Published:Updated:

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

Published:Updated:
“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

பானை சின்னத்துக்கு வாக்குக் கேட்டு பிரசாரத்தில் பிஸியாக இருக்கும் திருமாவளவனைச் சந்தித்தேன்.

“நடைபெற இருக்கின்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் முதன்மை முழக்கம் எது?”

“ ‘வேண்டாம் மோடி’ என்பதைத்தான் அடிப்படை முழக்கமாக வைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறோம். கடந்த ஐந்தாண்டுகளில். ஜனநாயகச் சிந்தனையாளர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்திருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம்,  ஜி,எஸ்.டி போன்ற தடாலடி நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதரத்தை அதலபாதாளத்தில் சரியக்கூடிய அளவுக்கு மோடி அரசு சீர்குலைத்தது. பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது என்கிற பிரசாரத்தை முன்னெடுப்போம்”

“உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்திக்க விசிகவுக்கு ஒரு தயக்கம் உண்டு. ஆனால் எதன் அடிப்படையில் விழுப்புரத்தில் அதை ஏற்றுக் கொண்டீர்கள்?”

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

“2006 லிருந்து 2016 வரை நடைபெற்ற அத்தனைப் பொதுத் தேர்தல்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிட்டு வந்திருக்கிறது. ஆனால் வெற்றி வாய்ப்பை பெற இயலவில்லை. ஆக ஐந்து பொதுத் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் இந்தப் பொதுத் தேர்தலிலும் இரண்டு தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடவே முடிவெடுத்து தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம் செய்தோம். தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டும் காலதாமதம் செய்தது. அதற்கு உண்மையான காரணம் தெரியவில்லை. மிகவும் காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிற நிலையில் விழுப்புரம் தொகுதியை அதனுடைய களநிலவரங்களை அடிப்படையாக வைத்து அங்கே தோழமைக் கட்சியான திமுகவின் சின்னத்தில் போட்டியிடுகிற முடிவுக்கு வந்தோம். சிதம்பரம் தொகுதியில் நான் ஐந்தாவது முறையாக வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.  2009ல் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. இப்படிப்பல சாதகமான அம்சம் அங்கே இருப்பதால் நான் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிற வரையில் காத்திருக்கலாம் என்கிற அடிப்படையில் சிதம்பரத்தில் தனிச்சின்னத்திலேயே போட்டியிடுவதில் உறுதியாக இருந்தோம். விழுப்புரம் தொகுதியில் அப்படியொரு சோதனை வேண்டாம் என்கிற ராஜதந்திர முடிவின் அடிப்படையில்தான் அங்கே விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்”

“2016 தேர்தலை வைத்து சொல்வதென்றால் விடுதலை சிறுத்தைகளின் வாக்கு சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறதே?”

“போட்டியிடுகிற தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் வாக்கு சதவீதம் கணக்கிடப்படுகிறது. நாங்கள் இதுவரை போட்டியிட்ட நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரும்பாலும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிற வாய்ப்பைப் பெற்றிருகிறோம். இதுவரை  தனித்துப் போட்டியிட்டு எங்கள் வாக்கு வங்கியை நாங்கள் நிறுவிக் காட்டவில்லை., இரண்டு நாடாளுமன்றத் தொகுதியில் நாங்கள் பெறுகிற வாக்குகளை வைத்துதான் எங்கள் வாக்கு வங்கி சதவீதமும் கணக்கிடப்படுகிறது.

அதேபோல, சட்டமன்றத் தேர்தல்களிலும் நாங்கள் பத்து தொகுதிகள் என்கிற அளவில்தான் இதுவரை கூட்டணியில் போட்டியிட்டு இருக்கிறோம். ஒரேயொரு முறை மக்கள் நலக்கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிடுகிற வாய்ப்பைப் பெற்றோம். ஆகவே, மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையுள்ள தொகுதிகளில் போட்டியிடுவதால் எங்கள் வாக்கு வங்கியின் சதவீதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறதென்பது உண்மைதான். ஆனால், போட்டியிடாத மற்றத் தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்று பொருளாகாது. 234 தொகுதிகளிலும் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக கிளைகளைக் கொண்டிருக்கிற கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. உரிய காலம் வரும்போது எங்கள் வாக்கு வங்கியின் வலிமை என்ன என்பது வெளிப்படும்”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

“இனிமேல் சாதியை முன்னிறுத்த மாட்டோம் என்று முந்தைய தேர்தலில் பா.ம.க சொன்னது. இன்னும் அவர்கள் அதே நிலையில் இருப்பதாக நம்புகிறீர்களா?”

“பா.ம.க பேசுகிற எந்தக் கருத்தையும் அது உறுதியானது, இறுதியானது என நாம் நம்ப முடியாது. பாமகவின் மீதும் அதன் நிறுவனர் மீதும் மக்கள் நம்பகத்தன்மையை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அது சமீபத்தில் வலுப்பட்டிருக்கிறது.”

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள அளவுக்கு, தென் மாவட்டங்களில் போதிய செல்வாக்கு இல்லையே?”

