
சனா
திரைப்படப் பாடல்களைத் தாண்டியும் கட்டிப்பிடி இயக்கம், ‘என்னம்மா ஆச்சு உங்களுக்கு’ வீடியோ, பிக்பாஸில் அதிகம் புறணி பேசியவர் என்ற பெருமை என்று எக்குத்தப்பாய்ப் புகழ்பெற்றவர் சினேகன். இப்போது கமல்ஹாசனையே பிக்பாஸாக ஏற்றுக்கொண்டு சிவகங்கைத் தொகுதியில் ‘மக்கள் நீதி மய்யம்’ வேட்பாளராக நிற்கிறார்.

“ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவருக்கு ஆதரவா இருந்தேன். பிரசாரமும் பண்ணுனேன். அ.தி.மு.க.வில் திருவையாற்று சட்டமன்றத் தொகுதியில் எனக்கு சீட் கொடுக்குறதா இருந்தது. சினிமாவுல பிஸியா இருந்ததனால, நான்தான் வேண்டாம்னு தவிர்த்துட்டேன். அம்மா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-விலிருந்து

விலகியிருந்தேன். மாற்று அரசியல் சிந்தனை வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போதான், நம்மவருடைய (கமல்ஹாசன்) அரசியல் என்ட்ரி. இந்தத் தேர்தலில் வேட்பாளரா நிற்கணும்ங்கிற எண்ணம் எனக்குள்ளே இல்லை. 40 தொகுதிகளுக்கும் தீவிரமா பிரசாரம் பண்ணுவோம்னுதான் இருந்தேன். ஆனா, தலைமை எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டு, தேர்தலில் வேட்பாளரா நிற்கிறேன்” என்றவர், தொடர்ந்தார்.
“கமல் சார் அரசியலுக்கு வர்றார்னு ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ள இருக்கும்போதே கணிச்சேன். அப்போதே அதைச் சொல்லியிருந்தேன். இன்னும் பல படைப்புகளைக் கொடுத்துட்டு, அரசியலுக்கு வருவார்னு நினைச்சேன். ஆனா, சரியான நேரத்துக்கு வந்துட்டார். ராமேஸ்வரத்தில் கமல் சார் அப்துல் கலாம் ஐயா வீட்டிலிருந்து அவருடைய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்னு தெரிஞ்சப்போ, நான் மலேசியாவில் இருந்தேன். உடனே, ராமேஸ்வரத்துக்குப் போய் முதல் நாளில் இருந்தே அவருடன் பயணம் பண்றேன்.
ஹெச்.ராஜா மற்றும் கார்த்தி சிதம்பரத்தைப் பார்த்து நான் கொஞ்சம்கூட பயப்படலை. பயம்னா என்னன்னு கேட்கிற இடத்துலதான், நம்மவரும் இருக்கார்; நானும் இருக்கேன். இந்த இருபெரும் முதலைகளை மிரட்டுகிற சக்தி மய்யத்திற்கு இருக்கு” என்கிறார் சினேகன்.
படம்: எஸ்.சாய் தர்மராஜ்