Published:Updated:

`எங்களுக்காக அவர்கள்தான் காத்திருந்தார்கள்!' - ஸ்டாலின்- கமல் மோதல் பின்னணி

`எங்களுக்காக அவர்கள்தான் காத்திருந்தார்கள்!' - ஸ்டாலின்- கமல் மோதல் பின்னணி
`எங்களுக்காக அவர்கள்தான் காத்திருந்தார்கள்!' - ஸ்டாலின்- கமல் மோதல் பின்னணி

`நான் அரசியல்குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன்'  என்று தன் மீதான கமலின் விமர்சனத்துக்கு ஒரே வரியில் பதிலளித்துள்ளார் மு.க.ஸ்டாலின். 'தி.மு.க-வை வெளிப்படையாகவே விமர்சிப்பேன்' என்று சூளுரைத்துள்ளார் கமல், இருதரப்பினருக்குமிடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

`கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்' என்ற தலைப்பில் தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. `கமல் பேசுவது என்ன; ஏன் இப்படிப் பேசுகிறார்; எனப் புரியாது. கேட்போரை எல்லாம் சட்டையை கிழித்துக்கொள்ள வைப்பாரே தவிர, அவர் சட்டையை ஒருநாளும் கிழித்துக்கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும். சொந்த புத்தியும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது. அரசியல் வரலாறுகளைப் படித்தறியும் பக்குவமும் கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டு தேவையில்லை'' என்று கமலை கடுமையாகச் சாடியுள்ளது முரசொலி. இதற்கு முன்னதாக, ``தி.மு.க ஊழல் கட்சி, அழுக்குப் பொதி மூட்டை'' என்று கமல் தொடங்கிய விமர்சனமே இந்த மோதலுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்த விமர்சனத்துக்கு, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகரை வைத்து கமலுக்கு பதிலடி கொடுத்தது தி.மு.க.

இதனிடையே, ``காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தெரிவித்திருந்தார். ``மத்திய - மாநில அரசுகள் தங்கள் செல்வாக்கை இழந்துள்ளன. அ.தி.மு.க - பா.ஜ.க-வின் செல்வாக்கு சரியத்தொடங்கியுள்ளது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும்போது, இவர்களுக்கு எதிரான வாக்குகளில் பெரும்பான்மையானவை தி.மு.க-வுக்கு விழ வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில்,  தி.மு.க-வை ஊழல்கட்சி என்று அடையாளப்படுத்துவதன் மூலமாக அ.தி.மு.க-பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளைத் தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறார் கமல். தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தனக்கான வாக்கு வங்கியை நிலைநிறுத்த இதுவே சரியான தருணம் என நினைக்கிறார்.

அ.தி.மு.க- பா.ஜ.க-வின் அதிருப்தி ஓட்டுகளை தி.மு.க-வுக்கு செல்லவிடாமல் தடுப்பதன்மூலம், குறிப்பிட்ட விழுக்காடு வாக்குகளைத் தக்கவைக்கலாம் என அவர் நம்புகிறார். தி.மு.க மீதான பாய்ச்சல் தொடர வாய்ப்புள்ளது'' என்கின்றனர் மையம் கட்சியைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் தரப்பில், `கமல் கூட்டணிக்கு வரவேண்டும் என்பது ராகுலின் விருப்பம். அரசியலைத் தாண்டி இருவரும் நெருங்கிய நட்பு பாராட்டுபவர்கள் என்பதால், அவருடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கத் திட்டமிட்டார் ராகுல். தன் சொந்த ஊரான ராமநாதபுரம் கிடைத்தால், கூட்டணியில் இணையத்தயார் என கண்டிஷன் போட்டார் கமல். இந்த விவகாரம் தி.மு.க தலைமைக்குச் செல்லவே, `ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆகவே, அதை ஒதுக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்படும் தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுத்துவிடுங்கள் என கறாராகச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதனை ஏற்க மறுத்த கமல், `இரு திராவிடக்கட்சிகளுடனும் கூட்டணி இல்லை. தனித்துப் போட்டியிடுவோம்' எனப் பகிரங்கமாக அறிவித்தார். கூட்டணியில் இணைய முடியாத அதிருப்திதான் இப்படி மோதலாக வெளிப்படுகிறது'' என்று பேசி முடித்தார்.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ் பேசுகையில், `கமல் கூட்டணிக்கு அணுகினார். நாங்கள் மறுத்துட்டோம் என அவர்களை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். எங்கள் கூட்டணிக்காக அவர்கள்

காத்துக்கொண்டிருக்கின்றனர். அ.தி.மு.க-வை எங்கள் தலைவர் விமர்சனம் செய்த காலகட்டத்தில், தி.மு.க சார்பில் முரசொலி அறக்கட்டளை விழாவுக்கு அழைக்கப்பட்டார். அந்த விழாவுக்கு அவர்கள் அழைத்த நோக்கமே, `அ.தி.மு.க-வை விமர்சிக்கிறார், இவரை கட்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்பதுதான். ஆனால், அந்தக் கணிப்பைப் பொய்யாக்கி கமல் கட்சி ஆரம்பிக்கவே, ஸ்டாலின் `காகிதப்பூ' என்று கட்சியை விமர்சித்தார். அதற்கு கமல், `இது பூ அல்ல; விதை' என்றார். முதல் விமர்சனத்தை அவர்கள்தான் வைத்தார்கள். இப்போ, நாங்கள் கூட்டணிக்கு வருவோம் என நினைத்திருந்தனர்.

ஒருகையால் அவர்கள் வாயை பொத்திக்கொண்டு, இன்னொரு கையால் கூட்டணிக் கட்சிகளின் வாயை பொத்திக்கொண்டிருந்தனர். இத்தனைக்கும் பலமுறை எங்களைப் பற்றி கருத்து சொன்ன வைகோகூட  சமீபத்தில் எங்களைப் பற்றி கருத்து கூற மாட்டேன் என்று நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். கூட்டணிக்காக  அவர்கள்தான் காத்திருந்தனர். அவர்களை நம்பி வெற்றிபெற வேண்டும் என அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அணுகவேயில்லை. ஒருவேளை ராகுல்காந்தி கூட்டணிகுறித்து விருப்பம் தெரிவித்திருந்தால், யோசிக்கப்பட்டிருக்கும். அதில் பல நிலைகள் உண்டு. அப்படி வந்திருந்தால், நாங்கள் பல டிமாண்டுகளை வைத்திருப்போம் தமிழ்நாட்டுக்காக. நாங்கள் கூட்டணிக்கு ஆர்வப்படவேயில்லை. அந்தக் கட்சியிலிருந்து யாரும் அணுகவேயில்லை.  அ.தி.மு.க மட்டுமல்ல தி.மு.க-வையும் அகற்ற வேண்டும் என்பதே மாற்றம். கட்சி நலனைவிட மக்கள் நலனே முக்கியம். ராமநாதபுரமோ, தென் சென்னையோ வாங்கிக்கொண்டு எம்.பி ஆகவேண்டிய அவசியமே இல்லை. பேசாமல் இருந்தாலே அவருக்கு கலாசார எம்.பியை அரசு கொடுக்கும். ஒரு எம்.பி-க்காக நாங்கள் நிற்கவேண்டிய தேவையில்லை!' என்று பேசினார்.