Published:Updated:

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2
பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2


-எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

பட்டாசு தொழிலில் கான்ட்ராக்ட் லேபர் முறைக்கு மாறியதால் ஏற்படும் விபரீதங்களை பற்றி பார்த்தோம். இனி, ஏதோ சோறாக்கி, குழம்பு வைப்பது போல் வீடுகளில் சர்வ சாதாரணமாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பட்டாசு தயாரிக்கப்படும் விபரீதங்களை பார்க்கலாம்.

குடிசை தொழிலான பட்டாசு தொழில்

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2

வெடிகளில் சொருகப்படும் கரி மருந்து திரியைத்தான் வெளியே கான்ட்ராக்ட் கொடுத்து வீடுகளில் தயாரித்து, அதை பட்டாசு ஆலைகள் வாங்கிக் கொள்ளும் அபாயங்கள் மட்டும்தான் இதற்கு முன் நடந்து கொண்டிருந்தன. இப்போது, அதற்கும் ஒரு படி மேலே போய் அணு குண்டு, லட்சுமி வெடி, போன்ற வீரியமான வெடிகளை எல்லாம் வெளியே கான்ட்ராக்ட் கொடுத்து வீடுகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக சிறிய பட்டாசு ஆலைகள் அதிபர்கள், தொழிலாளர் பற்றாக்குறையாலும், கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திலும் இந்த அபாயத்தில் இறங்குகிறார்கள்.

இதன்படி கான்ட்ராக்ட்காரர்கள், பட்டாசு ஆலைகளில் வேலை பார்ப்பவர்களிடம் இதை வீடுகளில் ரெடி செய்து கொடுத்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டுவார்கள். (இதற்கு என்று ஆள்பிடிக்க தனியாக புரோக்கர்கள் இருக்கிறார்கள்) வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், தாயில்பட்டி போன்ற பகுதிகளில் எல்லாம் வீடுகளில் அணு குண்டுகள், லட்சுமி வெடி, குருவி வெடிகள் தயாரிக்கும் வேலைகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டு வெம்பக்கோட்டையில் ஒரு வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறு அறையில் அணு குண்டு

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2

தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியானார்கள். பெரிய அளவில் உயிர் சேதங்கள் நடந்த தகவல் மட்டுமே ' வெளிச்சத்துக்கு' வரும் ஒருவர் பலி என்றால் விஷயம் அப்படியே அமுக்கப்பட்டு விடும். வறட்சியான வானம் பார்த்த கரிசல் காட்டு பூமியில் காலம் தள்ளும் இந்த தொழிலாளர்கள், கூடுதல் வருமானம், பலியானவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் சில லட்சங்கள் நிதி உதவி ஆகியவற்றினால் விபத்து பற்றி வெளியே வாய் திறக்க மாட்டார்கள்.

உயிர் பறிக்கும் ஃபேன்சி ரகம்


பட்டாசு தொழிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பை இருந்ததை விட, இப்போது மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக பலியாவதற்கு முக்கிய காரணமாக ஃபேன்சி ரக பட்டாசுள்தான் என்கின்றனர் இந்த தொழிலை நன்கு அறிந்தவர்கள்.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2

இது தொடர்பாக சி.ஐ.டி.யூ.,வின் பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் தலைவி மகாலட்சுமியிடம் கேட்ட போது, ''வானத்தில் போய் வெடித்து கலர் கலராய் நட்சத்திரங்களை சிதற விட்டு மாய ஜாலம் காட்டும் வெடி வகைகள்தான் ஃபேன்சி அயிட்டம். அணுகுண்டு, ஆட்டோ பாம் போன்ற பெரிய சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளை விட இந்த ஃபேன்சி ரகங்களை தயாரிப்பதில்தான் ரிஸ்க் ஜாஸ்தி.

ஃபேன்சி ரக வெடிகளை தயாரிப்பதற்கு முக்கியமான மூலப்பொருள் மணி மருந்து. ஃபேன்சி ரக வெடிகளை மேலே போய் வெடிக்க வைப்பதற்கு உந்து சக்தியாக இருப்பது இந்த மணி மருந்துதான். ஸ்டான்சியம் நைட்ரேட்( சிவப்பு கலர் கொடுக்க) பேரியம் நைட்ரேட் (பச்சை கலர்) சோடியம் ஆக்சைலேட், கரி மருந்து, சல்ஃபர், வெடி உப்பு, அலுமினிய பவுடர் ஆகிய வேதி பொருள்களின் கலவைத்தான் இந்த மணி மருந்து.

வித விதமான கலர்களை கொடுப்பதற்கு சிவப்பு வெடி உப்பு, பச்சை வெடி உப்பு, நீலக்கலர் வெடி உப்பு என்று எவ்வளவு கலர் வேண்டுமோ அதற்கு ஏற்ப வெடி மருந்தை இதில் சேர்ப்பார்கள். மணி மருந்து கலவை ரொம்பவும் ரிஸ்க் என்பதால்தான் அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கூலியும் அதிகம்.

