Published:Updated:

`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க!' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா

`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க!' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா
`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க!' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா

``நீங்களே ஒப்புக்கொள்கிறீர்களே... சின்னப் பையன்னு. வாங்க, எங்க மாணவர் அணியில ரெண்டு பேர அனுப்பி உங்களுக்கு டியூஷன் எடுக்கச்சொல்றோம்'' என்று கமலைச் சீண்டும்விதமாக தி.மு.க எம்.எல்.ஏ, டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


தி.மு.க-வுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல், `தி.மு.க-வை வெளிப்படையாக விமர்சிப்பேன். சட்டமன்றத்திலிருந்து கிழிந்த சட்டையுடன் வெளியே வரமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும், வேறு சட்டையுடன் வருவேன்' என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சாடினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின், `நான் அரசியல் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்' என்று பதிலடி கொடுத்தார்.

தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில், `கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று பிரசுரமானது. இதேபோல, உதயநிதி ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில், ``கிராம சபை கூட்டத்தை நான்தான் கண்டுபிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்" என்று ஸ்டாலின் கிராம சபை நடத்திய சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ  டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டரில், `இனிமேலாவது உங்களுக்கு  தெரிஞ்ச விஷயத்தைப் பேசுங்க. நீங்கதான் ஒத்துக்குறீங்களே... நீங்க சின்னப் பையன்னு. வாங்க, எங்க மாணவர் அணியில ரெண்டு பேர அனுப்பி உங்களுக்கு டியூஷன் எடுக்கச் சொல்றோம். இப்போ இது வேற'' என்று பதிவிட்டுள்ளார்.