Published:Updated:

`என் தொகுதிக்குள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வந்தது எனக்குத் தெரியல!'- அ.தி.மு.க எம்.எல்.ஏ குமுறல்

`என் தொகுதிக்குள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வந்தது எனக்குத் தெரியல!'- அ.தி.மு.க எம்.எல்.ஏ குமுறல்
`என் தொகுதிக்குள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வந்தது எனக்குத் தெரியல!'- அ.தி.மு.க எம்.எல்.ஏ குமுறல்

குற்றவாளி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் துணை முதல்வர் கலந்துகொள்ளக் கூடாது என கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, அமைச்சர் பதவியை இழந்தவர் முன்னால் வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. இவரின் மகன் அருள்நேசனுக்கு இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வமும் கலசப்பாக்கத்துக்கு வருகைத்தருகிறனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னிர்செல்வம் போர்கொடி உயர்த்தியுள்ளார்.முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் தற்போது இருக்கும் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னிர்செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தம்.

இதனால், இருவரது கோஷ்டிகளும் அடிக்கடி முட்டிக்கொள்வது வழக்கம்.  இந்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கலசப்பாக்கத்தில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குச் சொந்தமான  வேளாண்மை தொழில்நுட்ப கல்லுரி வளாகத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னிர்செல்வம் அமைச்சர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்.

இதுகுறித்து பன்னிர்செல்வம் எம்.எல்.ஏ கூறுகையில், ``இந்தத் தொகுதி என்.எல்.ஏ நான். எனக்குக் கூட முதல்வர் வருகையை தெரிவிக்காமல் முதல்வரும், துணை முதல்வரும் என் தொகுதிக்குள் வருவது வேதனையளிக்கிறது. ஒரே கட்சியில் இருக்கும் இந்த தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் என்னிடம் முதல்வர் வருவது பற்றி சொல்லியிருக்கலாம் ஆனால், அதைச் செய்யவில்லை. மேலும், வேளாண்மை அதிகாரி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜெயலலிதா அம்மாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்புக்கு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் வருவது வழக்கத்தில் இல்லாத ஒன்று. எனவே இந்தத் திருமண வரவேற்பில் முதல்வரும், துணை முதல்வரும் மற்றும் அமைச்சர் பெருமக்கள் யாரும் கலந்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.