Published:Updated:

ஹெலிபேடு…கன்டெய்னர்களில் கறுப்புப் பணம்..?! ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா! மினி தொடர் - 3

"2015ம் ஆண்டு தீபாவளியின் போது ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில்தான் இருந்தார். பங்களாவில் உள்ள பணியாளர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தார். இனிப்புகளையும், பரிசுகளையும் பணியாளர்களுக்குக் கொடுத்தார். பணியாளர்களின் குடும்பங்களைப் பற்றி விசாரித்தார்."

ஹெலிபேடு…கன்டெய்னர்களில் கறுப்புப் பணம்..?! ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா! மினி தொடர் - 3
ஹெலிபேடு…கன்டெய்னர்களில் கறுப்புப் பணம்..?! ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா! மினி தொடர் - 3

முந்தைய பாகங்கள்:

சிறுதாவூர் பங்களாவையொட்டி நின்ற காரிலிருந்து இறங்கியவர் சற்றுத் தொலைவு நடந்து சென்று சேல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். பின்பு அவரை நோக்கி அங்கே வேலை செய்திருந்த ஒருவர் வந்தார். இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு காரிலிருந்து ஒரு சிறிய பை ஒன்றை எடுத்துக் கொடுத்தார் அந்த நபர். சில நிமிடங்களில் கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரம் அங்கேயே இருந்தோம். வேறு யாரும் பங்களா பக்கம் வருவதாய் இல்லை. இதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முயன்றோம். காவல்துறையினர் யாரும் இல்லாததால் எவ்வித பதற்றமும் இல்லை. ஆனால் புதரில் இருந்த சேறும், விஷமுட்களும் நமது வேகத்தை முற்றிலுமாகக் குறைத்துவிட்டன. இருள் சூழ்வதற்குள் பங்களாவைச் சுற்றி வந்துவிட வேண்டும் என்பதால் தாமதிக்காமல் நடக்கத் தொடங்கினோம்.

ஒருவழியாக மீண்டும் மண் பாதையை அடைந்தோம். பின்பு அங்கிருந்து டூ வீலரை எடுத்துக்கொண்டு பயணித்தோம். பங்களாவின் தெற்குப் பகுதிக்கு வந்தோம். அதைச்சுற்றிலும் சிறிய அளவிலான கட்டடங்கள் கட்டிமுடிக்கப்படாமல் பராமரிப்பின்றி கிடந்தன. அப்பகுதியிலும் தென்னை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட மரங்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்தன. அடர்ந்த புதர்கள் வழியாகக் கம்பிவேலியை நோக்கிச் சென்றோம். கம்பி வேலியையொட்டி சென்ற தார்ச்சாலையின் அருகே கட்டடங்கள் இருந்தன. அதுதான் சிறுதாவூர் பங்களாவைக் கண்காணிக்கக் கூடிய கன்ட்ரோல் ரூம். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த இடத்தில் யாரும் இல்லை. கன்ட்ரோல் ரூம் அருகே பேனர்கள் வைக்கப் பயன்படும் இரும்புச் சட்டங்கள் துருப்பிடித்த நிலையில் குவிக்கப்பட்டு இருந்தன. புதர்களில் உள்ள பூச்சிகளும், சருகுகளிலிருந்து எழும்பும் சத்தமும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன.

