Published:Updated:

`அரசியல் விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகள்!’ - கூகுள், ஃபேஸ்புக் திட்டம்

`அரசியல் விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகள்!’ - கூகுள், ஃபேஸ்புக் திட்டம்
`அரசியல் விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகள்!’ - கூகுள், ஃபேஸ்புக் திட்டம்

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர இருப்பதாக கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. 

வாக்குப்பதிவை ஒட்டி 48 மணிநேரத்துக்கு சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி நரேஷ் பாட்டீல் மற்றும் நிதின் ஜம்தார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து விளக்கமளிக்க கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தனர். 

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தலில் வெளிநாடுகள் தலையிடுவதைத் தடுக்கும்  வகையில், அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்குப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட இருப்பதாக கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக் தரப்பில், அரசியல் தொடர்பான விளம்பரங்களைப் பதிவிடுவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது, விளம்பரங்கள் குறித்து பொறுப்புத் துறப்பு அறிவிப்பு மற்றும் விளம்பரங்களைப் பதிவிட்டவரின் விவரங்களை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் தேர்தல் நேரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டைத் தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போல இந்தியாவிலும் நடவடிக்கைகளை எடுக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உறுதிபூண்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், போலியான கணக்குகள், போலியான செய்திகளை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்தது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டவை போன்ற விதிமுறைகள் வரும் 21-ம் தேதி முதல் இந்தியாவிலும் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரங்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த 14-ம் தேதியே அமலுக்கு வந்துவிட்டதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோரின் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்றும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு வெவ்வேறு நாள்களில் நடைபெறுவதால், வாக்குப்பதிவு முந்தைய 48 மணி நேரத்துக்கு அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதிப்பது நடைமுறையில் சிக்கலானது என்றும் அந்த நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த இந்த விதிமுறைகள் போதுமானவையா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.