அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்!”

“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்!”

கனிஷ்கா

40 தொகுதிகளுக்கான நாடாளு மன்றத் தேர்தல், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அ.ம.மு.க-வுக்கு என்ன ரிசல்ட் கிடைக்கப்போகிறது என்று தமிழகமே எதிர்பார்ப்பில் இருக்கும் காலம் இது. அந்தக் கட்சியின்  துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனைச் சந்தித்தேன்.

“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்!”

“முன்பெல்லாம் ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி, ஓ.பி.எஸ் தரப்பினரும், நீங்களும் அடிக்கடி ‘விசிட்’ அடித்தீர்கள். இப்போது யாருமே போவதில்லையே... ஏன், பயமா?”

“நான் போய்க்கொண்டுதானிருக்கிறேன். அம்மாவோட ஆன்மா இவங்களை மன்னிக்காதுங்கிறது தெரிஞ்சுதான் அவங்க போறதில்லை. தமிழ்நாட்டில் அம்மா எதிர்த்த திட்டங்களை எல்லாம் இவர்கள் அனுமதித்துள்ளனர்.  மோடியா, லேடியான்னு அம்மா கேட்டாங்க. லேடிதான்னு மக்கள் 37 சீட் கொடுத்தாங்க. தமிழ்நாட்டை மோடி புறக்கணிச்சதுக்குக் காரணமே அதுதான். ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் படத்தை சட்டசபையில வைக்ககூடாதுன்னு எதிர்த்த தே.மு.தி.க,  அம்மாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாதுன்னு நீதிமன்றம் போன பா.ம.க, இவர்களோடு கூட்டணி வைத்த எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோரை அம்மா ஆத்மா மன்னிக்காது.”

“தி.மு.க-வின் ஸ்லீப்பர் செல் நீங்கள், இடைத்தேர்தலில் தி.மு.க-வுக்கு மறைமுகமாக உதவும் வகையில்தான், பார்த்திபன், பழனியப்பன், தங்க தமிழ்ச்செல்வன் போன்றவர்களை எம்.பி. தேர்தலில் நிற்கவைத்ததாகச் சொல்கிறார்களே?”

“அவர்களே விருப்பப்பட்டுக் கேட்டனர். நன்கு ஆலோசித்தே கொடுத்தோம். இதுக்கும் அதுக்கும் சம்பந்தமேயில்லை. ஏன்...ஸ்டாலினோட தளபதின்னு உங்க பத்திரிகையிலேயே எழுதியிருந்தீங்க. அ.தி.மு.க. ஒட்டைப் பிரிக்கிறோம், அது தி.மு.க–வுக்கு ப்ளஸ்ன்னு எழுதுறாங்க. ஆர்.கே.நகர்ல தி.மு.க–வுக்குப் போக வேண்டிய மைனாரிட்டி ஓட்டு எங்களுக்குக் கிடைச்சு, தி.மு.க டெபாசிட் போச்சே... ஆர்.கே. நகர் ஃபார்முலாதான் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கப்போகிறது.”

“ஹாங்காங்கில் நீங்கள் வைத்திருந்த வைரத்தை விற்ற பணம் வந்துவிட்டதால்தான், தேர்தலில் தாராளமாகச் செலவு செய்கிறீர்கள் என்றும் சிலர் சொல்கிறார்களே?”


“தி.மு.க-வோ, ஆளுங்கட்சித்  தரப்பினரோ எங்க பேரைக் கெடுக்க இப்படி வதந்தியைக் கிளப்பிவிடுறாங்க. என்னிடம் வைரம் இருந்திருந்தால் இந்த ஆட்சியை எப்போதோ கவிழ்த்திருப்பேனே?”

“தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறீர்கள். அரசுக்கு நாலு லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் இவையெல்லாம் சாத்தியமா?”


“நிச்சயமா சாத்தியம்தான்! கிரானைட், கார்னட், தாது மணல்களை எந்த முறைகேடும் இல்லாமல் எடுத்து அரசே ஏற்றுமதி செய்தால், மதுக்கடை வருமானம் தேவைப்படாது. இதுவே போதும்.”

“மதுக்கடைகளை, உங்களுடைய மிடாஸ் ஆலையை மூடுவீர்களா? ”

“மதுக்கடைகளைப் புதிதாகத் திறக்கமாட்டோம். பழையவற்றை படிப்படியாக மூடுவோம். மிடாஸ், என்னுடையதாக இருந்தால் உடனே மூடிவிடுவேன். என் உறவினருடையது. ஆனால் அதையும் சேர்த்து மூடுவதற்கான திட்டத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக பூரண மதுவிலக்கு கொண்டுவருவோம்.”

“ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோவைப் போல, இந்தத் தேர்தலில் வேறு ஏதாவது ரிலீஸ் செய்யும் உத்தேசம் உள்ளதா?”

“அந்த வீடியோ திட்டம்போட்டு வெளியிட்டதல்ல. ஆர்.கே.நகரில் கடைசிநாள் பிரசாரத்தின்போது, அ.தி.மு.க சார்பில் தவறான பிட்நோட்டீஸ் வெளியிட்டாங்க. வெற்றிவேல் திடீர்னு உணர்ச்சி வசப்பட்டு,  ‘அம்மா ஆஸ்பத்தரியில உயிரோடதான் இருக்காங்க’ என்று மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அந்த வீடியோவை வெளியிட்டார்.”

“தமிழகம் முழுவதும் ஆர்.கே.நகர் ஃபார்முலாதான்!”

“துரைமுருகன், விடுதலைச் சிறுத்தைக் கட்சிப் பிரமுகர்...இப்படி தமிழகத்தில் வருமானவரித்துறை (ஐ.டி) ரெய்டுகளில் எதிர்க்கட்சியினரின் பணம் மட்டும் பிடிபடுகிறதே?”

“இந்தத் தேர்தலில் ஆளும்கட்சி நம்புவது பணத்தை மட்டுமே. முதல்வர், துணை முதல்வர் எல்லோரும் பண மூட்டையுடன் அலைகின்றனர். பி.ஜே.பி–யுடன் கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்தால், இவர்களைத் தேர்தல் ஆணையமும், ஐ.டி துறையும் கண்டுகொள்வதில்லை. காவல்துறை, ஆம்புலன்ஸ், எடப்பாடிக்கு வேண்டப்பட்ட கூரியர் பார்சல் சர்வீஸ் என எல்லா வாகனங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் பணம் போகிறது. பணம் யார் வைத்திருந்தாலும் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்துத் தாக்குகின்றனர்.”

“இந்த ஐ.டி. ரெய்டுகளில் அ.ம.மு.க குறி வைக்கப்படவில்லையே?”

“அநேகமாக, அடுத்த பிளான் அதுதான்...உதாரணத்துக்கு தேனித் தொகுதியில வர்ற ஆண்டிபட்டி மாதிரி கிராமத்துல எங்க நிர்வாகி வீட்டுல 50 லட்ச ரூபாய் பணத்தை போலீஸ் மூலமாக வைத்து, அதை எடுக்கிறாப்ல பிளான் போடுறாங்க. அவங்க நோக்கம், எப்படியாவது இடைத்தேர்தலை நிறுத்தணுங்கிறதுதான்.”

“ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனை தினகரன் கொடுத்தாரே... அவங்களுக்குப் பணம் வந்து சேர்ந்ததான்னு விசாரிங்கன்னு அமைச்சர் ஜெயக்குமார் பேசுகிறாரே?”


“போலீஸ் உதவியுடன் ஆர்.கே நகரில் பணம் கொடுத்தது அவர்கள்தான்.  யாரோ 20 ரூவா சாப்பிடக் குடுத்தத, நாங்க ஓட்டுக்குக் குடுத்ததா சொல்லி வதந்தி பரப்பினாங்க.  ஆர்.கே. நகர்த் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘நாங்க காயலாங் கடைக்குப் போவோம்’னு ஜெயக்குமார் சொன்னார். இப்ப அவங்கதான் அந்த நிலைமையில இருக்காங்க. ஆர்.கே. நகரில் அவர் பிறந்த தெருவிலேயே அவரால ஓட்டு வாங்கித்தர முடியவில்லை.”

“இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு, ஃபெரா வழக்கு... இப்படி ஏகப்பட்ட டென்ஷன்.  ஆனால் எப்போதும் ‘மிஸ்டர் கூல்’ ஆக இருக்கிறீர்களே?”


“25 வருஷமாக ஃபெரா வழக்கு இருக்கிறது. இடையில் டிஸ்சார்ஜ் ஆன வழக்கு. யாருக்கோ பணம் கொடுத்ததாகப் பொய் வழக்கு. மனதில் உறுதியுள்ளது. மடியில் கனமில்லை. அதனால் டென்ஷன் இல்லை. எனக்கு இறைநம்பிக்கை அதிகம்.”

“எல்லாம் சரி... ஜெயலலிதா ஏன் உங்களை ஒதுக்கிவைத்தார்?”

“வக்கீல் ஒருவர் என்னைப்பற்றித் தவறாகப் போட்டுக்கொடுத்ததால், அந்த முடிவை அவர் எடுத்தார். அதன்பின்பு, எங்களது குடும்பத் தினரை நீக்கியபோது என்னையும் சேர்த்து நீக்கிவிட்டார். அவ்வளவு தான்.”

 “ஆர்.கே. நகர்த் தேர்தல் பிரசாரத்தில் சசிகலா படத்தைத் தவிர்த்தீர்களே? இந்தத் தேர்தலில் எப்படி?”

“போடக்கூடாது என்று நாங்கள் சொன்னதேயில்லை. ஆர்.கே.நகர்த் தேர்தல் பொறுப்பாளராக இருந்த வெற்றிவேல், சிறைச்சாலைக்குச் சென்று, சசிகலாவிடம் போஸ்டரைக் காண்பித்தார். அவர் ஓகே செய்த போஸ்டர்கள்தான் பயன்படுத்தப் பட்டன!”

“ஆரம்பத்தில் பி.ஜே.பி மேலிடத் தலைவர்கள் கூட்டணி பேசியதாகவும், நீங்கள் வைத்த சில நிபந்தனைகள் சரி்ப்பட்டுவரவில்லை என்றும் சொல்கிறார்களே. மதுரை ஆதீனம் பேசியதன் பின்னணியும் இதுதான் என்கிறார்களே?”

“எல்லாமே வதந்தி. பி.ஜே.பி தரப்பில் யாரும் என்னை அணுகவுமில்லை; அவர்களிடம் நான் எந்த கண்டிஷனும் போடவுமில்லை. தி.மு.க, அ.தி.மு.க தூண்டுதலில்தான் மதுரை ஆதீனம் அப்படிப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.”

“ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஜெயித்தால் மத்தியில் ஆளும்அரசுடன் ஒத்துப்போவீர்களா... எதிர்த்து நிற்பீர்களா?”

“ஒருவேளை, இல்லை, நிச்சயமாக நாங்கள் 37 தொகுதிகளில் ஜெயிப்போம். தமிழக மக்களின் நலனுக்காக, மதச்சார்பற்ற நல்ல பிரதமரைத் தேர்வு செய்வோம். நீட் தேர்வு, விவசாயத்தை அழிக்கும் திட்டங்களைத் தடை செய்வது போன்றவற்றில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

கெயில் குழாய்களையும், உயர் மின் கோபுரத்தையும் சாலையோரத்திலும், புதை மின் வடமாகவும் கொண்டு செல்லாமல் விவசாய நிலத்தில் கொண்டு சென்றால் எதிர்ப்போம். காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்போம்.”

 “பி.ஜே.பி. உங்களையும், சசிகலாவையும் குறி வைப்பது ஏன்?”

“2014-ம் ஆண்டில் மோடியுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்காதது முக்கியக் காரணம். தனக்கு எதிராக நின்று 37 சீட்டுகளை அம்மா ஜெயித்ததாலேயே அந்தக் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார் மோடி. அவருக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் சிறந்த அடிமைகளாக இருக்கின்றனர்.”

“உங்களது கட்சி வேட்பாளர்களின் பெயர்களில் நிற்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் கொடுத்திருக்கிறதே தேர்தல் ஆணையம்?”

“முதலில் தொப்பிச் சின்னம் கொடுத்தனர். பிறகு குக்கர் சின்னம் தந்தனர். அப்போது, தொப்பிச் சின்னத்தில் நின்றவர், 326 ஓட்டுகள் வாங்கினார். ஆர்.கே.நகர் வெற்றியால் குக்கர் சின்னம் பெரும் பிரபலமானது. அதை இப்போது எனக்குத் தராமல் சுயேச்சைகளுக்குத் தருகின்றனர். ஆனால், பரிசுப்பெட்டிச் சின்னம் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டது.”

“தென் மண்டலம், மத்திய மண்டலத்தைத் தவிர்த்து வேறெங்கும் உங்களுக்கு செல்வாக்கு இருப்பதாகத் தெரியவி்ல்லையே?”

“தெற்கு, மத்திய மண்டலங்களில் மட்டுமல்ல... எல்லா மண்டலங்களிலும் மாபெரும் வெற்றி பெறுவோம்.”

“உங்கள் வீட்டில் சிதம்பரம் ஆட்சியா? மீனாட்சி ஆட்சியா?”

“வீட்ல மீனாட்சி ஆட்சிதான். அரசியல்ல.. சிதம்பரம் ஆட்சிதான். என் மனைவி அனுராதா, அரசியல்ல தலையிடுறதில்ல. அவங்க வேலைல அவங்க கில்லி!”