Published:Updated:

`இனி சட்ட நடவடிக்கைதான்!'- முகிலனுக்காக களமிறங்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

`இனி சட்ட நடவடிக்கைதான்!'- முகிலனுக்காக களமிறங்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள்
`இனி சட்ட நடவடிக்கைதான்!'- முகிலனுக்காக களமிறங்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

சுற்றுச்சசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை ஆஜர்ப்படுத்தக்கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் போராளியான முகிலன் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுத் திரும்பியபோது கடந்த 2017-ம்  ஆண்டு கூடங்குளம் போராட்ட வழக்குக்காகக் போலீஸாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு வெளியில் வந்தவர் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சில காவல்துறை உயராதிகாரிகள்தான் என்றும், காவல்துறை ஸ்டெர்லைட் வேதாந்தாவின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் ஆண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

மேலும், அத்தனை ஆவணங்களையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து ஊருக்குச்செல்வதாக திட்டமிட்டிருந்த முகிலனைக்  காணவில்லை என்று கடந்த சனிக்கிழமை தகவல் வெளியானது. முகிலன் காணாமல் போய் மூன்று நாள்கள் ஆன நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்ற எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை

இது குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் "ஹென்றி டிபைன் சனிக்கிழமையில் இருந்து முகிலன் காணவில்லை என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு பேசினோம். அதேபோன்று காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்துக்கும் தொடர்புகொண்டு பேசிவிட்டோம். ஆனால், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. எப்படியும் சனிக்கிழமை முகிலனுடைய நிலை குறித்து தெரியவரும் என்று நம்பியிருந்தோம். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது முகிலனை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை இன்று சென்னை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என்றார். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

இதனிடையே, மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிபைன் சார்பில் சுதா ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சுற்றுச்சூழல் போராளி முகிலனை காணவில்லை என்று முதலமைச்சர் அலுவலகத்தையும் காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்துக்கும் தொடர்புகொண்டு பேசிவிட்டோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.