மணி மருந்து கலவை தயாரிக்கும்போது அனுபவசாலியான போர்மென்கள் மேற்பார்வையில் தனி அறையில் வைத்து தயாரிக்க வேண்டும். மணி மருந்து கலவை தயாரிக்கும்போது அதில் சிறு இலை பட்டால் கூட அது எளிதில் வெடித்து விடும். சூரியனின் வெயில்தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பு காலை 7 மணி முதல் 10 மணிக்குள் மணி மருந்து கலவையை தயாரித்து சரியான வெப்பத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வளவு ரிஸ்க் என்பதால் மணி மருந்து கலவை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கூலி கொடுக்கிறார்கள்.

சில மணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதால் தொழிலாளர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதை செய்கிறார்கள். சில நேரங்களில் இந்த மணி மருந்து கலவையில் ஈடுபடும் தொழிலாளர்கள் காலையில் 'கட்டிங்' போட்டு விட்டு இந்த வேலையை செய்யும் போது கவனக்குறைவால் வெடி விபத்துக்கள் நடந்த சம்பவங்களும் உண்டு.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2

மணி மருந்து காய்வதற்குள் அதில் சின்ன கல் விழுந்தாலோ, வெயில் அதிகரித்தாலோ எளிதில் தீப்பற்றி வெடித்து விடும் அபாயம் இதில் உண்டு. சமீபத்தில் சிவகாசி நாராயணபுரத்தில் ரத்னா பட்டாசு ஆலையில் காலை 10.30 மணிக்கு ஒரு மரத்தடிக்கு கீழே மணி மருந்து கலவை தயாரிக்கும் போதுதான் கொளுத்தும் வெயில் காரணமாக மணி மருந்து கலவை வெடித்து சிதறி 10 பேர் பலியாகினர். கொள்ளை லாபம் தரும் இந்த ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதில்தான் பட்டாசு ஆலைகளுக்கு இடையே போட்டி.

வானத்தில் மாயஜாலம் காட்டி வித விதமான கலர்களை அள்ளி தெளிப்பதற்காக மணி மருந்து கலவையில் அளவுக்கு அதிகமான வீரியமான கெமிக்கலை கலக்கிறார்கள். இதனால் மணி மருந்து கலக்கும் போது திடீர் உராய்வு ஏற்பட்டு விபத்து உண்டாகிறது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த வெடி விபத்துக்களில் மணி மருந்து கலக்கும் போது ஏற்பட்ட விபத்துதான் அதிகம். பெரிய பெரிய பட்டாசு ஆலை அதிபர்களின் கொள்ளை லாபத்துக்கும், பேராசைக்கும் கொத்துக் கொத்தாய் தொழிலாளர்கள் உயிர் இழந்திருக்கின்றனர். எனவே பட்டாசு தொழிலில் ஃபேன்சி ரக வெடிகள் தயாரிப்பதற்கு தடை விதித்தாலே ஒரளவு விபத்தையும், உயிர் இழப்பையும் கட்டுப்படுத்த முடியும்" என்றார்.

பண ஆசை

குட்டி ஜப்பானான சிவகாசியில் தீப்பெட்டி, அச்சகம், பட்டாசு என்று பல தொழில்கள் இருந்தாலும் மற்றவற்றை விட பட்டாசு தொழிலாளர்களுக்குத்தான் சம்பளம் ஜாஸ்தி. ஏனென்றால், ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என்று அவர்களுக்கு வரையறை கிடையாது. எவ்வளவு வெடிகளுக்கு மருந்து அடைக்கிறார்களோ, திரி சுற்றுகிறார்களோ, அதற்கு ஏற்றபடி சம்பளம். எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு ராப்பகலாக வேலை செய்கிறார்கள். விபத்தையும் விலைக்கு வாங்கி உயிரையும் விடுகிறார்கள். விபத்தில் பலியானவர்களுக்கு பட்டாசு ஆலைகள் 2 லட்சமும், அரசு 2 லட்சம் வரையும் இழப்பீடு வழங்குகிறார்கள். அதனால்தான் இந்த பகுதியில் மாற்று தொழில் இல்லை என்ற நிலையில் பட்டாசு தொழில் ஆபத்து என்று தெரிந்தும் குடும்ப சூழ்நிலை, வறுமை, ஆகியவை காரணமாக தொழிலாளர்கள் இந்த ஆபத்தான தொழிலை தொடர்ந்து செய்கிறார்கள்.

 
தடை செய்யப்பட்ட கெமிக்கல்களை பயன்படுத்துதல்

ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதற்கான மணி மருந்து வெடி கலவை எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது தற்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில் குறைந்த விலை என்பதால் தடை செய்யப்பட்ட வீரியம் அதிகம் உள்ள கெமிக்கலையும் கலக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா. இது தொடர்பாக மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் தலைமை துணை இயக்குனர் ஏ.பி.சிங்கிடம் கேட்ட போது, ''ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க ஒருசில பட்டாசு ஆலைகளுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிக லாபம் கிடைப்பதால் எல்லா பட்டாசு ஆலைகளும் விதிமுறைகளை மீறி ஃபேன்சி ரகங்களை தயாரிக்கின்றனர். அதுபோல் வானத்தில் போய் மத்தாப்பூ மாதிரி கலர்க்கலராய் வெடிப்பதற்கும், சடசடவென்று சத்தம் கொடுத்து வெடிக்க வைக்கவும் ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் போது சில வேதியியல் பொருள்களை சேர்க்கின்றனர்.

