக அரசியலுக்கான பி.ஜே.பி-யின் ஆக்‌ஷன்

`பிளான் பியூஷ் கோயல்..!’ தமிழக அரசியலுக்கான பி.ஜே.பி-யின் ஆக்‌ஷன்
`பிளான் பியூஷ் கோயல்..!’ தமிழக அரசியலுக்கான பி.ஜே.பி-யின் ஆக்‌ஷன்

`பிளான் பியூஷ் கோயல்..!’ தமிழக அரசியலுக்கான பி.ஜே.பி-யின் ஆக்‌ஷன்

`ஒரு மாதமாக இழுத்தடித்த பேச்சுவார்த்தை பியூஷ் கோயல் வந்ததும் ஓர் இரவில் முடிந்துவிட்டது' என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள் பி.ஜே.பி தரப்பினர். ஆம்! மத்திய அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலின் வருகையும் கூட்டணி உத்தரவாதமுமே பி.ஜே.பி தரப்பினர் உற்சாகத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நவம்பர் மாதம் டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்த பேச்சு எழுந்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக, தமிழக ஆட்சியே தங்கள் தயவில் நடப்பதால் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அ.தி.மு.க-வுடன்தான் என்பதில் பிரதமர் தரப்பு உறுதியாக இருந்தது. அதை ஆமோதிக்கும் விதமாகவே, பிரதமருடனான சந்திப்பின்போது “நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை” என்று புன்னகையோடு எடப்பாடி சொல்ல, அதை இன்முகத்தோடு மோடியும் கேட்டுக்கொண்டார். 

அதற்குப் பிறகுதான், அ.தி.மு.க-வில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, பி.ஜே.பி-க்கு எதிராகக் கடும் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் “பி.ஜே.பி-யை தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க-வுக்கு இல்லை” என்று சொல்ல, கூட்டணி உடன்பாட்டில் உரசல் ஏற்பட ஆரம்பித்தது. அதற்குத் தோதாக, பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியிலும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பதற்கு ஒருபக்கம் எதிர்ப்பு எழுந்தது. இது எடப்பாடி தரப்பை யோசிக்க வைத்தது. ஆனால், எடப்பாடிக்கு வலதும் இடதுமாக இருக்கும் வேலுமணி, தங்கமணி இருவரும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், `முதலில் கூட்டணி வேண்டாம்' என்ற மனநிலையில் இருந்தவர், திடீர் என மனமாற்றம் அடைந்து கூட்டணி விஷயத்தில் அவரும் உறுதியாகச் சம்மதித்துவிட்டார். இந்நிலையில் டெல்லி பி.ஜே.பி தரப்பு தொடர்ந்து கூட்டணிப் பேச்சுகுறித்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தது. மேலும், வேறு சில சேனல்களிலும் அ.தி.மு.க-வுடன் 'சீட் ஷேரிங்' குறித்துப் பேசினார்கள். முதலில் இரட்டை இலக்கத் தொகுதிகளைக் குறிவைத்த பி.ஜே.பி, ஒருகட்டத்தில் அ.தி.மு.க-தரப்பு தண்ணிகாட்டியதால் கூட்டணி அமைந்தால் போதும் என்று ஒற்றை இலக்க தொகுதிக்குக்கூட ஓ.கே சொல்லிவிட்டது.

பி.ஜே.பி - அ.தி.மு.க இரண்டு கட்சிகள் மட்டும் களத்தில் நின்றால் வெற்றிவாய்ப்பு மிகவும் குறைவு என்பதை உணர்ந்த பி.ஜே.பி, சாதி ரீதியாக வலுவான அமைப்புகளாக இருக்கும் பா.ம.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து வலுவான கூட்டணிக்கு அடிபோட்டது. 

