Published:Updated:

கூட்டணிக்கு பா.ம.க. வைத்த 10 கோரிக்கைகள்!

கூட்டணிக்கு பா.ம.க. வைத்த 10 கோரிக்கைகள்!
கூட்டணிக்கு பா.ம.க. வைத்த 10 கோரிக்கைகள்!

இதோ, அதோ என்று இழுத்து வந்த அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி ஒருவழியாக முடிந்துவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 21 சட்டமன்றத் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பது என பா.ம.க.வும் முடிவெடுத்துள்ளது. இதற்கான கூட்டணி உடன்படிக்கையில், இன்று பிப்ரவரி 19-ம் தேதி, மகம் நட்சத்திரம் பிறந்த பின்னர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் கோ.க.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்

ஜெயலலிதா இருந்தவரையில் அ.தி.மு.க. கூட்டணி உடன்படிக்கைகள், அவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் தான் கையெழுத்தாகும். இம்முறை சென்னை அடையாறு கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் கையெழுத்தானது. அ.தி.மு.க. தரப்பில் கே.பி.முனுசாமியும், பா.ம.க. தரப்பில் கோ.க.மணியும் நேரடி தொடர்பாளர்களாக இருந்து கூட்டணியை இறுதி செய்துள்ளனர். 7 நாடாளுமன்றத் தொகுதிகளோடு, ஒரு மாநிலங்களவை தொகுதியும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

ராமதாஸால் தொடங்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக, அவரின் மருமகளும், அன்புமணியின் மனைவியுமான செளமியா அன்புமணி இருந்து வருகிறார். அவரை ராஜ்ய சபா எம்.பி. ஆக்கலாம் என்று தைலாபுரம் குடும்பத்துக்குள் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி திரைமறைவு பேச்சுவார்த்தையில் பல 'டிமாண்டு'கள் பேசப்பட்டாலும், தனக்கே உரிய மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியை இறுதி செய்துள்ளார் ராமதாஸ். 

1. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்து வந்த காவிரி பாயும் டெல்டா மாவட்டங்கள் இப்போது ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவும், பெட்ரோ கெமிக்கலில் முதலீடு மண்டலமாகவும் மாறி வருகிறது. இதனால் உழவர்களிடையே கடுமையான கோபம் நிலவுகிறது. அந்த கோபத்தை தணிக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் தொடங்கி, புதுக்கோட்டை - ராமநாதபுரம் மாவட்ட எல்லை வரையில் உள்ள காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்கான சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

2. கோதாவரி - காவிரி இணைப்பு, அத்திக்கடவு - அவினாசி திட்டம், பாலாறு பாசனத் திட்டம், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் என்று நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 21 பாசனத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

3. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைக்கவுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தான் சமூகநீதி யாருக்கு தேவை என்பதை கண்டறிய முடியும். தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

4. ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தும், இதுவரையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள பரிந்துரையை திருப்பி அனுப்பச் செய்து, பின்னர் அதே பரிந்துரையை அமைச்சரவை மீண்டும் அனுப்பும்பட்சத்தில், ஆளுநர் அதில் கட்டாயம் கையெழுத்திட்டாக வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

5. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கடந்த 38 ஆண்டுகளாக மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 2016, 2017 ஆண்டுகளில் தலா 500 மதுக்கடைகளை மூடியது. அதன்பிறகு எந்த மதுக்கடைகளும் மூடப்படவில்லை. வாக்குறுதியை கடைப்பிடிக்கும் விதமாக, உடனடியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும். மீதமுள்ள கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

6. தமிழகத்தில் செயற்கை மணல் உற்பத்தியும், வெளிநாட்டு மணல் இறக்குமதியும் அதிகரிப்பதன் மூலம், இப்போது செயல்பாட்டில் உள்ள மணல் குவாரிகளை படிப்படியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை போக, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், காவிரியில் மேகதாது அணைக்குத் தடை, வேளாண் கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு என 10 மக்கள் நலன் கோரிக்கைகளை கூட்டணி கட்டுப்பாடுகளாக ராமதாஸ் விதித்துள்ளார்.