Published:Updated:

இது காக்கை, பூனை யோகா!- நாராயணசாமியின் தர்ணா குறித்து சர்ச்சை படம் வெளியிட்ட கிரண்பேடி

இது காக்கை, பூனை யோகா!- நாராயணசாமியின் தர்ணா குறித்து சர்ச்சை படம் வெளியிட்ட கிரண்பேடி
இது காக்கை, பூனை யோகா!- நாராயணசாமியின் தர்ணா குறித்து சர்ச்சை படம் வெளியிட்ட கிரண்பேடி

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தனது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் நடத்தி வரும் தர்ணா போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆதரவு தர இருக்கிறார்.

டெல்லி சென்றிருந்த ஆளுநர் கிரண்பேடி, போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து நேற்று மதியம் 2 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு திரும்பியதோடு, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், ``பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில்தான் நடக்க வேண்டும். அனைத்து அரசு செயலர்களும், உயர் அதிகாரிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். முக்கியமாக ஆளுநரின் ஆலோசகர் தேவநீதிதாஸ் அதில் பங்கெடுக்கக் கூடாது” என்ற நிபந்தனைகளுடன் ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பினார். ஆனால், முதல்வரின் நிபந்தனைகளை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாததால் முதல்வர் நாராயணசாமியும் ஆளுநரை சந்திக்கவில்லை.

இதையடுத்து, முதல்வர் நாராயணசாமிக்கு மீண்டும் கிரண் பேடி எழுதிய கடிதத்தில், ``ஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பிய கடிதம் பிப்ரவரி 7-ம் தேதி தாங்கள் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்திவருகிறீர்கள். உங்கள் தர்ணாவை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இக்கோரிக்கைகள்  குறித்து விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வரும்படி நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆளுநர் மாளிகை முன்பு அரசியல் காரணங்களுக்காக நடைபெறும் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் எனது நிகழ்ச்சிகளை  ரத்து செய்துவிட்டு உங்களுடன் சந்தித்துப் பேசுவதற்காக புதுச்சேரிக்கு திரும்பினேன். ஆனால், என்னுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த, எங்கு நான் சந்திப்புக் கூட்டம் நடத்த வேண்டும்,  அதை எவ்வாறு நடத்த வேண்டும்,  யாரை நான் அழைக்க வேண்டும்,  யாரை நான் அழைக்கக் கூடாது என 4 நிபந்தனைகளை விதித்துள்ளீர்கள். நீங்கள் எழுப்பிய கோரிக்கைகளை கேட்கவே உங்களை நான் அழைத்தேன்.

நீங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் இல்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைப் பார்க்கும்போது உங்களது சுயநல அரசியல் லாபத்துக்காக சந்திக்க மறுக்கிறீர்கள் என்பது தெரியவருகிறது.  நமது சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்தால் உங்களது சந்தேகங்களுக்கு நான் முழுவிளக்கம்  அளித்திருக்க முடியும். அதேபோல நமது சந்திப்பு நடந்திருந்தால் பொதுமக்கள் முன்னிலையில் நாம் பங்கேற்கும் பொதுவிவாதம் தொடர்பான இடம், தேதி,  நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்திருக்கலாம். இருப்பினும் என்னைச் சந்திக்க விரும்பினால் எனது அலுவலகத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம்” எனத் தெரிவித்திருந்ததோடு ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே 45 நிமிடங்கள் சைக்கிள் பயிற்சியை மேற்கொண்டார். இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அதிருப்தியடைந்தனர்.

இந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் காக்கை யோகா செய்வது போன்ற ஒரு படத்தை கிரண்பேடி பதிவிட்ட ஒரு கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ட்வீட்டில்,  ``தர்ணா போராட்டமும் யோகா வகையைச் சேர்ந்ததா” என்று ஊடக நண்பர் ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நான், ஆம் என்றேன். எந்தத் தேவைக்காக உட்காருகிறோமோ.. எந்த வகை ஆசனங்களை நீங்கள் செய்தால், எந்த வகையான சத்தம் அதனால் வரும்? என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், இன்று காலையில் கூட பால்கனியில் காக்கை ஒன்று நின்று கொண்டிருந்தது என்றும், தரை விரிப்பில் பூனை ஒன்று யோகா செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரண்பேடி பதிவு குறித்து நாராயணசாமியிடம் கேட்டபோது, அவரிடம் தரத்தை இதில் இருந்தே நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். 

இதனிடையே, முதல்வர் நாராயணசாமி நேற்றிரவு ஆளுநர் கிரண் பேடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ``தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு வர மாட்டேன் என்று நான் சொல்லவில்லை. அரசுக் கூட்டங்கள் அனைத்தும் தலைமைச் செயலகத்தில்தான் நடக்கும் என்பதால் அங்கே நடத்துமாறு கூறினேன். எங்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் நான் வரத் தயார்" என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்து கிரண்பேடி அனுப்பியுள்ள கடிதத்தில், ``தங்கள் கடிதம் கிடைத்தது. பேச்சுவார்த்தைக்கு ஏற்கெனவே நீங்கள் தெரிவித்த நிபந்தனைகள் அனைத்தையும் கைவிடுங்கள். இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதில் நீங்களும் உங்கள் அமைச்சர்களும் கலந்துகொள்ளலாம். ஆளுநர் தரப்பிலிருந்து தலைமைச் செயலர், தனிச் செயலர், ஆளுநர் ஆலோசகர், ஆளுநர் கலந்துகொள்வார்கள். உங்களையும், அமைச்சர்களையும் ஆளுநர் மாளிகையின் இரவு உணவுக்கு அன்புடன் அழைக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.