Published:Updated:

அ.தி.மு.க-வோடு அணி சேர்ந்த பா.ம.க.!  - 7 ப்ளஸ் 1 தொடர்பாக விகடன் குறிப்பிட்ட 12 விஷயங்கள்

"2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, `விஜயகாந்த் வேண்டாம்' என்பதால், உங்களுக்கு 7 சீட்டுகளை ஒதுக்கினார் அம்மா. அப்போது உங்களை ஜெயிக்க வைக்க முடியவில்லை. இந்த முறை உங்களுடைய வெற்றிக்காக உறுதியாகப் பாடுபடுவோம். தர்மபுரியில் பா.ம.க உறுதியாக வெல்லும். அதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், நிச்சயமாக ராஜ்யசபா தருகிறோம்!" என உறுதி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க-வோடு அணி சேர்ந்த பா.ம.க.!  - 7 ப்ளஸ் 1 தொடர்பாக விகடன் குறிப்பிட்ட 12 விஷயங்கள்
அ.தி.மு.க-வோடு அணி சேர்ந்த பா.ம.க.!  - 7 ப்ளஸ் 1 தொடர்பாக விகடன் குறிப்பிட்ட 12 விஷயங்கள்

ரட்டை இலையோடு கூட்டு சேர்ந்துவிட்டது மாம்பழம். `7 தொகுதிகள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட்' என்ற டிமாண்டை பா.ம.க ஏற்றுக் கொண்டுவிட்டது. நந்தனம் கிரவுன் பிளாசா ஓட்டலில் ராமதாஸூக்கு பொன்னாடை அணிவித்து சிரித்த முகத்தோடு வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி ஒப்பந்தம் குறித்துப் பேசிய அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ``2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. மெகா கூட்டணியாக இணைந்து தமிழகத்திலும் புதுச்சேரியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மாநிலங்களவையில் ஓர் இடமும் பா.ம.க-வுக்கு ஒதுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ராமதாஸ், அன்புமணி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஏகமனதாகக் கையெழுத்திட்டுள்ளனர்" என்றார் உற்சாகமான குரலில். 

தேர்தல்கால அரசியலைப் பொறுத்தவரையில், ஒரு வாரம் என்பதே மிகப் பெரிய இடைவெளி என்பார்கள். ஆனால், 90 நாள்களுக்கும் மேலாக கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. அண்ணா தி.மு.க-வுடனும் தி.மு.க-வுடனும் ஒரேநேரத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகச் செய்திகள் கிளம்பின. `நாங்கள் தினகரனுடனும் பேசுவோம். எங்கள் வலிமையைக் காட்டக் கூடிய தேர்தலாகப் பார்க்கிறோம்' என பா.ம.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசினர். தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க-வைக் கொண்டு வரும் முயற்சிகளில் தி.மு.க சீனியர்கள் சிலர் இறங்கினர். ஆனால், இப்படியொரு முயற்சி நடப்பதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என்பதை பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

1) 20-07-18 அன்று விகடன்.காமில் வெளியான கட்டுரையில், `திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ்? - காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி.மு.க.’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், "பா.ம.க-வை ஒரு சக்தியாக நீங்கள் பார்த்தால், வரக் கூடிய பட்டியலின வாக்குகளும் வராமல் போய்விடும். ராமதாஸ் செய்யும் அரசியலை நம்பினால், பெரிய பின்னடைவை நாம் சந்திக்க நேரிடும். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் அவர்களை சேர்த்தால், கட்சிக்காரர்கள் யாரும் தேர்தல் வேலை பார்க்க மாட்டார்கள். எதிர் அணிக்கு எளிதான வெற்றி கிடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக மாறிவிடும்" என தி.மு.க தரப்பில் பேசியதாகத் தகவல் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தோம். 

