அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா?

இரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா?
பிரீமியம் ஸ்டோரி
News
இரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா?

- தேர்தல் 2019: இந்த வாரம் அ.தி.மு.க.

இரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா?

அ.தி.மு.க.வை தொடங்கி நிலையில் சில காலம் கழித்து, திடீரென்று செய்தியாளர்களை அழைத்த எம்.ஜி.ஆர், ‘‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதனை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்’’ என்றார்.  ``அண்ணாயிஸம் என்றால் என்ன?’’ என பத்திரிகை யாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``சோசலிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் ஆகியவற்றில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் அதுதான் அண்ணாயிஸம்!” என விளக்கம் அளித்தார். ‘அண்ணாயிஸம்’ படைத்த எம்.ஜி.ஆர் கட்சியின் இன்றைய கொள்கை ‘அடிமையிஸம்’.

எம்.ஜி.ஆர் அப்போலோவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது நடைபெற்ற 1984 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாதான் ஸ்டார் பேச்சாளர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியும், கொ.ப.செ ஜெயலலலிதாவும் உரிமை கொண்டாட... கட்சி பிளவுபட்டது. அப்போது நடைபெற்ற 1989 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியபோது ஜெயலலிதா அணி அதிக இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

அதன்பின் கட்சி ஜெயலலிதா வசம் வந்தபிறகு 1991 சட்டசபைத் தேர்தலில் வென்று, ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா. 1991 - 1996 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அவலங்களால் அடுத்து வந்த 1996 சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது

இரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா?

அ.தி.மு.க. ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றுப் போனார். ‘’சசிகலாவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை’’ என அறிவித்தார் ஜெயலலிதா. அந்த அறிவிப்பு நீண்டநாள்களுக்கு நீடிக்கவில்லை.
தேர்தலில் தோற்றுத் துவண்டுபோயிருந்த அ.தி.மு.க-வை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெயலலிதா, அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யோடு கூட்டணி வைத்தார். பா.ம.க., ம.தி.மு.க. கட்சிகளையும் அணியில் இணைத்தார். 18 இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க, மத்தியில் அமைந்த வாஜ்பாய் அமைச்சரவையில் சேர்ந்தது. அப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த கருணாநிதி ஆட்சியைக் கவிழ்க்க வாஜ்பாய்க்கு நிபந்தனை வைத்தார் ஜெயலலிதா. அது நிறைவேறாமல் போனபோது காங்கிரஸுடன் சேர்ந்து வாஜ்பாயைக் கவிழ்த்த ஜெயலலிதா, அடுத்து வந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தார். 10 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது அ.தி.மு.க.

அடுத்து வந்த 2001 சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியில் அமர்வதற்காக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கியது அ.தி.மு.க. மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்களுக்கு சற்று அதிகமாகதான் போட்டியிட்டது.

132 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி நள்ளிரவு கைது தொடங்கி ரேசன் கார்டுகளில் எச் முத்திரை குத்தியது வரையில் அ.தி.மு.க. ஆட்சி மீது கடும் அதிருப்தி நிலவிய நிலையில்தான் 2004 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. மீண்டும் பி.ஜே.பி-யோடு கூட்டணி சேர்ந்து அடுத்து வாஜ்பாய்தான் பிரதமர் ஆவார் என பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. ‘நாற்பதும் நமதே! நாடாளுமன்றமும் நமதே!’ என்ற கோஷத்துடன் தேர்தல் களத்துக்குள் புகுந்த அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் தோற்றது. பொடா சட்டத்தில் வைகோ, நக்கீரன் கோபால் கைது, கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், அரசு ஊழியர்கள் 1.72 லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்தது போன்றவை அ.தி.மு.க-வுக்கு படுதோல்வியை ஏற்படுத்தின. 1996 தேர்தலுக்குப் பிறகு இப்படி படுதோல்வி அடைவது அ.தி.மு.க-வுக்கு இரண்டாவது முறை.

இரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா?

