
ஐந்தாண்டு கால பிரதமர் மோடி ஆட்சியின் பல்வேறு தவறுகளையும், மக்கள்விரோத முடிவுகளையும், புள்ளிவிவரங்களோடு எழுதி, ‘மோடி எ மிஸ்டேக்’ என்கிற தலைப்பில் ஆங்கிலப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோபண்ணா. மோடியின் அரசியல் மற்றும் அரசு நிர்வாக நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிக்கிறது இந்தப் புத்தகம். இந்த நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதில், அ.தி.மு.க அரசுக்கு எதிராக கோபண்ணா எழுதிய இருபது பக்கத் தகவல்களையும் சேர்த்து, “மோசடி, பினாமி ஆட்சிகளை அகற்றுவோம்” என்று கையேடாக வெளியிட்டுள்ளனர். மோடியின்மீதான கோபத்தை, மொத்தமாகப் புத்தகத்தில் கொட்டித் தீர்த்துள்ள கோபண்ணாவிடம் பேசினோம்...


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“எதற்காக இந்தத் திடீர் புத்தகம்?”
“தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களுக்கு உதவும் வகையில், கையேடு ஒன்றை, 2006, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்கள், 2009 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல் எனக் கடந்தகாலத் தேர்தல்களின்போது தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். அப்படித்தான் இந்த நூலையும் எழுதியிருக்கிறேன். மக்களிடம் ஒரு விஷயத்தை எப்படிக் கொண்டுசேர்ப்பது என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில், இந்தத் தேர்தலில் வேட்பாளர்கள் பிரசாரத்தின்போது, தெளிவாகத் தங்களுடையக் கருத்துகளை முன்வைக்க இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.’’

“குறுகிய காலத்தில் புத்தகத்தை வெளியிட்டுவிட்டீர்களே?”
“தினமும் நாட்டு நடப்பைப்பற்றிக் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். பொதுவாழ்க்கையில் இருப்பதால், இது என் கடமையும்கூட. அப்படி, நான் தினம் சேகரித்த பல்வேறு தகவல்களை, ஒன்றாகத் தொகுத்து வழங்க ஒருமாதம் மட்டுமே எனக்குத் தேவைப்பட்டது.”
“மோடி ஆட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்திருக்கிறீர்கள். ஆனால், உயர் சாதியினருக்கு பத்து சதவிகித இடஒதுக்கீட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களே?”
‘‘ஒரு தேசியக் கட்சியாக, தேசிய அளவில் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் நியாயத்தின் அடிப்படையில், காங்கிரஸ் இதை ஆதரிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பத்து சதவிகித இடஒதுக்கீட்டில் நியாயம் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. ஆகவேதான், தமிழக மக்கள் எதிர்ப்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.”
– ஜெனிஃபர் ம.ஆ.
படம்: தி.குமரகுருபரன்