அதற்கான அசைன்மென்ட் முதலில் பொன்னார் வசம் ஒப்படைக்கபட்டது. பா.ம.க தரப்பு ஒரே நேரத்தில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியதால் குழப்பத்தில் இருந்தார் பொன்னார். தி.மு.க பக்கம் பா.ம.க போனால் தி.மு.க கூட்டணி வலுவடைந்துவிடும் என்று கருதி, அதைத் தடுக்கும் வேலையை பி.ஜே.பி தரப்பு செய்ய ஆரம்பித்தது. தைலாபுரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸை பொன்னார் சந்திக்க பலமுறை முயன்றும், அந்த வாய்ப்பு கைகூடவில்லை. இந்நிலையில்தான் அ.தி.மு.க தரப்பே, கூட்டணி விஷயத்தை ஒழுங்குபடுத்த பியூஷ் கோயலைக் கொண்டுவரும் ஆலோசனையை பி.ஜே.பி மேலிடத்துக்குச் சொல்லியுள்ளார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யும் பணி, பியூஷ் கோயலிடம் இருந்ததால் அவர் வருகை தள்ளிப்போனது. ஆனால், தொலைபேசியில் தொடர்புகொண்டே அ.தி.மு.க-வை முதலில் சரிகட்டினார். அதன் பிறகு பா.ம.க தலைவர் ராமதாஸ் தொடர்புக்குக் கோயல் சென்றுள்ளார். முதலில் பிகு செய்த ராமதாஸ் பிறகு கோயல் சொன்ன பிளானுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்தக் கூட்டணி பேரங்கள் ஒரு வடிவத்துக்கு வந்த பிறகே, தமிழக பயணத்திட்டத்தை அதிரடியாக அறிவித்தார் கோயல். வியாழன் இரவு டெல்லியிலிருந்து வந்த கோயல், முதல்வர் வீட்டில் வைத்தே பேச்சுவார்த்தை நடத்த முடிவானது. ஆனால், எடப்பாடியோ “அவரிடம் சீட் விஷயம், தொகுதி விஷயங்கள் எல்லாவற்றையும் நீங்கள் பேசி ஃபைனல் செய்துவிட்டு, இறுதியாக என்னிடம் அழைத்துவாருங்கள்” என வேலுமணி, தங்கமணியிடம் சொல்லியுள்ளார். அதன் பிறகுதான், சென்னையில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் சந்திப்பை நடத்த முடிவானது. பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்தினர், டெல்லி பி.ஜே.பி-யிலும் நல்ல தொடர்பில் உள்ளதால் அவர்கள் வீடு சந்திப்புக்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து முதல் ஆறு சீட் பி.ஜே.பி தரப்புக்கு வழங்க முடிவாகியுள்ளது. அதைத்தாண்டித் தேர்தல் செலவுகள் பற்றியும் பேசப்பட்டுள்ளதாம். இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த உடனே டெல்லி பறந்துவிட்டார் கோயல். 

கோயல் மீண்டும் வெள்ளி இரவு அல்லது சனிக்கிழமை அன்று தமிழகம் வர உள்ளார். அப்போது பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸையும் அமெரிக்காவிலிருந்து திரும்பும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தையும் சந்தித்துக் கூட்டணிப்  பேச்சுவார்த்தையை இறுதி செய்ய உள்ளார். புதிய தமிழகம், ஐ.ஜே.கே கட்சிகள் எப்போது அழைத்தாலும் ஓடிவரத் தயாராக இருப்பதால் அந்தக் கட்சிகளை 'கூட்டணி அறிவிப்பு நாள் அன்று அழைத்துக்கொள்ளலாம்' என பி.ஜே.பி தரப்பு நினைக்கிறது. பியூஷ் கோயல் சென்னை வந்து பேசிய பின்னரே, கூட்டணி இழுபறிக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. மோடியும் தமிழகக் கட்சிகளுடனான கூட்டணி விஷயத்தில் பியூஷ் கோயல் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதற்கு ஒப்புதல் கொடுக்கத் தயாராக இருக்கிறாராம்.

அ.தி.மு.க அமைச்சர்கள் போட்டுக்கொடுத்த பிளான், பியூஷ் கோயல் வந்து சென்ற பின்னர், இப்போது வொர்க்கவுட்டாகியிருப்பதில் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம் இரண்டு மணியான அமைச்சர்கள். 

அடுத்த கட்டுரைக்கு