பங்களா அருகே நமக்காகக் காத்திருந்த சோர்ஸ் ஒருவரைச் சந்தித்துப் பேசினோம். அந்த சோர்ஸ் பேசத் தொடங்கினர் ``2001ல் ஜெயலலிதா முதல்வரானதும் சிறுதாவூர் பங்களாவில் தங்கத் தொடங்கினார். சிறுதாவூரிலிருந்து கொண்டே சட்டமன்றத்திற்குச் சென்று வருவார். அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அதிகாரிகள் என எல்லோரும் பங்களாவில் சென்றுதான் முதல்வரைப் பார்ப்பார்கள். 2004 நாடாளுமன்ற வேட்பாளர் நேர்காணல் இங்குதான் நடைபெற்றது. 2006-ல் ஆட்சி முடிந்ததும் சிறுதாவூர் பங்களாவிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டார் ஜெயலலிதா. 2011 தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முதல்வரான ஜெயலலிதா 2012லிருந்து சிறுதாவூருக்கு அடிக்கடி வரத் தொடங்கினார். சசிகலாவை அப்போது ஒதுக்கி வைத்திருந்த தருணம் அது. இதனால் பங்களாவில் சசிகலா தரப்பில் அமர்த்தப்பட்ட பணியாளர்களை மாற்றிவிட்டு, புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சில நாள்கள் பங்களாவில் தங்கி கோட்டைக்குச் செல்ல ஆரம்பித்தார் ஜெயலலிதா. இதனால் பங்களாவின் உட்புறம், வெளிப்புறம், தோட்டம், பங்களாவைச் சுற்றிப்பார்க்கக் கூடிய சாலை என எல்லா இடங்களும் புதுப்பிக்கப்பட்டன. பங்களாவிற்குப் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக அங்கே ஹெலிபேடு ஒன்றை ரகசியமாக அமைத்தார்கள். இந்த ஹெலிபேடு அமையும் நிலத்திற்குப் பட்டா கிடையாது என்பதால், அதற்கு அனுமதி கொடுக்காத அதிகாரி ஒருவரை வேறுஇடத்திற்குப் பணிமாற்றம் செய்தார்கள். இரவு பகலாக அசுர வேகத்தில் அமைக்கப்பட்டது அந்த ஹெலிபேடு. ஆனால் ஒருமுறைகூட அதில் ஹெலிகாப்டர் தரை இறங்கவே இல்லை. 

2013-ல் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ காஞ்சிபுரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது பையனூர் அருகே சென்று கொண்டிருந்த போது, சென்னையிலிருந்து சிறுதாவூர் பங்களாவுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஜெயலலிதா வைகோவை கவனித்தார். ஜெயலலிதாவின் கார் சற்று நேரத்தில் அவர் அருகே வந்து நின்றது. காரிலிருந்து இறங்கிய ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து தெரிவித்து சில நிமிடங்கள் பேசினார். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகிச் சென்ற பிறகு அப்போதுதான் இருவரும் நேரடியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். 2014-ல் ம.தி.மு.க .- அ.தி.மு.க கூட்டணிக்கு அச்சாரமாக இருக்கும் என இந்தச் சந்திப்பு கருதப்பட்டது. ஆனால் அப்படிப்பட்ட கூட்டணி அமையவில்லை.

2015ம் ஆண்டு தீபாவளியின் போது ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில்தான் இருந்தார். பங்களாவில் உள்ள பணியாளர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்ந்தார். இனிப்புகளையும், பரிசுகளையும் பணியாளர்களுக்குக் கொடுத்தார். பணியாளர்களின் குடும்பங்களைப் பற்றி விசாரித்தார். இதுபோல் எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும் என்பதால் பணியாளர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார்கள். இதுவே அவரின் கடைசிப் பயணமாக அமைந்துவிட்டது. 2015 நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால், பங்களாவைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பங்களா பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெருத்த சேதமடைந்தன. மழைநீர் கால்வாய் போதிய அளவில் அகலமாக இல்லாததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மழைநீர் செல்வதற்கான கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டன. பங்களாவில் உள்ள சாலைகள் செப்பனிடப்பட்டன. 2016 தேர்தலில் வெற்றி பெற்றபிறகு அவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் பங்களாவிற்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டார். ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும் பாதுகாப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

2016 சட்டமன்றத் தேர்தலின் போது சிறுதாவூர் பங்களாவில் கன்டெய்னர் லாரிகள் நிற்பது போன்ற படம் மற்றும் வீடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து, `வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக சிறுதாவூர் பங்களாவில் உள்ள கன்டெய்னர் லாரிகளில் பணம் பதுக்கப்பட்டிருக்கின்றது.’ என வைகோ குற்றம் சாட்டியிருந்தார். அப்போது சிறுதாவூர் பங்களா பெறும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் பங்களாவை யாரும் நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பங்களாவிற்குச் செல்லும் பத்திரிகையாளர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். `தேர்தல் பரப்புரை வாகனங்கள்தான் அங்கே நின்றுகொண்டிருந்தன. நான்கு பக்கமும் பேனர்கள் அமைத்துப் பார்ப்பதற்கு கன்டெய்னர் போல தெரிந்ததால் எதிர்க் கட்சியினர் ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள்’ எனப் பங்களாவை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்தார்கள். தேர்தல் நேரம் என்பதால் ஒரு வாரத்திற்கு மேலாக அங்கே பரபரப்பு நீடித்தது” எனப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

தொடரும்…