Published:Updated:

''பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்தால்.....'' - அ.தி.மு.க-வை எச்சரிக்கும் தனியரசு

"தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்துவரும் பி.ஜே.பி-யுடன் எப்படி மனமுவந்து கூட்டணி வைத்துக்கொள்ள முடியும்?''

''பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்தால்.....'' - அ.தி.மு.க-வை எச்சரிக்கும் தனியரசு
''பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்தால்.....'' - அ.தி.மு.க-வை எச்சரிக்கும் தனியரசு

அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி முடிவு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, கும்மாங்குத்துகள் ஆரம்பித்துவிட்டன. `இது பொருந்தாக் கூட்டணி' என அ.தி.மு.க-வுக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் எழுந்துவரும் சூழலில், கூட்டணிக் கட்சியான `தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'யும் இக்கூட்டணிக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்நிலையில், `தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை'யின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தனியரசுவிடம் பேசினோம்...

``அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே `இது பொருந்தாக் கூட்டணி' என்று எதிர்ப்பது ஏன்?''

``அ.தி.மு.க-வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் ஈடுபட்டார். இந்நிகழ்வையடுத்த பல்வேறு சம்பவங்களும்கூட இந்த இரண்டு கட்சிகளிடையே கூட்டணி ஏற்படும் என்பதை உறுதி செய்கிறது. ஊடகமும் தொடர்ந்து இக்கருத்தைச் சொல்லிவருகிறது. அதனால்தான் `அ.தி.மு.க - பி.ஜே.பி இடையிலான கூட்டணி என்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது' என்ற கருத்தைப் பதிவு செய்தோம்.''

``அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?''

``கூட்டணியை அதிகாரபூர்வமாக அவர்கள் அறிவித்துவிட்டால், எங்கள் கட்சிக்குள் ஓர் ஆய்வு - விவாதத்தை நடத்திமுடித்து எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம். அது மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இருக்கும்.''

``அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி உறுதியாகிவிட்டால், தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்வீர்களா?''

``இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கேள்வி. ஏனெனில், இப்படியொரு சூழல் இதுவரை அமையவில்லை என்பதால், நாங்களும் எந்தவித நெருடலுமின்றி தமிழக அரசுக்குத் தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவந்திருந்தோம். ஆனால், இப்போது இப்படியொரு கூட்டணி அமையுமானால், எங்களுடைய கருத்தை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். அப்போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையில் எங்களுடைய முடிவு இருக்கும்.''

``பி.ஜே.பி-யுடன் கூட்டணி உருவாகிவிட்டால், அ.தி.மு.க அரசுக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வீர்களா?''

``கூட்டணி குறித்த உறுதியான முடிவை அவர்கள் அறிவித்துவிட்ட பின்னர்தான் எங்கள் முடிவை நாங்கள் சொல்லமுடியும். எனவே, அதற்காகக் காத்திருக்கிறோம். எது எப்படியென்றாலும்கூட, தமிழக அளவில் அ.தி.மு.க அரசுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ள மாட்டோம். ஏனெனில், இது ஜெயலலிதா உருவாக்கிய அரசு. மத்திய தேர்தல் கூட்டணியில்தான் எங்களுக்கு நெருடல் இருக்கிறதே தவிர, மாநில அரசு நிர்வாகத்தில் எந்தவொரு குறையும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, இதில் இரண்டுவிதமான பார்வைகள் இருக்கின்றன.''

``அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் கருணாஸ், தமிமூன் அன்சாரி ஆகியோரும் இதே முடிவில்தான் இருக்கின்றார்களா?''

``எங்கள் கட்சி முடிவை மட்டும்தான் நான் சொல்ல முடியும். மற்றபடி கருணாஸ், தமிமூன் அன்சாரி ஆகியோரது கருத்து என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்து நாங்கள் யாரும் கூடிப்பேசி ஆலோசிக்கவுமில்லை. 

ஏற்கெனவே கருணாஸ், அ.தி.மு.க-வின் பல அணிகளிலும் இருந்துள்ளார். இந்த அரசையும்கூட கடுமையாக விமர்சித்தார். ஆனால், இப்போது `இந்த அரசுடன்தான் சமாதானமாகப் போவதாகவும் ஐந்து ஆண்டு முழுமையாக ஆதரவு தருவதாக'வும் கூறியிருக்கிறார். தமிமூன் அன்சாரியும்கூட இவ்விஷயத்தில், முடிவெடுக்க முடியாத சூழலில் இருந்துவருகிறார். எனவே அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியை யாருமே முழுமையாக ஆதரிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.''

``பி.ஜே.பி மீது அப்படி என்ன வெறுப்பு?''

``காவிரி, மேகதாது, மீத்தேன், நீட், எழுவர் விடுதலை எனத் தமிழகப் பிரச்னைகள் அனைத்திலும் தொடர்ந்து எதிர்நிலையை எடுத்துவந்த கட்சிதான் மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி.! 

ஈழத்தமிழர் விவகாரத்திலும்கூட தமிழர்களின் மனதை ரணப்படுத்தும்விதமாக கொடுங்கோலன் ராஜபக்‌ஷேவுக்கு இன்றைக்கு வரையிலும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பளித்துவருகிறது இந்திய அரசு. தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்துவரும் பி.ஜே.பி-யுடன் எப்படி மனமுவந்து கூட்டணி வைத்துக்கொள்ள முடியும்?''

``பி.ஜே.பி தவிர்த்து அ.தி.மு.க யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

``தேசியக் கட்சிகளான பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் எதிராக ஏராளமான துரோகங்களை செய்துமுடித்த கட்சிகள். எனவே, இவ்விரு கட்சிகளைத் தவிர்த்து அ.தி.மு.க யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்!''