Published:Updated:

`தள்ளிப்போகும் மோடி விசிட்; ஸ்டாலின் வியூகம்!’ - அமைச்சர்களிடம் கறார் காட்டிய பியூஷ் கோயல்

`எதிரணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது, யாருடன் யார் கூட்டணி வைக்கப் போகிறார்கள், அவர்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?' என்பதை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்டினார் பியூஷ்.

`தள்ளிப்போகும் மோடி விசிட்; ஸ்டாலின் வியூகம்!’ - அமைச்சர்களிடம் கறார் காட்டிய பியூஷ் கோயல்
`தள்ளிப்போகும் மோடி விசிட்; ஸ்டாலின் வியூகம்!’ - அமைச்சர்களிடம் கறார் காட்டிய பியூஷ் கோயல்

மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக ஓரிரு தினங்களில் சென்னை வரவிருக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். `பிரதமர் மோடியின் நாகர்கோவில் பயணம் மார்ச் 1-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தொகுதிகளை இறுதி செய்யுங்கள் என மேலிடம் உத்தரவிட்டுள்ளது’ என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். 

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. இதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் மகாலிங்கத்தின் மருமகன் சுதர்சனத்தின் வீட்டுக்கு பியூஷ் கோயல் வந்திருந்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பதால், ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தைத் தேர்வு செய்திருந்தார் பியூஷ். அங்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியும் மின்துறை அமைச்சர் தங்கமணியும் சென்றிருந்தனர். தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்துப் பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, விரைவில் இனிப்பான செய்தி வரும் என்றார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசும்போது, `கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

`கூட்டணிப் பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்பட்டது?’ எனத் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். ``தமிழகத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என டெல்லி மேலிடம் விரும்புகிறது. நேற்று முன்தினம் பியூஷ் கோயல் வருகையில், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் அணியின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடந்துள்ளது. `இந்தத் தேர்தலில் தி.மு.க என்ன செய்யப்போகிறது, எதிரணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது, யாருடன் யார் கூட்டணி வைக்கப்போகிறார்கள், அவர்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?' என்பதை அறிந்துகொள்வதில் கூடுதல் ஆர்வம் காட்டினார் பியூஷ். தொடர்ந்து தமிழக அமைச்சர்களிடம் பேசியவர், `எதிரணியின் வியூகங்களை அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியைத் தோற்கடிக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

தொகுதி உடன்பாடு குறித்துப் பேசும்போது, 1998 மக்களவைத் தேர்தலில் தென்சென்னை, கோவை, நீலகிரி, திருச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தொகுதிகளிலும், 2004 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க அணியில் வடசென்னை, கோவை, நீலகிரி, சிதம்பரம், தர்மபுரி, கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டதையும் எடுத்துக் கூறியுள்ளனர் பா.ஜ.க தலைவர்கள். இந்தமுறை, 10 தொகுதிகள் வரையில் டிமாண்ட் வைத்துள்ளனர். மேலும், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்குத் தலா 1 இடங்களை ஒதுக்குவது குறித்தும் தெரிவித்துள்ளனர். 

கோவை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் மட்டும் பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு இருப்பதை அமைச்சர்கள் சுட்டிக்காட்டியும், தங்களுக்கு வேண்டிய தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக உள்ளனர். இது சம்பிரதாயமான சந்திப்பாகவே இருந்தது. கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் தமிழிசை, பொன்னாரிடம் பேசிய கோயல், `கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி அவர்கள் விரும்பும் தொகுதிகளை அடுத்த பேச்சுவார்த்தைக்குள் இறுதி செய்துவிடுங்கள். நமது கூட்டணிக்குள் பா.ம.க இடம்பெற வேண்டும். அதற்கான பணிகளைத் துரிதப்படுத்துங்கள்' எனத் தமிழிசை பொன்னாரிடம் சொல்லியுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் தொகுதிப் பங்கீடு விவரங்கள் இறுதி செய்யப்பட்டுவிடும்’’ என்கின்றனர் உறுதியாக. 

பா.ஜ.க கூட்டணி அமைவது குறித்து தம்பிதுரை காட்டி வரும் எதிர்ப்பையும் முதல்வர் தரப்பினர் கவனித்து வருகின்றனர். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு வெளியானால், சிட்டிங் எம்.பி-க்கள் பலரும் மாற்ற முகாம்களுக்கு அணி மாறிவிடுவார்கள் என்பதால், அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்து வருகின்றனர். `தனித்துப் போட்டியிடுவது என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு. தேர்தல் கூட்டணி தொடர்பான குழுவில் நான் இல்லை. இந்த முறை எனக்கு கரூர் தொகுதியை ஒதுக்குவார்களா என்றும் தெரியவில்லை’ என நேற்று பேசியிருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. `கூட்டணி அறிவிப்பு என்பது அ.தி.மு.க-வின் பெரும்பான்மைக் குழுவினரின் முடிவாக இருக்க வேண்டும்’ என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி அறிவிப்பால் ஏற்படப்போகும் பாதகங்களைப் பற்றியும் அலசி ஆராய்ந்து வருகின்றனர் அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகள். 

`நாகர்கோவிலுக்கு வரும் 19-ம் தேதி பிரதமர் மோடி வருவதாக இருந்தது. இந்தப் பயணத் திட்டம் மார்ச் 1-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அதற்குள் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியும் தொகுதிப் பங்கீடும் முடிவுக்கு வந்துவிடும்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.