Published:Updated:

`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ... என் நெஞ்சிலும் எரிகிறது!’ - பிரதமர் மோடி #Pulwamaattack

`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ... என் நெஞ்சிலும் எரிகிறது!’ - பிரதமர் மோடி #Pulwamaattack
`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ... என் நெஞ்சிலும் எரிகிறது!’ - பிரதமர் மோடி #Pulwamaattack

புல்வாமா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடி, `மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ.. என் நெஞ்சிலும் எரிகிறது’ என்று பேசினார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்குத் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானுக்குக் கண்டனம் தெரிவித்து, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கான சுங்கவரியை 200 சதவிகிதமாக மத்திய அரசு அதிகரித்தது. 

இந்த நிலையில், பீகாரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்து மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த பீகார் வீரர்கள் இருவரின் பெயர்களைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, `சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்னகுமார் ஆகியோருக்கு எனது வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். அவர்கள் இருவரும் பீகாரின் பாட்னா மற்றும் பாகல்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். 


மேலும் அவர் பேசுகையில், ``இங்கு கூடியிருக்கும் மக்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால், உங்கள் நெஞ்சங்களில் எரிந்துகொண்டிருக்கும் தீ... என் நெஞ்சிலும் எரிகிறது’’ என்று பேசினார்.  பீகார் உள்ளிட்ட கிழக்குப் பகுதி மாநிலங்களில் செயல்படுத்தப்படும் 33,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்த மக்களிடையே ஏறக்குறைய 30 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அந்தத் திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக உரையாற்றிய அவர், பா.ஜ.க கூட்டணி அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றம் ஆகிய இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறினார். இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றக் காரணம் மக்களாகிய நீங்கள், நிலையான அரசைத் தேர்வு செய்ததுதான் என்றும் பிரதமர் மோடி, தனது பேச்சில் குறிப்பிட்டார்.