Published:Updated:

` தேர்தலைப் பற்றி மட்டும் பேசுங்கள்!'  - பா.ஜ.க தலைவர்களிடம் கொதித்த அமித் ஷா

தமிழக பா.ஜ.க-வுக்குள் நடக்கும் மோதல்கள், பூத் கமிட்டிப் பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி அமித் ஷாவின் கவனத்துக்குச் சிலர் கொண்டு சென்றனர். இதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

` தேர்தலைப் பற்றி மட்டும் பேசுங்கள்!'  - பா.ஜ.க தலைவர்களிடம் கொதித்த அமித் ஷா
` தேர்தலைப் பற்றி மட்டும் பேசுங்கள்!'  - பா.ஜ.க தலைவர்களிடம் கொதித்த அமித் ஷா

மிழக அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த அதேநேரத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்தார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. ` தேர்தல் மட்டும்தான் நம்முன் இருக்கும் பெரிய சவால்' எனக் கட்சி நிர்வாகிகளிடம் கொதித்திருக்கிறார் அமித் ஷா. 

நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.க அமைச்சர்களுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. கூட்டணி, புதிய கட்சிகளின் வருகை, தொகுதிப் பங்கீடு என பா.ஜ.க நிர்வாகிகள் வேகம் காட்டி வருகின்றனர். டெல்லியின் கோரிக்கைகளை உள்வாங்கிக் கொண்டு, அ.தி.மு.க அமைச்சர்களும் சாத்தியமாகக் கூடிய விஷயங்களைப் பற்றி பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர். இன்னும் சில நாள்களில் இந்தக் கூட்டணி இறுதி வடிவத்துக்கு வந்துவிடும் என்ற உற்சாகத்தில் இருக்கின்றனர் பா.ஜ.க-வினர். அதேநேரம், தேர்தல் பணி, பூத் கமிட்டி வேலைகள் என தன்னுடைய பாணியில் கட்சிக்காரர்களிடம் வேலைவாங்கிக் கொண்டிருக்கிறார் அமித் ஷா. 

` மீண்டும் மோடி; வேண்டும் மோடி' என்ற முழக்கத்தோடு தமிழக பா.ஜ.க தேர்தல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை வந்த அமித் ஷா, கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த 16,000 பூத் கமிட்டி நிர்வாகிகளையும் சந்தித்தார். அவர்களிடம் பேசும்போது, ` பூத் கமிட்டி உறுப்பினராகத்தான் என்னுடைய பயணம் தொடங்கியது. இப்போது தேசியத் தலைவராக உயர்ந்திருக்கிறேன். உழைப்பவர்கள் எவரும் உயர்ந்த இடத்தைத் தொட முடியும். நம்முடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். நடுநிலை வாக்காளர்களையும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளையும் நம்பக்கம் கொண்டு வாருங்கள்' என நம்பிக்கையோடு பேசிவிட்டுச் சென்றார். குறிப்பாக, பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும் என்பது அமித் ஷாவின் நோக்கமாக இருந்தது. ஒவ்வொரு பூத்துக்கும் 15 பேர் எனவும் அவர்களில் 5 பேர் பெண்களாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவர்களை `சக்திகேந்திரா' எனவும் அழைக்கின்றனர். ` இந்தப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பா.ஜ.க வலுவாக இருக்கும் தொகுதிகளில் மட்டுமே பூத் கமிட்டிப் பணிகளை ஓரளவுக்குச் செயல்படுத்தியிருக்கிறார்கள்' என்ற குரல்களும் பா.ஜ.க-வில் இருந்தே எழுகிறது. 

அ.தி.மு.க-வோடு கூட்டணி உறுதியாகப் போகும் சூழலில், ஈரோடு சித்தோடில் ஜவுளித்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார் அமித் ஷா. இதன்பிறகு கூட்டத்தில் பேசியவர், ` தலைமையில்லாத, கொள்கையில்லாத, ஊழல் பணத்தைப் பங்கிட்டுக் கொள்கிற கூட்டணிதான் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியைக் கொடுத்து வருகிறோம். எனவே, நீங்கள் பி.ஜே.பி-க்கு ஆதரவளிக்க வேண்டும். `மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு தமிழக மக்களுக்காக என்ன செய்துவிட்டது' என ஸ்டாலின் கேட்கிறார். 5,42,000 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழக மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைவிட இது 5.2 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடாகும். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி, நாட்டின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கான கூட்டணி' எனக் கடுமையாகச் சாடினார். ஈரோடு விசிட்டில் பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் உட்பட தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

அப்போது நடந்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ``தமிழக பா.ஜ.க-வுக்குள் நடக்கும் மோதல்கள், பூத் கமிட்டிப் பணிகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி அமித் ஷாவின் கவனத்துக்குச் சிலர் கொண்டு சென்றனர். அதைக் கேட்க விரும்பாத அமித் ஷா, ` தேர்தலைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது. தேர்தல் வெற்றி ஒன்றுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். மற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்' எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார். இதன்பிறகு, மக்களவைத் தொகுதிகளில் இருக்கக் கூடிய பிரச்னைகளைப் பற்றி தமிழக நிர்வாகிகளைப் பேசச் சொன்னார். அவர்கள் பேசுவதை வைத்து அரைமணி நேரம் குறிப்பெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டார். உங்கள் தொகுதியில் என்ன பிரச்னை என அவர் கேட்கவே இல்லை. மற்றவர்கள் சொல்வதில் இருந்தே தனக்கான விஷயங்களை எடுத்துக்கொண்டார். தேர்தல் கூட்டணி தொடர்பாக, முரளிதர் ராவிடம் நீண்ட நேரம் பேசினார். தமிழக பா.ஜ.க-வின் உள்விவகாரங்களைக் கேட்கும் நிலையில் அவர் இல்லை" என்கின்றனர் விரிவாக.