Published:Updated:

‘ஸ்டாலின் மீது அட்டாக்; ஹெச்.ராஜா மாஸ்!’ - அமித் ஷாவின் ஈரோடு பரேடு

‘ஸ்டாலின் மீது அட்டாக்; ஹெச்.ராஜா மாஸ்!’ - அமித் ஷாவின் ஈரோடு பரேடு
‘ஸ்டாலின் மீது அட்டாக்; ஹெச்.ராஜா மாஸ்!’ - அமித் ஷாவின் ஈரோடு பரேடு

அ.தி.மு.க-வைப் பற்றி விமர்சித்து அமித் ஷா ஒருவார்த்தைகூட பேசாததில் இருந்தே பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி உறுதியாகி விட்டதை அவரே சொல்லாமல் சொல்லிவிட்டார். ஆனால், காங்கிரஸ் அரசாங்கத்தைவிட ஸ்டாலினையும், தி.மு.க-வையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசியது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

பிரதமர் மோடியின் மதுரை விசிட்டிலிருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாகிக்கிடக்கிறது. மோடியோ, பி.ஜே.பி-யின் மேல்மட்டத் தலைவர்களோ தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் `பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்' என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பற்றி எந்த அறிவிப்பையும் பி.ஜே.பி சொல்லாவிட்டாலும், மோடியைத் தொடர்ந்து பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள் பலரும் தமிழகத்தில் தொடர்ந்து வரிசைகட்டி பிரசாரம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், பிப்ரவரி 14-ம் தேதி, அந்தக் கட்சியின் தேசியத் தலைவரான அமித்ஷாவின் ஈரோடு வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. `அமித்ஷாவின் வருகை பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி பற்றி ஏதாவது ஒரு சேதியைச் சொல்லிவிட்டுப் போகும்' எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதுகுறித்து ஒரு வார்த்தைகூட பேசாத அமித்ஷா, தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினையும் காங்கிரஸ் கூட்டணியையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதைத் தவிர, தமிழகத்தில் கூட்டணி பற்றி ஏதும் அறிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றமே முடித்துவைத்த 2-ஜி முறைகேடு வழக்கை மறுபடியும் கையிலெடுத்துக்கொண்டு, அமித் ஷா கடுமையாக விமர்சித்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைச் சூடாக்கியிருக்கிறது.

டெக்ஸ்வேலியில் நடைபெற்ற கைத்தறி, விசைத்தறி மற்றும் ஜவுளித்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக, காலை 10 மணிக்கு அமித் ஷா வருவதாக இருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அமித் ஷா மதியம் 2 மணிக்கு ஹெலிகாப்டரில் வந்து ஒய்யாரமாக இறங்கியபோதே, பி.ஜே,பி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் எனர்ஜி சுத்தமாய் இறங்கியிருந்தது. `ஜவுளித்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பு’ என்று சொல்லப்பட்ட நிகழ்ச்சி நடந்த அரங்குக்குள் அமித் ஷா நுழைந்தபோது ஒலித்த `பாரத் மாதா கீ ஜே’ என்ற தொண்டர்களின் கோஷம், கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களே என்பதை பட்டவர்த்தனமாகக் காட்டியது. ஜவுளித்துறையினரிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அமித் ஷா பேச்சை ஆரம்பிக்க, ஹெச்.ராஜா அதைத் தமிழில் மொழி பெயர்த்தார். அமித் ஷா பேச ஆரம்பிக்கையில், ஊடகத்தினுடைய கேமராக்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் மேடையை மறைப்பதாய் அரங்கிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதை உணர்ந்துகொண்ட அமித் ஷா, ‘கேமராவை ஸ்டேண்டில் வைத்துவிட்டு ஓரமாக இடையூறு இல்லாமல் நில்லுங்கள்’ என ஆங்கிலம் கலந்த இந்தியில் வேண்டுகோள் விடுக்க, ஹெச்.ராஜா அதையும் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல, கூட்டத்தில் இருந்தவர்கள் குபுக்கென சிரித்தனர்.