பட்டாசு ஆலைகள்...பகீர் உண்மைகள் - மினி தொடர்: பாகம் 2

குறிப்பாக ஃபேன்சி ரகத்திற்கான மணி மருந்து கலவையின் போது ' பிஸ்மத் டிரை ஆக்சைட்' என்ற கெமிக்கலை கலந்தால் அது உராய்வு ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் மணி மருந்தின் வீரியத்தை கட்டுப்படுத்தும். இதன் விலை கிலோ ஆயிரத்து 500 ரூபாய். ஆனால், ஒரு கிலோ 150 ரூபாய் என்பதால் செந்தூரம் என்ற சிவப்பு வெடி உப்பை இதில் கலக்கின்றனர். இது விஷத்தன்மை மற்றும் வீரியம் கொண்ட கெமிக்கல். இதை நாங்கள் ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளோம். ஆனால், குறைந்த விலை என்பதால் பல பட்டாசு ஆலைகள் இந்த செந்தூரத்தை மணி மருந்தில் கலக்கின்றனர். சமீபத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயகுமாரின் நாராயணபுரம் ரத்னா பட்டாசு ஆலையில் 8 பேர் பலியான விபத்தில் மணிமருந்து கலவையில் 'செந்தூரம்' என்ற சிவப்பு வெடி உப்பை பயன்படுத்தியதுதான் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது" என்றார்.

 
ஊழலில் திளைத்து கிடக்கும் அரசு அதிகாரிகள்

வருவாய்த்துறை, வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ், சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், ஆகியவைகளிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கித்தான் பட்டாசு ஆலைகளுக்கு லைசென்ஸ் பெற முடியும். இதில் ஒரு லைசென்ஸுக்கு மாவட்ட வருவாய் அலுவலருக்கு 15 ஆயிரம், கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட செக்க்ஷனுக்கு 3 ஆயிரம், தீயணைப்பு துறைக்கு 10 ஆயிரம், போலீஸுக்கு 10 ஆயிரம், சுகாதாரத்துறைக்கு 10 ஆயிரம், தொழிலாளர் நலத்துறைக்கு.50 ஆயிரம், வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு 50 ஆயிரம் என மிகப்பெரிய பட்டியலே வைத்திருக்கிறார்கள். லைசென்ஸ் புதுப்பிக்க இதை விட ரேட் கொஞ்சம் கம்மி.

 
எரிந்த வீட்டில் பிடுங்கியது ஆதாயம்

பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டால் மளமளவென்று லஞ்ச ரேட் உயர்ந்து விடும். பட்டாசு ஆலை அதிபர்கள் தங்களை ' தப்புவிக்க'  விபத்து நடந்த அன்று இரவே பணப்பட்டுவாடாவில் இறங்கி விடுகின்றனர். சம்பந்தப்பட்ட அத்தனை துறைக்கும் அள்ளி வீசுவதற்கு லட்சங்களை ரெடிமேடாக கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள் ஆலை முதலாளிகள். அப்புறமென்ன, வெடி விபத்து பரபரப்பு அடங்கிய கொஞ்ச நாளில் மீண்டும் மடமடவென்று பட்டாசு தயாரிக்கும் வேலை ஆரம்பமாகி விடும்.

வரி ஏய்ப்பு

லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்தும் அப்படி என்னதான் இந்த பட்டாசு தொழிலில் லாபம் கிடைக்கும் என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆமாம் பாஸ், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்

##~~##
இந்த பட்டாசு தொழிலில் புழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா. உண்மைதான். உதாரணத்துக்கு ஒன்று. சிவகாசி பட்டாசு ஆலையில் தயாராகும் 10 ஆயிரம் வாலா என்ற சரவெடியின் அடக்க விலை வெறும் ஆயிரம் ரூபாய்தான். பட்டாசு ஆலையில் இருந்து பட்டாசு ஏஜென்ஸிக்கு கை மாறும் போது அதன் விலை 3 ஆயிரம் ரூபாய். தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி செல்லும் போது அந்த 10 ஆயிரம் வாலா வெடியின் விலை 7 ஆயிரம் ரூபாய். எத்தனை மடங்கு லாபம் என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
சிவகாசி பட்டாசு தொழிலில் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடப்பதாக அரசின் புள்ளி விவரம் சொல்கிறது. ஆனால், நிஜத்தில் பட்டாசு தொழில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடப்பதாக தொழில் அறிந்தவர்கள் சொல்கின்றனர். கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பட்டாசு ஆலைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் முறையாக கட்டுவதில்லை. அதுசரி, மீண்டும் மீண்டும் விபத்துகள் நடந்து உயிர்களை குடிப்பதற்கு லஞ்சம் மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது நிர்வாக சிக்கல்கள் இருக்கின்றனவா?
அதுபற்றி நாளை பார்க்கலாம்...