Published:Updated:

முதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்!- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி இளவரசர்

முதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்!- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி இளவரசர்
முதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்!- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி இளவரசர்

சவுதி – பாகிஸ்தான் இடையிலான உறவு வலுபெற்றுவருகிறது. முதல் அரசுப் பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்ற முகமது பின் சல்மானுக்கு, பாகிஸ்தானின் மிக உயரிய சிவிலியன் விருதான `நிஷான்-இ-பாகிஸ்தான்’ வழங்கப்பட்டுள்ளது. மேலும், இருநாடுகளிடையே ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த இணக்கம், மற்ற உலக நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வரை நியாயம் கிடைக்கப்பெறாத பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி படுகொலை வழக்கு, சவுதி இளவரசரின் அரசியல் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக மாறிவிட்டது. உலக நாடுகள், சவுதி அரசுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றார்.  நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் தத்தளிப்பதாக இம்ராம்கான் அறிவித்தார். அரசு உடைமைகளை ஏலத்துக்கு விட்டார். ஆனாலும் போதுமான தொகை ஈட்ட முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். இந்த நெருக்கடியான சூழலில், பாகிஸ்தானுக்கு கைகொடுக்க சவுதி முன்வந்தது.


 

பாகிஸ்தானுக்கு  6 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாக அறிவித்தது. மேலும், பாகிஸ்தானின் கவாடார் பகுதியில் பெட்ரோல் நிறுவனம் ஒன்றை உருவாக்க 10 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதாகவும் தெரிவித்தது.  தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக, பாகிஸ்தான் மீது உலக நாடுகள் குற்றம் சுமத்திவருகின்றன. சவுதி இளவரசர் சல்மானுக்கு, பத்திரிகையாளர் ஜமால் படுகொலையில் சம்பந்தம் இருப்பதாக துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்தச் சூழலில், பாகிஸ்தானும் சவுதியும் இணக்கம் காட்டுவது உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜமால் விவகாரத்துக்குப் பிறகு உலக நாடுகள் உடனான உறவை பலப்படுத்துவதில் சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் அக்கறைகாட்டிவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதனை உண்மையாக்கும் விதமாக, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சல்மான் ஆசியா வந்துள்ளார். நேற்று பாகிஸ்தான் சென்ற அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. போதாதென்று இஸ்லாமாபாத் சாலையெங்கும் சல்மானை வரவேற்று பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்படிருந்தன.

இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான  ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் இளவரசர் சல்மான், இம்ரான் கானை புகழ்ந்து பேசினார். `` இம்ரான்கானைப் போல ஒரு பிரதமருக்காகத்தான் பாகிஸ்தான் மக்கள் இத்தனை காலம் காத்திருந்தனர். இனி பொருளாதாரம் உட்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் வளர்ச்சியடையும். சவுதியின் அன்பு நாடு பாகிஸ்தான்’’ என்றெல்லாம் புகழாரம் சூட்டினார். இதனால் உலக நாடுகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


 

மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பையும் சல்மான் வெளியிட்டிருக்கிறார். கடுமையான தண்டனைகளுக்குப் பேர்போன சவுதியில், சிறைத் தண்டனை அனுபவித்துவரும் 2107 பாகிஸ்தான் பிரஜைகளை விடுதலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இம்ரான்கானின் வேண்டுகோளுக்கு இணங்க 2,107 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய சவுதி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தச் செய்தியை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். சவுதி – பாகிஸ்தானின் இந்த திடீர் நெருக்கம், குறிப்பாக அமெரிக்காவை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர், உலக அரசியல் விமர்சகர்கள்.