ஜவுளித்துறை பிரமுகர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட அமித் ஷா, “ஜவுளித்துறைக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இப்போது உங்களின் கோரிக்கைகள் எல்லாம் பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலும், “தலைமையில்லாத, கொள்கையில்லாத, ஊழல் பணத்தைப் பங்கிட்டுக் கொள்கிற கூட்டணிதான் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியைக் கொடுத்து வருகிறோம். எனவே, நீங்கள் பி.ஜே.பி-க்கு ஆதரவளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொண்டார். தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “தமிழகத்தில் பி.ஜே.பி-யால் கையூன்ற முடியாது, காலூன்ற முடியாது என்று சொல்பவர்களுக்கு, வரும் தேர்தலில் நாங்கள் அடையும் வெற்றி பதில் சொல்லும்” என்று சீரியஸாகப் பேசினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கயிறுவாரியாத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர், ``மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்’’ என ஹைடெசிபலில் முழங்கி அமர்ந்தனர். இந்தக் கூட்டங்களில் மூத்த தலைவர்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா ஆகியோர் பேசவில்லை. ஆனால், மேடையில் ஹெச்.ராஜாவின் பெயரை அமித் ஷா உச்சரித்தபோது, கைத்தட்டலும் ஆரவாரமும் எழுந்தன. 

பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா, “கொங்கு தமிழ் பாஷை இனிமையானது. கொங்கு மக்கள், எதிரிகளிடம் பேசும்போதும் இனிமையாகத்தான் பேசுவார்கள். நான் கொங்குத் தமிழன் இல்லை. கொங்கு தமிழர்களைப்போல இனிமையான குரலில் திராவிடக் கட்சிகளை நான் பேசமாட்டேன். என்னுடைய பாஷையில் பதிலடி கொடுப்பேன்” என எடுத்த எடுப்பிலேயே தி.மு.க மீதான விளாசலை ஆரம்பித்தார்.

தொடர்ந்து பேசியவர், “ `மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு தமிழக மக்களுக்காக என்ன செய்துவிட்டது' என ஸ்டாலின் கேட்கிறார்... 5,42,000 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழக மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைவிட இது 5.2 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடாகும். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, நாட்டின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கான கூட்டணி. 10 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்த தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மக்களுக்காக என்ன செய்தது? 2-ஜி போன்ற ஊழல்கள் மூலமாகக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வீட்டுக்குக் கொண்டு சென்றதுதான் அந்தக் கூட்டணியின் சாதனை. மீண்டும் அதே கூட்டணி அமைந்தால் நாட்டில் ஊழல் பெருக்கெடுத்துவிடும்” எனக் கடுமையாகச் சாடினார். 

அ.தி.மு.க-வைப் பற்றி விமர்சித்து அமித் ஷா ஒருவார்த்தைகூட பேசாததில் இருந்தே பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணி உறுதியாகிவிட்டதை அவரே சொல்லாமல் சொல்லிவிட்டார். ஆனால், காங்கிரஸ் அரசாங்கத்தைவிட ஸ்டாலினையும் தி.மு.க-வையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசியது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. எனினும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகப் பிரசாரம் செய்த அமித் ஷாவின் பேச்சுக்கு, கூட்டத்தில் இருந்த பி.ஜே.பி-யினர் மத்தியிலேயே பெரியளவில் ரெஸ்பான்ஸ் இல்லை என்பதுதான் உண்மை. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரமாகப் பார்க்கப்பட்ட அமித்ஷாவின் ஈரோடு வருகை, எதிர்க்கட்சிகளை லேசாகச் சாடிய விதத்திலும், முடிந்துபோன 2-ஜி விவகாரத்தை முன்னிறுத்திப் பேசிய விதத்திலும் சற்று காரம் இல்லாமலேயே முடிந்தது. இன்னும் சொல்லப்போனால், பி.ஜே.பி அரசின் சாதனைப் பட்டியலை புள்ளிவிவரம் வாரியாக அமித் ஷா வாசித்துக் காட்டியது கணக்கு வகுப்பில் இருந்ததைப்போல கிறுகிறுக்க வைத்தது. அமித் ஷாவின் வருகை அரசியல் களத்தைப் பரபரப்பாக்கும் என நினைத்திருந்த வேளையில், பி.ஜே.பி தொண்டர்களைக்கூட உற்சாகப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.

`அமித் ஷா வருவார்' எனப் பல மணி நேரமாகக் காத்திருந்த தொண்டர்களுக்கு அவர் வந்திறங்கிய ஹெலிகாப்டரைப் பார்த்தது மட்டுமே உற்சாகமான, ஆறுதலான ஒரு விஷயம். மற்றபடிச் சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில், அமித்ஷாவின் சுரத்தில்லாத பிரசாரம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. 

அடுத்த கட்டுரைக்கு