Published:Updated:

புல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்!

பிப்ரவரி முதல் வாரத்திலேயே புல்வாமா தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தாக்குதலுக்கு கூடுதல் ஆயத்தம் தேவைப்பட்டதால், அது தள்ளிப்போடப்பட்டு, பிப்ரவரி 14-ம் தேதியன்று நிறைவேற்றப்பட்டதாகவும் ஐஎஸ்ஐ-க்கு நெருக்கமான வட்டாரங்கள்

புல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்!
புல்வாமா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ-தான் மூளை... பதிலடிக்கு வியூகம் வகுக்கும் 4 ராணுவ ஜெனரல்கள்!

ம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது நடந்த  தீவிரவாத தாக்குதலுக்கு, திட்டம் வகுத்துக் கொடுத்துச் செயல்படுத்தியது பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஆஸிம் முனிர்தான் என்று தெரியவந்துள்ளது. 

ஐஎஸ்ஐ தலைவர்

கடந்த வியாழக்கிழமை, புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் பேருந்து மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அடில் அஹமத், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் வந்து மோதினார். இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ள போதிலும், அதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்டது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின்  தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள லெப்டினென்ட் ஜெனரல் ஆஸிம் முனிர்தான் எனத் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடந்த விதத்தைப் பார்க்கும்போது இதில் ஐ.எஸ்.ஐ-தான் இதைச் செயல்படுத்தி இருக்க வேண்டும் என அப்பட்டமாக தெரிவதாக அந்த அமைப்பைப் பற்றி நன்கு அறிந்த பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த காலங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டராகவும், ராணுவ புலனாய்வு பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றிய முனிர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகள் குறித்த விவரங்களும் அத்துபடி. 

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவே முனிரை நேரடியாகத் தேர்வு செய்து ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் தலைவராக நியமித்தார். இதையடுத்து, தனக்கு இந்தப் பதவியை அளித்த ஜாவேத் உள்ளிட்ட தனது எஜமானர்களுக்குத் தன் விசுவாசத்தைக் காண்பிப்பதற்காகவே அவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திடம் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு, அதைச் செயல்படுத்துவதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்துள்ளார். 

புல்வாமா தாக்குதல்

இதனிடையே,  நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி முதல் வாரத்திலேயே இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தாக்குதலுக்கு கூடுதல் ஆயத்தம் தேவைப்பட்டதால், அது தள்ளிப்போடப்பட்டு, பிப்ரவரி 14-ம் தேதியன்று நிறைவேற்றப்பட்டதாகவும் ஐ.எஸ்.ஐ-க்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன. 

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி பதவியேற்றதிலிருந்தே, அதுவரை சற்று அடங்கியிருந்த  ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் உற்சாமடைந்தது. ஏனெனில், தேர்தலில் நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டிருந்த அந்த இயக்கம், பாகிஸ்தானுக்கும் இஸ்லாம் மதத்துக்கும் நவாஸ் துரோகம் இழைத்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில், இம்ரான் பதவிக்கு வந்த பின்னர் அந்த இயக்கத்தின் வலைபின்னல்களும் நிதியுதவிகளும் அதிகரித்தன. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தனது நாசவேலையைத்  தொடங்க எண்ணி, தற்போது புல்வாமாவில் முதல் தாக்குதலை நடத்தியுள்ளது. 

பதிலடிக்குத் தயாராகும் இந்தியா

இதனிடையே புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி தாக்குதலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய ராணுவம் தொடங்கி உள்ள நிலையில், அதற்கான பொறுப்பு  இந்திய ராணுவத்தின் 4 ஜெனரல்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதில் முக்கியமான ஒருவராக லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் காஷ்மீரில் நடந்த உரி ராணுவ முகாம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலுக்குத் தலைமை வகித்தவர்.

இவரைத் தவிர லெப்டினென்ட் ஜெனரல்கள் கே.ஜே.எஸ் தில்லான், அனில் சவுஹான்,  ஹரிந்தர் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், இவர்களுக்குத் தலைமை வகித்து, தாக்குதலை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.