“இது தவறான கருத்து. தமிழகம் தழுவிய எல்லா மாவட்டங்களிலும் வலுவாக இருக்கிற கட்சி விடுதலைச்சிறுத்தைகள். மறுசீரமைப்பு நடவடிக்கையாக பத்தாண்டுகாலம் கிராமங்களுக்குப் பயணித்தோம். விளைவாக இன்று, அனைத்துக் கிராமங்களிலும் கிளைகள் கொண்ட ஒரு கட்சியாக நாங்கள் வலுப்பட்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, ஐந்தாண்டுகளுக்கு மேலாக ஆந்திராவில் வேலை செய்துக் கொண்டிருக்கிறோம். பத்தாண்டுகளுக்கு மேலாக கர்நாடகாவில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். அதேபோல கேரளாவிலும் குறிப்பாக இடுக்கி மாவட்டம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறோம். எங்கள் கட்சியின் சார்பாக மூணாறில் புரட்சியாளர் அம்பேத்கரின் வெண்கலத் திருவுருவச் சிலை நிறுவியிருக்கிறோம். அங்கே பல மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். கர்நாடகாவில் தலித் மக்களுக்கு வன்கொடுமை நடக்கிறபோதெல்லாம் எதிர்ப்புப் பேரணியும், கண்டனப் பொதுக்கூட்டமும் நடத்தியிருக்கிறோம். இந்த நிலையில்தான் முதன்முதலாக நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடாகவில் போட்டியிட இருக்கிறோம்.

ஆந்திராவில் ஐந்தாண்டுகால உழைப்பிற்குப் பிறகு அங்குள்ள மண்ணின் மைந்தர்களே தெலுங்குப் பேசக்கூடிய தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டிருக்கக்கூடியவர்களே விடுதலைச் சிறுத்தைக் கட்சியை பெரிய அமைப்பாக வடிவமைத்து இருக்கிறார்கள். அவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள். அதனடிப்படையில், தற்போது அங்குள்ள மூன்று தோழமைக் கட்சிகளுடன் இணைந்து, அங்கே ஒரு கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 34 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. விசிக, தென்னிந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற கட்சியாகப் பரிமளிக்கும் நாள் வெகு சமீபத்தில் இருக்கிறது”

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் சென்னையிலுள்ள பூர்விகக்குடிகள் அவர்கள் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பிரதானமாகக் கொண்டு செயல்படும் விசிக உட்பட எந்தக் கட்சிகளும் அம்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே?”

“மக்கள் வெளியேற்றப்படும்போது எல்லா இடங்களிலும் உடனடியாகப் போய் நின்ற கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. குறிப்பாக நானே பல இடங்களில் போய் நின்றிருக்கிறேன். ஆயிரம்விளக்குப் பகுதியில் அப்பலோ மருத்துவமனை அருகே இருந்த குடியிருப்புகளை அகற்றியபோது மூன்று முறை அங்கே சென்று அதைத் தடுத்திருக்கிறேன். அங்குள்ள மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியிருக்கிறோம். சமீபத்தில்கூட புளியந்தோப்பு பகுதியில் நூற்றிற்கும் மேற்பட்ட குடிசைகளை திடீரென்று அப்புறப்படுத்தி அம்மக்களை வெளியேற்றியபோது நான் அடிக்கடி அங்கே சென்று ஆறுதல் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதிலே உள்ள சிக்கல்களை களைந்திருக்கிறேன். இது தொடர்பாக அம்மக்களுக்கு தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டுவேன்.”

“விசிக தலித்துகளுக்கான கட்சி எனச் சொல்வதில் தற்போது உங்களுக்கே ஒரு தயக்கம் இருப்பது போலுள்ளதே?”

“விசிக தலித்துகளுக்கான கட்சி என்பதை நான் பிரகடனப்படுத்த வேண்டியதே இல்லை. மற்றவர்களே அதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது நான் ஏன் அதை தனியாகக் குறிப்பிட வேண்டும். நாங்கள் மைய நீரோட்டத்தில் இருக்கிற அனைத்து தரப்புக்குமான அரசியல் இயக்கமும் கூட. இதை யாரும் குறிப்பிடாதபோது நாங்களே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றபடி விசிக தலித்துகளுக்கான கட்சி எனச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.”

“உங்களுக்கு அடுத்து கட்சியை வழிநடத்தப்போகும் அடுத்தகட்ட நபரை உருவாக்குவது, அடையாளங்காட்டுவது என்பது தலைமைப் பண்புகளில் ஒன்று. அந்த வகையில் நீங்கள் யாரை முன்மொழிய விரும்புகிறீர்கள்?”

“அந்தமாதிரி அரசியல் களத்தில் வாரிசுகளை அடையாளம் காட்டுவது ஜனநாயகப்பூர்வமானது அல்ல. தலைவர்கள் மக்களோடு நெருங்கியிருக்க உருவாக்கப்படுகிறவர்கள். மக்களின் மீது அக்கறை கொண்டு மக்களுக்காகத் தொண்டாற்றக்கூடிய  ஆளுமைகளில் இருந்து உருவாகிறவர்கள். அதையாரும் தனிப்பட்ட முறையில் மக்களிடம் திணிக்க முடியாது. அப்படி திணித்தால் அது ஜனநாயகமாகாது. என்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகிற அத்தனைபேரும் தலைவர்கள்தான். அவர்களைத் தலைவர்களாக உருவாக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய வேட்கை. இவர்களுக்கு தகுதி இருக்கிற பட்சத்தில் மக்களாலாலேயே அல்லது தொண்டர்களாலேயே அடையாளம் காட்டப்படுவார்கள். என் சொந்த அபிமானத்தின் பெயரில் நான் யாரையும் அடுத்தகட்ட தலைவராக முன்னிறுத்த விரும்பவில்லை.”

-தமிழ்பிரபா

படங்கள்: க.பாலாஜி