Published:Updated:

ஜெயலலிதாவுக்கு 4,537... எடப்பாடிக்கு 1,737... செல்வாக்கை இழக்கிறதா அ.தி.மு.க?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டியதில்லை. சிம்பிளாக ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடலாம். அதுதான் விருப்ப மனு!

ஜெயலலிதாவுக்கு 4,537... எடப்பாடிக்கு 1,737... செல்வாக்கை இழக்கிறதா அ.தி.மு.க?
ஜெயலலிதாவுக்கு 4,537... எடப்பாடிக்கு 1,737... செல்வாக்கை இழக்கிறதா அ.தி.மு.க?

110 விதி முதல் விளம்பரம் வரையில் அப்படியே ஜெயலலிதாவை ஃபாலோஅப் செய்கிறார் எடப்பாடி. `அம்மா வழியில் நடக்கும் அரசு' என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அம்மாவைப் போல இவருக்கு மவுஸ் இருக்கிறதா? ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கட்சியில் இருக்கும் செல்வாக்கு என்ன, ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க பலவீனமாக இருக்கிறதா? 

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டியதில்லை. சிம்பிளாக ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடலாம். அதுதான் விருப்ப மனு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப் போகிறார்கள். அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து பிப்ரவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையில் விருப்ப மனுக்களை அ.தி.மு.க. வாங்கிய நிலையில் கால அவகாசத்தை 14-ம் தேதி வரை நீட்டித்தது. அந்த அவகாசமும் முடிவடைந்துவிட்ட பிறகு மொத்தம் 1,737 பேர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். 

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார். அப்போது 2013 டிசம்பரிலேயே விருப்ப மனு வாங்கும் வைபவத்தை ஜெயலலிதா முடித்துவிட்டார். இந்தத் தேர்தலில் ஜெயலலிதா இல்லாத நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தாமதமாக விருப்ப மனுவை வாங்கி முடித்திருக்கிறார்கள். விருப்ப மனு விண்ணப்பக் கட்டணமாக 25,000 ரூபாய் வசூலித்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே தொகைதான் வசூலிக்கப்பட்டது. 

2013 டிசம்பர் 19-ந் தேதி முதல் 27-ம் தேதி வரையில் 9 நாள்கள் விருப்ப மனு வாங்கினார் ஜெயலலிதா. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடியும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் 11 நாள்கள் விருப்ப மனு விண்ணப்பங்களை விநியோகித்திருக்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவைவிட 2 நாள்கள் அதிகம். 

ஜெயலலிதா இருந்தபோது மொத்தமாக 40 இடங்களுக்கு 4,537 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால், இப்போது வந்ததோ வெறும் 1,737 மனுக்கள்தாம். ஜெயலலிதா காலத்தைவிட எடப்பாடி காலத்தில் சுமார் இரண்டு மடங்குக்கும் குறைவாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஜெயலலிதா காலத்தில் விருப்ப மனு அளித்த 4,537 மனுக்களில், 1,175 மனுக்கள் ஜெயலலிதா, தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து அளிக்கப்பட்டன. இந்த மனுக்களைக் கழித்தால் 3,362 மனுக்கள் விருப்ப மனுவுக்கு வந்தன. இந்த அளவைக்கூடப் பன்னீராலும் எடப்பாடியாலும் எட்ட முடியவில்லை.

ஜெயலலிதா காலத்தில் விருப்ப மனு மூலம் கிடைத்த தொகை 11,34,25,000 ரூபாய். பன்னீரும் எடப்பாடி காலத்தில் விருப்ப மனு மூலம் பெற்ற தொகை வெறும் 4,34,25,000 ரூபாய் மட்டுமே. 

இதெல்லாம் ஐந்து வருடத்துக்கு முந்தைய ஒப்பீடு. இரண்டரை ஆண்டுக்கு முன்பு உள்ள ஒப்பீட்டையும் பார்ப்போம். கடந்த 2016 சட்டசபைத் தேர்தல் நடைபெற்றபோதும் ஜெயலலிதா உயிருடன் இருந்தார். அப்போது  அ.தி.மு.க.,வில் 21,000 ரூபாய் விருப்ப மனுக்கள் பெறப்பட்டதில் 23 கோடி ரூபாய் வசூல் ஆனது. 

விருப்ப மனுவை வைத்துப் பார்த்தால் அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.