அடுத்து வந்த 2006 சட்டபைத் தேர்தலுக்கு முன்பு அனைத்தையும் சரி செய்ய ஆரம்பித்தார் ஜெயலலிதா. விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க.-வோடு தேர்தலை எதிர்கொண்டது அ.தி.மு.க. 61 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியானது. அதன்பின் 2009 நாடாளுமன்றத் தேர்தலை பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எதிர்கொண்டது அ.தி.மு.க. 23 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வென்றது. அடுத்தடுத்து மூன்று தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் 2011 சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சி.பி.எம்., சி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணி, இந்திய குடியரசுக் கட்சி ஆகிய 10 கட்சிகள் போட்டியிட்டன. விஜயகாந்த்தை ‘குடிகாரர்’ என விமர்சித்த ஜெயலலிதா, அவரை கூட்டணியில் சேர்த்தால்தான் ஜெயிக்க முடியும் என நினைத்தார். சீட் பேரத்தில் விஜயகாந்த் முரண்டு பிடித்தபோது இறங்கி வந்து தொகுதிகளை ஒதுக்கினார்.

 இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மாணவர்களுக்கு லேப்டாப் என்கிற அ.தி.மு.க.-வின் தேர்தல் அறிக்கைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. 160 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மொத்தமாக 203 தொகுதிகளைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க-வுக்கு கிடைக்கவில்லை. அதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 2011 தேர்தலில்தான் அ.தி.மு.க. அதிகபட்ச இடங்களைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு இன்னொரு வகையில் தேர்தல் கமிஷனும் காரணமாக இருந்தது. தேர்தலில் உண்மையான வெற்றியை பெற்றது தேர்தல் கமிஷன்தான். விதிகளை கடுமையாக அமல் படுத்தியதால்தான், அது சாத்தியமானது.

அதன்பின் நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க-வுக்கே வெற்றி வாய்த்தது. ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக கட்சியினர் முன்நிறுத்தினார்கள். இந்தியா முழுவதும் பா.ஜ.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற நிலையில், அதற்கு எதிர்மாறாக தமிழகத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கூட்டணி பலத்துடன் களமிறங்கிய எதிர்க்கட்சிகளை ஊதித்தள்ளியது அ.தி.மு.க. மோடி அலையைத் தாண்டி தமிழகத்தில் எழுந்த லேடி அலையால் 37 இடங்களில் வெற்றி பெற்றது அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற அந்தஸ்தைப் பெற்றது.

இரட்டை(யர்) இலைக்கு எழுச்சியா, வீழ்ச்சியா?

அடுத்து வந்த 2016 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி மாறி தி.மு.க. ஆட்சி அமையும் என்கிற பலரின் எதிர்பார்ப்பு பொய்த்து ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்தது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க. ஆளுமை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அப்போலோவில் ஆரம்பித்து ஜெயலலிதா சமாதி வரையில் நடந்த அக்கப்போர்கள் ஏராளம். ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை அமர வைக்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மோடி சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னார். அதுவரை ஆதரவு கரம் நீட்டிய பி.ஜே.பி, ஆட்சியில் அமர துடித்த சசிகலாவுக்கு பிறகு சிவப்புக்கொடி காட்டியது.

சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு முதல்வர் ஆன எடப்பாடி மோடிக்கு ஏற்ற மூடி ஆனார். இடையில் தர்மயுத்தம் நடத்தப்போன பன்னீரையும் பதமாக தடம் மாற்றினார்கள். எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து வந்த போதெல்லாம் உதவியது பி.ஜே.பி.

ஆளுநர் மாளிகை அரசியல், ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எடப்பாடி அரசிடம் அனுமதி, சேகர் ரெட்டி ரெய்டு, தலைமைச் செயலகத்தில் சோதனை, விஜய பாஸ்கர் வீடுகளில் சோதனை, இரட்டை இலை முடக்கம் என ஏகப்பட்ட விஷயங்கள் அரங்கேறின. சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு, தேர்தல் கமிஷன், வருமானவரி துறையை வைத்து மிரட்டியதால் அண்ணா தி.மு.க. அடிமை தி.மு.க. ஆனது. அதை வைத்தே மிரட்டி கூட்டணி வைத்திருக்கிறது பா.ஜ.க.  ``அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு..’’ ``சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானம் இல்லை! அதில் ஈனம் இல்லை! அவர் எப்போதும் வால் பிடிப்பார்!’’ என எம்.ஜி.ஆர் பாடியது தீர்க்கதரிசனமாக இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் மீதான அதிருப்தி, ஓட்டைப் பிரிக்கும் தினகரன் இதைத் தாண்டி அ.தி.மு.க கூட்டணி வெற்றியைப் பறிக்குமா, எதிர்க்கட்சிகள் மீது மட்டும் பாயும் ‘சோதனை’கள், காசைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற தைரியம் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்குக் கை கொடுக்குமா?

மே 23 - விடை சொல்லும்.

-  எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி