அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்!

பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்!

பா.ஸ்ரீகுமார்

டுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது ஒரு கட்சியா, கூட்டணியா என்ற கேள்விக்கு, வரும் மே 23-ம் தேதி விடை கிடைக்கும். எந்தக் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத் தாலும், தனிக்கட்சி ஆட்சி அமைத்தாலும் பிரதமரைத் தீர்மானிக்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 10 காரணிகள்... 

பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்!

மந்திர எண் 273

மத்தியில் ஆட்சி அமைக்க 273 எம்.பி–க்களின் ஆதரவு தேவை. கடந்த 2014-ம் ஆண்டு  தேர்தலில் மோடியை முன்னிறுத்திய பா.ஜ.க–விற்கு 282 தொகுதிகள் கிடைத்ததால், அறுதிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிந்தது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்கள், பா.ஜ.க–விற்கு ஏராளமான எம்.பி–க்களை அள்ளிக்கொடுத்தன. உ.பி-யில் மட்டும் 71, மஹாராஷ்டிராவில் 24, பீகாரில் 22 என மூன்று மாநிலங்களிலிருந்து மட்டுமே 117 எம்.பி–க்கள் கிடைத்தனர். இந்த முறை இதே மூன்று மாநிலங்களில் அத்தனை இடங்களில் வெல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.

உ.பி-யில் கீரியும் பாம்புமாக இருக்கும் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் பா.ஜ.க–விற்கு அங்கே 30 எம்.பி கிடைப்பதே கடினம் என்கிறார்கள். 2014-க்குப் பிறகு நடந்த மக்களவைக்கான இடைத்தேர்தல் நடந்த 23 தொகுதிகளில், வெறும் 4 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. குறிப்பாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்களவைத் தொகுதியான கோரக்பூரில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியது. உ.பி, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தன் வசமிருந்த தொகுதிகளை சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளிடம் பறிகொடுத்தது பா.ஜ.க.

கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தல்களிலும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை இழந்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களில், கடந்த மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 65 தொகுதிகளில் 62 தொகுதிகளை பா.ஜ.க வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது. எனவே, இந்தத் தேர்தலில் கடுமையான போராட்டத்தை பா.ஜ.க எதிர்நோக்கியுள்ளது. அதற்காக, காங்கிரஸ் கட்சிக்கும் அங்கு சுலபமாக வெற்றி கிடைக்கும் என்று கூறமுடியாது. தென்மாநிலங்களிலும் அதிகபட்சம் 15 இடங்களை பா.ஜ.க பிடிப்பதே கஷ்டம்தான். பா.ஜ.க ஆளும் குஜராத், உத்தர்காண்ட், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் எம்.பி–க்களின் எண்ணிக்கை குறைவுதான். நாடு முழுவதும் மாநிலக் கட்சிகளின் கைகள் ஓங்கி இருப்பதால், இந்த முறை கூட்டணி ஆட்சிக்கே அதிக வாய்ப்புண்டு.

மோடி தலையில் கத்தி!

பா.ஜ.க–விற்குத் தனித்து ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க முற்படும்போது, பிற கட்சிகளின் ஆதரவை நாடவேண்டி வரும். அதன்படி பார்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி, சிரோமணி அகாலி தளம், பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளுக்கு அதிக எண்ணிக்கையில் மக்களவை உறுப்பினர்கள் கிடைத்தால் இந்தக் கட்சிகள் நிச்சயம் ஆதரவு தெரிவிக்கும். அதற்கு வாய்ப்பில்லாதபட்சத்தில், தற்போது பா.ஜ.க–வை எதிர்த்துக் களத்தில் நிற்கும் எதிர்க்கட்சிகள் ‘அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை’ என்று கூறி, ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கவும் வாய்ப்புண்டு. அமைச்சரவையில் முக்கியமான பதவிகளைப் பெற்று உள்ளிருந்து ஆதரவு, மற்றொரு தேர்தலை மக்கள்மீது புகுத்தக் கூடாது என்ற அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு என்று தெரிவித்துத் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வார்கள். தி.மு.க தொடங்கி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் வரை எந்தக் கட்சியும் இப்படிச் செய்யாது என்று யாராலும் சொல்லமுடியாது. ஆனால், பா.ஜ.கட்சி ஆட்சிக்கு ஆதரவு; மோடிக்கு இல்லை என்று சொல்லும் வாய்ப்பு அதிகம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், மோடியைக் கழற்றி விட வேண்டிய கட்டாயம், பரிவாரங்களுக்கும் பா.ஜ.க–வுக்கும் ஏற்படலாம்.

குற்றச்சாட்டுகள்!

மத்திய அரசோ, மாநில அரசோ ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒரு நேர்மையான ஆட்சியை வழங்கும் என்பது  இந்திய மக்களுக்குப் பகல் கனவு போலத்தான் இருக்கிறது.  தேர்தல் பிரசாரத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்பதுதான் பிரதானக் கட்சிகளின் பிரசாரமாக இருக்கிறது. ஆனால், அதே கட்சிகள் அமர்ந்தவுடன் வித விதமான ஊழலில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில், ரஃபேல் விமான ஊழல் குற்றச்சாட்டு தவிர, பெரிதாக எந்தப்புகாரும் இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு, ஏழை மற்றும் நடுத்தட்டு வர்க்கத்தை அழிப்பதில் பிரதமர் மோடியின் திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது. கூட்டணி ஆட்சியின் பிரதமர் என்று வரும்போது, அவர்மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் விஸ்வரூபமெடுக்கும்.

பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்!

இன்னொருபுறம் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா என்று எதிர்க்கட்சியினர்மீது ரெய்டை ஏவி, ‘அவர்கள் தேர்தலில் பணம் கொடுக்கப் பார்க்கிறார்கள். ஊழல்வாதிகள்’ என்ற பிம்பத்தை உருவாக்க பா.ஜ.க. படாதபாடு படுகிறது. ஆனால், அ.தி.மு.க போன்ற பா.ஜ.க கூட்டணிப் பங்காளிகள் எவ்வளவு பெரிய ஊழல்வாதிகள் என்பதையும், அவர்கள் தேர்தலில் பணம் கொடுப்பதில் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் மக்கள் உணர்ந்திருக் கிறார்கள். மேலும், இந்த நடவடிக்கைகள் பாரபட்சமாக இருப்பதே பா.ஜ.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

அலை... அலை!

எமர்ஜென்சிக்குப் பின் 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில், எமர்ஜென்சியைக் கொண்டு வந்த இந்திராவுக்கு எதிரான அலை வீசியது. இந்திரா காந்தி தனது பாதுகாப்புப்படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்ட பின், 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசம் முழுவதும் வீசிய அனுதாப அலையில் காங்கிரஸ் கட்சி வென்றது. ராஜீவ் காந்தி பிரதமரானார். அதேபோல ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபின்பு, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலையில் காங்கிரஸ் மீண்டும் வென்றது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார்.

உண்மையில், கடந்த 2014-ம் ஆண்டுத் தேர்தலில் மோடி அலை இருந்தது என்பதை விட,  காங்கிரஸின் ஊழலுக்கு எதிரான அலையே பெரிதாக இருந்தது. அந்த ஊழலிலிருந்து தேசத்தை மோடியால் மட்டுமே மீட்க முடியும் என்ற பிம்பத்தை பா.ஜ.க–வின் பரப்புரையும் வியூகமும் உருவாக்கின. ஆனால் இந்தத் தேர்தலில் எந்த ஓர் அலையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தென்மாவட்டங்களில் பா.ஜ.க மீது நிலவும் அதிருப்தி, விவசாயிகள் மற்றும் சிறுவணிகர்களிடம் இருக்கும் மோடி எதிர்ப்பலை என்பது இந்தத் தேர்தலைத் தீர்மானிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாக்குறுதியா, முழக்கமா?

தேர்தல் காலத்தில் அரசியல்கட்சிகள் அளிக்கக்கூடிய வாக்குறுதிகள் அனைத்தும், தண்ணீரில் வரையும் கோலங்கள் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனாலும் மறுபடியும் மறுபடியும் இத்தகைய வாக்குறுதிகளை வாரியிறைக்கின்றன கட்சிகள். மக்களும் நம்புகிறார்கள். 2014-ம் ஆண்டு தேர்தலில் ‘அச்சே தின்’ - ‘வரும் நாள்கள், நல்ல நாள்கள்’ என்ற பா.ஜ.க–வின் கோஷம் மக்களைச் சேர்ந்தது. இந்தத் தேர்தலில்  ‘நானும் காவலாளிதான்’ என்ற கோஷம், வாஜ்பாய் ஆட்சி முடிந்தபின் மீண்டும் வந்த தேர்தலில் பா.ஜ.க முன்வைத்த ‘ஒளிரும் இந்தியா’ என்ற முழக்கத்தைப் போல  மக்களைக் கவரவில்லை. ‘ஒளிரும் இந்தியா’ என்ற முழக்கம், கேட்பதற்குக் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அதை மக்கள் ஏற்கவில்லை.

இந்த முறை காங்கிரஸ் கட்சியும் எந்த முக்கிய முழக்கத்தையும் முன் வைக்காமல், ‘பாதுகாவலரே திருடர்’ என்ற எதிர்மறை அரசியலை நடத்துகிறது. ஆண்டுக்கு 6,000 ரூபாய் என்று மோடி ஒரு திட்டத்தை அறிவிக்க, ஐந்து கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் தருவதாக வாக்குறுதியை வாரித் தந்துள்ளார். மோடி அல்லது ராகுல் பிரதமராகும்பட்சத்தில் இந்தத் திட்டங்களை நீட்டிக்க வேண்டும் அல்லது நிறைவேற்ற வேண்டும். அது இயலாத பட்சத்தில், வாக்குறுதியைத் தந்தவர்களை பிரதமர் நாற்காலியில் ஏற்றுவதற்குக் கூட்டணிக் கட்சிகள் முன்வருவது சந்தேகமே.

நல்லிணக்கம்

தீண்டத்தகாத கட்சியல்ல என்று பா.ஜ.க-வுடன் கருணாநிதி உட்பட பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களும் கைகோத்தபோதும், வாஜ்பாயை மட்டுமே பிரதமராக ஏற்றுக் கொண்டனர். அதற்கு அவர் காட்டிய நல்லிணக்க முகம் ஒரு காரணம். அத்வானி அப்போது பலருக்கும் வேண்டாதவராய் இருந்ததால், கூட்டணி ஆட்சியில் அவர் பிரதமராக முன்னிறுத்தப்படவில்லை. அதே அதிருப்தி, மோடியின் மீது சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் எனப் பல தரப்பினருக்கும் இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்று வரும்போது, எல்லாத் தரப்பினரும் ஏற்கும் பிரதமர் ஒருவரையே மாநிலக்கட்சிகள் முன்னிறுத்தும். அந்த வகையில், மோடிக்கு முடி சூடுவதில் சிக்கல் ஏற்படும். வேறு கட்சியின் தலைமையில் ஆட்சி என்றால், இந்த விவாதமே எழாது.

பிரதமரைத் தீர்மானிக்கும் டாப் 10 விஷயங்கள்!

டிஜிட்டலே துணை

நரேந்திரமோடியை வளர்ச்சியின் நாயகனாகச் சித்திரித்து, அதைப் பல கோடி மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை, சமூக ஊடகங் களையே சேரும். ஐ.டி.விங்க் என்ற ஒன்றை உருவாக்கி, அதை வைத்து தொடர்ந்து செய்திகளை, காட்சிகளை, புள்ளி விவரங்களை, வளர்ச்சி என்ற மாயையை உருவாக்குவதில் ‘சோசியல் இன்ஜினீயரிங்’கின் பங்களிப்பு மகத்தானது. கடந்த தேர்தலில் மோடி எடுத்த அதே அஸ்திரத்தை வைத்து, இப்போது அவரையே வீழ்த்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். மோடி பிரதமர் ஆனதற்கு டிஜிட்டலின் உபயம் அதிகமாய் இருந்ததைப் போல, பல கோடி மக்களிடம் ராகுல் பிரதமர் வேட்பாளர் என்ற விதையை விதைத்திருக்கிறது சோசியல் இன்ஜினீயரிங். இந்த டிஜிட்டல் உத்தி கைக்குக் கைகொடுக்குமா?

நிஜமான காவலாளிகள்!

விண்வெளியில் செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்துவதற்கு பிரதமர் பெருமிதப்படுவதில் தவறில்லை. ஆனால், அதை அறிவிப்பது அவரது வேலையில்லை என்கிறார்கள், அதுவும் தேர்தல் நேரத்தில். ‘பாதுகாப்பான கைகளில் தேசம்’ என்று நாட்டின் பாதுகாப்பை மையமாக வைத்து, பரப்புரையில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க.

ஆனால் நாடு விடுதலையான காலத்திலிருந்து, ஒரே தீவிரவாதத் தாக்குதலில் 40 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தது, மோடி ஆட்சியில்தான். ‘பாகிஸ்தான்மீதான ராணுவத் தாக்குதலைச் சந்தேகப்படுபவர்கள் தேசவிரோதிகள்’, ‘நான் மட்டுமே தீவிரவாதிகளை அடக்குவதில் வலிமையானவன்’ என்று மோடி சுயதம்பட்டம்  அடித்துக்கொள்கிறார். ஆனால் இந்த தேசப்பற்று பிளாக்மெயில் மோடிக்குக் கைகொடுப்பதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

கல்வி, வேலைவாய்ப்பு

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள், பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். கல்விக்கூடங்களும், பட்டதாரிகளும் அதிகமாகிக் கொண்டே போக, கல்வியின் தரமும் வேலை வாய்ப்பும் குறைந்துகொண்டே போகின்றன. 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று பா.ஜ.க வாக்குறுதி தந்தது. ஆனால் ஏற்கெனவே வேலையில் இருந்தவர்கள் சுமார் ஒன்றரைக் கோடிப்பேர் வேலை இழந்துள்ளனர் என்ற விவரம் அதிர்ச்சி தருகிறது. இந்திய இளைஞர்களின் இந்தக் கோபமும் புதிய பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும்.

பொருளாதாரம்

உலகப் பொருளாதார வளர்ச்சியில் 2020-ம் ஆண்டு சீனாவைப் பின்னுக்குத்தள்ளி 3-வது பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெறும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் விவசாயம், தொழில்துறையின் வளர்ச்சி பின்னோக்கிப் போய்க் கொண்டி ருக்கிறது. அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை நிறைவேற்றும் அதே நேரத்தில் விவசாயத்தையும் சிறுதொழில்களையும் காப்பாற்றும் ஒருவரே தங்கள் பிரதமராக வேண்டுமென்று பல கோடி விவசாயிகளும், தொழில் முனைவோரும் நினைக்கின்றனர்.

காலம் என்ன நினைத்திருக்கிறதோ?