Published:Updated:

`பா.ஜ.கவை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா!' - கே.பி.முனுசாமி பேச்சு

`பா.ஜ.கவை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா!' - கே.பி.முனுசாமி பேச்சு
`பா.ஜ.கவை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா!' - கே.பி.முனுசாமி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் மக்களை வந்து சந்திக்க வேண்டும். ஊடகங்களில் தான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க-வைத் தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவரின் செல்வாக்கால்தான் ஒரு முறை நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தஞ்சாவூரில் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் 126 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ``ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது பல தொண்டர்கள் அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அவரது பெயரில் விருப்ப மனு கொடுப்பார்கள். தற்போது அவர் இல்லாததால் அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ரஜினிகாந்த் முதலில் மக்களை வந்து சந்திக்க வேண்டும். ஊடகங்களுக்குத்தான் அவர் பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களுடன் இருப்பவர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு முடிவு கட்டப்படும். எதிரி என்பவர்கள் எப்பொழுதும் இருப்பவர்கள். அவர்கள் எப்போதும் எதிரிகளாக இருப்பார்கள். கூட்டணி குறித்து தலைமைக் கழகம் முடிவு எடுக்கும்" என்றவரிடம்,  40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படுமா எனக் கேட்டதற்கு ``ஜெயலலிதா மிகப்பெரிய சக்தி. நாங்கள் அவருடைய தொண்டர்கள். அவர் அளவுக்கு எங்களுக்குச் சக்தி கிடையாது. 

பா.ஜ.க-வை தமிழகத்துக்கு அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவரின் செல்வாக்கால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒருமுறை மிகப்பெரிய வெற்றி பெற்று காங்கிரசுக்கு எதிராக ஆட்சி அமைக்க முடிந்தது. நாங்கள் எந்தக் கட்சியைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம் யாருக்கும் அஞ்ச மாட்டோம். ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் ஆரம்பத்தில் மக்களை அழைத்து உட்கார வைத்துப் பேசினார். மக்கள் கேள்வி கேட்பதால் தற்போது கட்சித் தொண்டர்களை மட்டுமே அமர வைத்துப் பேசுகிறார்" என்றார்.