Published:Updated:

`பாகிஸ்தானுக்கு நான் முக்கியமானவன்!'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி

"என்னை எனது தந்தை கூட ஒருபோதும் கன்னத்தில் அறைந்ததில்லை. ஆனால், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு இந்திய ராணுவ வீரர், என்னிடம் கேள்வி எதுவும் கேட்பதற்கு முன்னதாகவே அறைந்தார்" - மசூத் அசார்

`பாகிஸ்தானுக்கு நான் முக்கியமானவன்!'-  மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி
`பாகிஸ்தானுக்கு நான் முக்கியமானவன்!'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி

புல்வாமா தாக்குதலுக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்து செயல்படுத்த வைத்த ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார், காஷ்மீர் சிறையில் இருந்தபோது அவரிடம் விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரி, மசூத் அசார் குறித்து வெளியில் தெரியாத பல தகவல்களை வெளியிட்டுள்ளார். 

1968-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஹவல்புர் பகுதியில் பிறந்தவர் மசூத் அசார். ஹர்குத்-அல்-அன்சர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்ட மசூத் அசார், அதன் ஒரு பிரிவுக்குத் தலைவரானார். இதைத் தொடர்ந்து ஹர்குத் உல் அன்சர் பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளரானார். 1994-ம் ஆண்டு, ஜம்மு ஹர்குத் அல் அன்சர் அமைப்பில் ஏற்பட்ட கோஷ்டி மோதலைத் தீர்க்க ஸ்ரீநகருக்கு வந்தார் மசூத். இதையடுத்து 1995-ம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால், மசூத் கைது செய்யப்பட்டு, காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். 

1999-ம் ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட `ஐசி-814’  இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தீவிரவாதிகளால் கந்தஹாருக்குக் கடத்தப்பட்டது. பயணிகளை விடுவிப்பதற்காகத் தீவிரவாதிகள் விடுவிக்கச் சொன்னவர்களில் ஒருவர் மசூத் அசார். அதன்படி மசூத் அசார் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தானில் தஞ்சமடைந்த மசூத் அங்கிருந்தபடியே 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். 

`ஐஎஸ்ஐ-க்கு நான் தேவை'

இந்திய உளவுத் துறையான ஐபி-யில் (இன்டலிஜென்ஸ் பீரோ) பணியாற்றிய அவினாஷ் மோகனானே என்ற முன்னாள் அதிகாரி, ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உளவுப் பணியில் ஈடுபட்டவர் என்பதால், பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் குறித்த தகவல்களை நன்கு அறிந்தவர் என்பதோடு, அவர்களைக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றவர். 

இந்த நிலையில், கடந்த வாரம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமான மசூத் அசார், முன்னர் காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவினாஷ் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். 

``24 ஆண்டுகளுக்கு முன்னர் 1994-ம் ஆண்டு நவம்பர் மாதம் அசாரிடம் நான் ஒமர் சையீத் ஷேக் என்ற தீவிரவாதியின் புகைப்படத்தைக் காட்டி, அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு குறித்து கேட்டேன். அப்போது சையீத் 8 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். ஒமர் சையீத்தை அவரால் அடையாளம் காண இயலவில்லை. ஆனால், வேறு பல பதில்களைக் கொட்டினார். ஒவ்வொருமுறை நான் அவரிடம் பேசும்போதும், பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி குழுக்கள் குறித்தும், அவர்களை வழிநடத்துபவர்கள் குறித்தும், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ-யின் பங்களிப்பு குறித்தும் புதுப்புது தகவல்களை கொடுத்துக்கொண்டே இருந்தார். 

அசாருக்கு எப்போதுமே தனது முக்கியத்துவம் குறித்த பெருமிதம் இருந்து வந்தது. லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தான் இறங்கியபோது, தன்னை வரவேற்க வந்த ஏராளமான ஆதரவாளர்களால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், என்னிடம் `உங்களால் என்னை நீண்ட நாள்களுக்குச் சிறையில் வைத்திருக்க முடியாது. பாகிஸ்தானுக்கும் ஐ.எஸ்.ஐ-க்கும் நான் எவ்வளவு முக்கியமானவன் என்பது உங்களுக்குத் தெரியாது. என்னை மிகவும் குறைத்து எடை போட்டு விட்டீர்கள். நான் கட்டாயம் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்புவேன். அதை ஐ.எஸ்.ஐ பார்த்துக்கொள்ளும் (அசார் சொன்னடியே அவரை விடுவிக்க இந்திய விமானம் கடத்தப்பட்டது)' என்று சொன்னான்.  

மசூத் அசார் பிடிபட்டதே ஒரு வேடிக்கையான சூழலில்தான். 1994-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கனாபால் சவுக் அருகே ஆட்டோ ஒன்றில் சஜ்ஜத் ஆஃப்கானி என்ற தீவிரவாதியுடன் வந்துகொண்டிருந்தார் அசார். அப்போது அங்கே வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஆட்டோவை வழிமறித்தபோது, இருவரும் இறங்கித் தப்பி ஓட முயன்றனர். ராணுவத்தினர், அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அதன் பின்னர் நடந்த விசாரணையின் சூட்டை அசாரால் அதிக நேரம் தாங்க முடியவில்லை. எல்லா தகவல்களையும் கொட்ட ஆரம்பித்தார். ஆட்டோவில் தனது அருகே இருந்தவர் யார் என்ற விவரத்தையும் எங்களிடம் சொன்னார். இதன் காரணமாக அசார் மீது கடும் கோபமுற்றார் ஆஃப்கானி. சிறையில் இருவருக்கும் இடையே பகைமை காணப்பட்டது. 

அதே சமயம், அவர்கள் இருவர் பிடிபட்டது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ராணுவம் பின்னர்தான் உணர்ந்தது. அசார், அப்போதுதான் புதிதாக தொடங்கப்பட்ட ஹர்கத் உல் அன்சார் என்ற இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார். இது குறித்த விவரங்கள் தெரியவந்ததும், அசாரை ஜம்முவில் உள்ள சிறைக்கு ராணுவம் மாற்றியது. 

கன்னத்தில் அறைந்த ராணுவ வீரர்

அங்கே அசாரை மீண்டும் சந்தித்தபோது, `என்னை எனது தந்தை கூட ஒருபோதும் கன்னத்தில் அறைந்ததில்லை. ஆனால், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு இந்திய ராணுவ வீரர், என்னிடம் கேள்வி எதுவும் கேட்பதற்கு முன்னதாகவே அறைந்தார்' என்று சொல்லிய அசார், தன் வயிற்றைக் காண்பித்து, ஆப்கானிஸ்தானில் உள்ள ஹர்கத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தின் பயிற்சி முகாமுக்குச் சென்றபோது பயிற்சி பெறுவதற்கான உடல் தகுதி எனக்கு இல்லை என்று என்னை கராச்சிக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்' என்று சொன்னார். 

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வருவது கடினமாக இருந்ததால்தான், தான் கள்ளத்தனமாக போர்ச்சுகீசிய பாஸ்போர்ட்டில் காஷ்மீர் வந்ததாகவும், பாகிஸ்தானில் உள்ள தம் இயக்கத்தினர் காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் கெடுபிடிகள் எந்த அளவுக்கு உள்ளது என்ற உண்மை நிலவரத்தைச் சரியாகத் தெரிவிக்காமல் போனதால்தான், காஷ்மீருக்கு வந்து தான் மாட்டிக்கொள்ள நேரிட்டதாகவும் அசார் தெரிவித்தார். 

அதன் பின்னர் அசாரைச் சிறையிலிருந்து விடுவிக்கத் தீவிரவாதிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட 2 முயற்சிகள் பலனளிக்காத நிலையில், மூன்றாவது முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட விமானக் கடத்தல் மூலம் அசார் பாகிஸ்தான் போய் சேர்ந்துவிட்டார். அப்போது முதல் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை ஏவி விட்டு வரும் அசார், தற்போது புல்வாமாவில் நாசவேலையை நடத்தி உள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் ஏதாவது எலிப் பொந்து போன்ற ஒரு இடத்தில்தான் பதுங்கி இருக்க வேண்டும். அவரை இந்திய ராணுவம் வேட்டையாடி அழிக்க வேண்டும்" என்றார் அவினாஷ்.