Published:Updated:

`எங்களோடு குடிநீர் தூக்க வந்து பாருங்க... எங்க கஷ்டம் புரியும்!’ - தம்பிதுரையை முற்றுகையிட்ட பெண்கள்

`எங்களோடு குடிநீர் தூக்க வந்து பாருங்க... எங்க கஷ்டம் புரியும்!’ - தம்பிதுரையை முற்றுகையிட்ட பெண்கள்
`எங்களோடு குடிநீர் தூக்க வந்து பாருங்க... எங்க கஷ்டம் புரியும்!’ - தம்பிதுரையை முற்றுகையிட்ட பெண்கள்

``நாங்க வயசான காலத்துல, தினமும் குடிநீருக்காக ஒரு கிலோமீட்டர் தூரம் போறோம். குடிநீருக்காக நாங்க படுற அவஸ்தை கொஞ்சநஞ்சம் இல்லை. எங்களோடு ஒருநாள் நீங்க தண்ணீர் தூக்க வந்து பாருங்க. எங்க கஷ்டம் புரியும்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை பெண்கள் முற்றுகையிட்டு, கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் மையத்தில் இருக்கும் கரூர் மாவட்டம் வறட்சி மிகுந்த மாவட்டங்களில் ஒன்று. இங்குள்ள 70 சதவிகித கிராம மக்கள் குடிநீர் பிரச்னையில் அல்லாடி வருகிறார்கள். பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிகளுக்கு கீழே போய்விட்டது. தினமும் மக்கள் காலிக் குடங்களோடு அலையும் காட்சிகளை அன்றாடம் பார்க்க முடியும். இன்னும் சில கிராமங்களில் மக்கள் காலிக் குடங்களோடு தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான், தம்பிதுரையை ஒரு கிராம பெண்கள் தண்ணீர் கேட்டு கேள்வி கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் மாவட்டம் முழுவதும்,'மக்களைத் தேடி..' என்று சென்று, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சியை சில மாதங்களாகவே நடத்தி வருகிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அந்த வகையில், அதிகாரிகள் சகிதம் பவுத்திரம் ஊராட்சிக்கு பொதுமக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அப்போது, அங்கே ஆவேசமாக வந்த பெண்கள் சிலர்,``எங்க பகுதிக்கு நீங்க எதுவுமே செய்யலை. குடிதண்ணிக்காக நாங்க தினமும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடையா நடக்க வேண்டி இருக்கு. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க நாங்க படுற அவஸ்தையைச் சொல்லி மாளாது. வயசான காலத்துல நாங்க நாயா அலைஞ்சு குடிதண்ணிக்காக நாங்க படுற வேதனை உங்களுக்கு ஏன் தெரியலை. ஒருநாள் எங்களோட தண்ணீர் தூக்க வந்து பாருங்க எங்க கஷ்டம் புரியும். தெருவிளக்கும் சரியா எரியலை. குடிநீர் பிரச்னை எங்களை அப்படி வதைக்குது" என்று சரமாரியாக கேள்விகள் கேட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத தம்பிதுரை, அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். தொடர்ந்து பெண்கள் குடிநீருக்காக தாங்கள் படும் கஷ்டத்தை உரத்தக் குரலில் சொல்ல, தம்பிதுரையால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால், அங்கு வந்த அதிகாரிகளும் ஜெர்க்கானார்கள். ஒருவழியாக பெண்களை சமாதானப்படுத்திய தம்பிதுரை,``உங்க கஷ்டங்களை தீர்க்கதான் இங்க வந்திருக்கிறோம். உங்க தண்ணீர் கஷ்டத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி தண்ணீர் உங்களுக்கு வழங்கப்படும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.