Published:Updated:

``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்!

``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்!
``தனி ஒருவன்...தொகுதிக்கு 45 'சி' - தினகரன் தீட்டும் தேர்தல் திட்டம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கின்ற இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளும் கூட்டணி வியூகத்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன. ஆனால், ஆர்.கே.நகரில் அதிர்ச்சியைக் கொடுத்த தினகரன் தரப்பு, தேர்தல் களத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது இரண்டு முக்கியக் கட்சிகளையும் யோசிக்க வைத்துள்ளது.

 
`அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தினார் டி.டி.வி. தினகரன். மாநாடு, பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரசாரம் எனப் பல ரூட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார் தினகரன். பதினெட்டு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு அவருக்கு எதிராக திரும்பிய பிறகு, அவர் பின்னால் நம்பிக்கையோடு நின்றவர்களிடையே நம்பிக்கை குறைவு ஏற்பட்டது.

குறிப்பாக தினகரனின் வலதுகரமாகத் திகழ்ந்த செந்தில் பாலாஜி, தி.மு.க முகாமுக்குத் தாவியவுடன் மேலும் சிலரும் தினகரன் அணியிலிருந்து கழன்று செல்ல வாய்ப்புள்ளது என்ற செய்திகள் எல்லாம் பரவின. ஆனால், அதைப்பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தினகரன் வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சியோடு பா.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் அணிசேரும் வாய்ப்புள்ளது என்ற தகவல் முதலில் பரவியது. ஆனால், பா.ம.க. தரப்பு அ.தி.மு.க-வுடன் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தினகரனோடு இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. அவரும் ``எங்கள் கட்சியுடன் யாரும் கூட்டணி வைக்காவிட்டாலும் தனித்தே தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்று சொல்லியுள்ளார். 

``தினகரன் திட்டம் என்ன?" என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால் ``ஆரம்பத்தில் அன்புமணி உட்பட பலரும் தினகரனுடன் பேசி வந்தார்கள். ஆனால், தினகரனிடம் நிதி நெருக்கடி இருப்பதாக வெளியான தகவல்களால் அவருடன் அணிசேரப் பலரும் தயக்கம் காட்டினார்கள். ஏன், இப்போது அ.தி.மு.க கூட்டணியிலும், தி.மு.க கூட்டணியிலும் சீட்டுக்கு துண்டுபோட்டுக் காத்திருக்கும் சில கட்சியின் தலைவர்கள் தினகரனுடன் இப்போதுவரை தொடர்பில்தான் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதுதான். அதனால், தினகரனை ஒரு ஆப்சனாக மட்டுமே மற்ற கட்சியினர் வைத்துள்ளனர்.

இரண்டு திராவிடக் கட்சிகளிலும் கடைசி நேரம்வரை, சீட்டுக்குக் காத்திருந்து சீட் கிடைக்காதவர்களின் அடுத்த சாய்ஸ் தினகரனாகத்தான் இருக்கும். அப்போது தினகரன் தன் பேரத்தைக் கச்சிதமாக நடத்துவார். அப்படியே யாரும் வராமல் போனாலும் நாற்பது தொகுதிகளிலும் தனித்து நிற்கும் துணிச்சல் தினகரனிடம் இருக்கிறது. அவர் கடந்த இரண்டு மாதமாகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருவதே, இந்தத் தேர்தலை மனதில் வைத்துத்தான். நாற்பது தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கத் தயாராக இருக்கிறார். அதில் பதினைந்து தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக தேர்வு செய்தும் வைத்துள்ளார். 


தினகரன் கட்சியில் வேட்பாளர் தேர்வும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு தொகுதியில் வளமாகச் செலவு செய்யும் வேட்பாளர்களையே தன்னுடைய சாய்ஸாக தேர்வு செய்துள்ளார். `தினகரனிடம் பணம் இல்லை' என்று இவரைப் பல கட்சிகள் ஓரம்கட்டின. அவர்களுக்கு எல்லாம் தேர்தல் நேரத்தில் தினகரன், கண்டிப்பாக அதிர்ச்சி கொடுப்பார் பாருங்கள். ஒரு தொகுதிக்கு '45 சி வரை' செலவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் முடிவடைந்துவிட்டன. 

தோல்வி அடையும் தொகுதியில்கூட ஒன்றறை லட்சம் வாக்குகளை வாங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரு கோடி வாக்குகள், தன் கட்சிக்கு விழவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்த வாக்குகளை வாங்கிவிட்டால், தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக அ.ம.மு.க உருவெடுத்து விடும். கட்சி அதிகாரம், சின்னம் என எல்லாவற்றையும் பெற்றுவிடலாம். அ.தி.மு.க-வும் தினகரனை புறந்தள்ள யோசிக்கும்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி இல்லை. ஆனால், வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ள தி.மு.க  மற்றும் அ.தி.மு.க-வுக்கு அ.ம.மு.க நெருக்கடியைக் கொடுக்கும். அந்த நெருக்கடிதான் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் பாருங்கள்” என்கிறார்கள். 

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தினகரனுடன் பேசிவருவதாக ஒரு செய்தி பரவியது. ஆனால், நட்பு அடிப்படையில் பலரும் பேசிவருகிறார்கள். அதற்காக எல்லாம் கூட்டணிக்கானப் பேச்சுவார்த்தை என்று எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும்? அவர்கள் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்கள். அ.தி.மு.க, தி.மு.க  கட்சிகளின் கூட்டணி ஒரு வடிவத்துக்கு வந்த பிறகே தினகரனின் கூட்டணி வியூகம் எடுபடும். கூட்டணி அமையாவிட்டால் தனி ஒருவனாகத் தேர்தல் களத்தில் களமாடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் தினகரன் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது.