அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!”

“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!”

“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!”

அ.தி.மு.க-வைப் பற்றி, அதன் ஆட்சியைப் பற்றி, தலைவர்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அதற்கு உடனடி பதில் வருவது ஒருவரிடமிருந்துதான். அவர்தான், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். கூட்டணிக் கட்சிக்காகவும், தென்சென்னைத் தொகுதியில் தன் மகனுக்காகவும் பரபரப்பாகப் பரப்புரை செய்துகொண்டிருந்தவரைச் சில கேள்விகளோடு சந்தித்தேன்...

‘`ஜெயலலிதா இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. அ.தி.மு.க-வின் நீண்ட காலத் தொண்டனாக உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?’’

‘`அம்மாஇல்லாத தேர்தலை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆனால், தனக்குப் பின்னும் இந்தக் கழகம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்க வேண்டும் என்பதே அம்மாவின் கனவு. அவர் மறைந்துவிட்டதாக நாங்கள் நினைக்க வில்லை. இப்போதும் அவர்தான் எங்களை வழிநடத்துகிறார். அந்த நம்பிக்கையில்தான் தேர்தலைச் சந்திக்கிறோம். இப்போது நடப்பதும் அம்மாவின் ஆட்சிதான்.’’

“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!”

‘`அம்மாவின் ஆட்சி என்கிறீர்கள்... ஆனால் அவர் எதிர்த்த உதய் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை, தற்போது நடைமுறைப்படுத்துகிறீர்களே?’’

‘`தி.மு.க-வும் காங்கிரஸும்தான் நீட் தேர்வுக்கு விதை போட்டவை.  தமிழகத்துக்கு நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். தமிழகத்தின் நீண்ட கால நிலக்கரித் தேவைக்காகத்தான் உதய் திட்டம் கொண்டுவரப்பட்டது. மக்கள் நலனுக்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. மக்களுக்கான திட்டங்களைச் செய்துவருகிறது அம்மாவின் ஆட்சி.’’

‘`அ.தி.மு.க  தேர்தல் அறிக்கையில் பெரும்பாலும் ‘வலியுறுத்தப்படும், வலியுறுத்தப்படும்’ என்று உள்ளதே. கூட்டணி ஆட்சியில் ‘செய்து காட்டுவோம்’ என்ற உறுதியை உங்களால் தர முடியாதா?’’

‘`எல்லா மாநிலக் கட்சிகளின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையும் இப்படித்தான் இருக்கும். இதற்குமுன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க-வும், ‘கேட்டுக் கொள்கிறோம்’ என்ற ரீதியில்தான் சொல்லியிருந்தது. ‘செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸை வலியுறுத்தியதில்லை. தி.மு.க–வைப்போல் நாங்கள் ‘டபுள் கேம்’ ஆடவில்லை. மீத்தேன் திட்டம் முதல் ஸ்டெர்லைட் வரை எல்லாவற்றையும் கொண்டுவந்துவிட்டு, மாநில உரிமை குறித்து தி.மு.க பேசுவது வேடிக்கையானது. தி.மு.க தாரைவார்த்ததையெல்லாம் அ.தி.மு.க-தான் மீட்டெடுக்கிறது.’’

 ‘`முக்கிய பிரச்னைகளுக்கு எடப்பாடியும், பன்னீர் செல்வமும் எந்தக் கருத்தும் சொல்லாமல், உங்களிடம் அதை நகர்த்திவிட்டு மீடியாவை எதிர்கொள்ளச் சொல்வது ஏன்?’’

‘`அப்படிக் கிடையாது. இது ஒரு கூட்டுப் பொறுப்புதான். பல சந்தர்ப்பங்களில் எல்லோருமேதான் பத்திரிகையாளர் களைச்  சந்திக்கிறோம். சில நேரம் சுற்றுப்பயணத்தில் இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் நான் சில கருத்துகளைச் சொல்வேன். தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டாம்.’’

‘`சட்டமன்ற இடைத்தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்பதற்காகத்தான், மிக மோசமாக உங்கள் ஆட்சியை விமர்சித்த பா.ம.க–உடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களா?’’

‘`இல்லவே இல்லை. மத்தியில் நிலையான கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென்பதே எங்களது ஒருமித்த கருத்து. உள்ளாட்சியிலும் இந்தக் கூட்டணி தொடர வேண்டு மென்றுதான் கூட்டணித்தலைவர்கள் விரும்புகிறார்கள்.’’

  ‘`இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் வாக்குகளை டி.டி.வி.தினகரன் பிரிக்க வாய்ப்பிருக்கிறதே?’’

‘`டி.டி.வி என்ன... யாராலுமே எங்கள் வாக்குகளைப் பிரிக்க முடியாது. அ.தி.மு.க வாக்காளர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் வாக்கு இரட்டை இலைக்குத்தான். அ.தி.மு.க-விலிருந்து பிரிந்தவர்கள், நோட்டாவுக்குக் கீழேதான் வாக்கு வாங்குவார்கள்!’’

 ‘`கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ‘மோடியா, லேடியா...’ என்று ஜெயலலிதா பிரசாரம் செய்தார். ஆனால், இப்போது அதே மோடியுடன் கூட்டணி வைத்திருப்பது எதற்காக?’’

‘`அன்றைக்கு இருந்த சூழ்நிலை வேறு. இன்றைய சூழ்நிலையில் இந்தக் கூட்டணி தேவை.’’

 ‘`அ.தி.மு.க-வை வைத்துத் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறதா பா.ஜ.க?’’

‘`தேசிய அளவில் அது பெரிய கட்சி. தமிழகத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாகத் தேர்தலைச் சந்தித்து, பலர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் சென்றிருக்கிறார்கள். எங்கள் கூட்டணிக் கட்சிகள் எல்லாமே பலமாகத்தான் இருக்கின்றன. எங்கள் வலிமையை இந்தத் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்கள்.’’

‘`பா.ஜ.க வலிமையான கட்சி என்கிறீர்கள், ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் ‘Go Back Modi’ ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகிறதே?’’

‘`சமூக வலைதளக் களம் வேறு; எதார்த்தம் வேறு. இவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இதுபோல் ட்ரெண்ட் செய்ய நிறைய தனியார் சாஃப்ட்வேர் கம்பெனிகள் உள்ளன. அவர்கள் இதுபோன்ற போலி மாயையைச் செய்வார்கள். அதை வைத்து ஒரு ஆட்சியின் நிலையைக் கணிக்க முடியாது. மக்கள்தான் உண்மையான நீதிபதிகள். அவர்கள் இந்தத் தேர்தலில், இதுபோன்ற ஹேஷ்டேக் எல்லாம் பொய் என்று நிரூபிப்பார்கள்.’’

 ‘` `கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ என்று சொன்ன பா.ஜ.க இப்போது ஏன் கூட்டணி சேர்கிறது?’’

‘`ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அவரவர் கட்சியை வளர்ப்பதற்காக, இதுபோன்ற கருத்துகளைச் சொல்லத்தான் செய்வார்கள். ஆனால் கூட்டணி என்று வந்ததும், எல்லோருக்கும் ஒருமித்த கருத்துதான் உருவாகும். நேற்று நடந்தது இன்று மாறும். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.’’

“தினகரன் கட்சி நோட்டாவுக்கும் கீழே!”

‘`தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டை மக்கள் இன்னும் மறக்கவில்லையே?’’

‘`ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது தி.மு.க ஆட்சிக் காலத்தில் தான். ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றதும், ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்த உரிமத்தை ரத்து செய்திருக்கிறோம். நிலத்தை மீட்டிருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை. தவிர்க்க முடியாததால்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது. உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது. இப்போதும் தூத்துக்குடி மக்கள் பக்கம்தான் அரசு நிற்கிறது.’’

 ‘`ஒக்கி புயலின் போது, மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு சுணக்கம் காட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, மீன்வளத்துறை அமைச்சராக உங்கள் கருத்து என்ன?’’

‘`அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு. எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், மக்களுக்கு எச்சரிக்கை செய்தோம். மீன்பிடிக்கச் சென்றவர்களைக் கரைக்குத் திரும்ப வைத்தோம். முந்நூறு நாட்டிகல் மைல் தொலைவில் இருந்தவர்கள்தான் புயலின் போது பாதிக்கப்பட்டார்கள். காற்றின் வேகத்தால், அவர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றடைய முடியவில்லை. ஹெலிகாப்டர் அனுப்பியும் அவர்கள் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீனவர் இழப்பு துரதிருஷ்டவசமானது.”

- இ.லோகேஷ்வரி,  படங்கள்: சு.குமரேசன்