2) ஆனால், துரைமுருகன் உள்ளிட்டவர்கள் பா.ம.க மீது பாசம் வைத்திருந்தனர். `பா.ம.க-வைச் சேர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை!' - சீனியர் நிர்வாகிக்குத் தடைபோடும் தி.மு.க  என்ற தலைப்பில் 2018 ஆண்டு நவம்பர் 19-ம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், "பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்க்க வேண்டும் எனச் சில தி.மு.க மா.செ-க்கள் பேசி வருகின்றனர். அவர்களது நோக்கம், இந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.க-வைக் கழற்றிவிட வேண்டும் என்பதுதான். `பா.ஜ.க அல்லது காங்கிரஸ் என ஏதாவது ஒரு தேசியக் கட்சியோடு இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்' என்பதுதான் அன்புமணியின் நிலைப்பாடு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வடமாவட்டங்களில் ஐந்து சதவிகித வாக்குகளை பா.ம.க வாங்கியிருந்தது. `முதல்வர் வேட்பாளர் அன்புமணி' என்ற முழக்கத்தோடு களமிறங்கியதால் கிடைத்த வாக்குகள் இவை. `நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த வாக்குகளில் சரிவு ஏற்படலாம்' என பா.ம.க நினைக்கிறது. அதனால்தான், `கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தனர். தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வருவதை வடபுலத்தைச் சேர்ந்த தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவரும் சில மா.செ-க்களும் விரும்புகின்றனர். ஆனால், இந்த முயற்சிக்கு ஸ்டாலின் தரப்பில் கிரீன் சிக்னல் வழங்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தோம். 

3) தி.மு.க கூட்டணியில் பா.ம.க வருவதைப் போன்ற தோற்றம் அரசியல் களத்தில் உருவாகியிருந்தது. இதைப் பற்றி, `கூட்டணியில் யாருக்கெல்லாம் இடம்?!'  - ஆதங்கப்பட்ட வைகோ; அறிக்கையை ஆராய்ந்த ஸ்டாலின் (26/11/2018) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், "ஒருவேளை நம்மிடம் பா.ம.க வந்தாலும் 5.5 சதவீகித வாக்கு அளவுக்கு சீட் கேட்பார்கள். அது நமக்குத் தேவையில்லாத விஷயம். ஜெயலலிதா இருக்கும்போதே பா.ம.க-வுக்கு செல்வாக்கான தொகுதிகளில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. குறிப்பாக, பெண்ணாகரத்தில் நமது வேட்பாளர் இன்பசேகரன் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், வடஆற்காடு, தென்னாற்காடு, ஆரணி, அரக்கோணம் பகுதிகளிலும் நாம் அதிக சீட்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளால் நமக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. தினகரன் தனித்து நிற்பது போலத்தான் முடிவாகும். அதுவும், நமக்கு நன்மையில்தான் முடியும்" என தி.மு.க தரப்பில் பேசிய விவரத்தைப் பதிவு செய்திருந்தோம். 

4) தொடர்ந்து, `ஐந்து மண்டலங்களில் யாருக்கெல்லாம் வெற்றி?!'  - ஸ்டாலின் கவனத்துக்குச் சென்ற களநிலவரம் (01/12/2018) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், "2011 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்த்தபோது, `50, 60 சதவிகித வாக்குகளுக்கு மேல் கிடைக்கும்' என எதிர்பார்த்த நிலையில், மாநில சராசரியைவிடக் குறைவாக 38 சதவிகித வாக்குகள்தான் கிடைத்தன" என பா.ம.க-வைச் சேர்ப்பது குறித்து தி.மு.க-வில் நடந்த விவாதத்தை வெளிப்படுத்தியிருந்தோம். 

5) எப்படியாவது, `பா.ம.க-வைக் கொண்டு வந்துவிட வேண்டும்' என முயற்சிகள் நடந்த காலகட்டத்தில், 'பா.ம.க, தே.மு.தி.க., ஏன் வேண்டாம் என்கிறேன் தெரியுமா!?' - ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் அட்வைஸ்  (03/12/2018) என்ற தலைப்பில் தி.மு.க தலைமையின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தோம். அந்தக் கட்டுரையில், `2016 சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக அன்புமணி வம்புக்கு இழுத்ததையும் ஸ்டாலின் இன்னும் மறக்கவில்லை. `பா.ம.க ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து இயங்கக் கூடிய ஒரு கட்சி. அவர்களால் நமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமிதான் நம்முடைய முதல் எதிரி. நாமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று சேர்ந்தாலே 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிடுவோம். கூடுதல் பலத்துக்காக திருமாவளவனை நம்மோடு சேர்த்துக் கொள்ளலாம். பா.ம.க நமக்குத் தேவையில்லை. தே.மு.தி.கவும் நமக்குத் தேவையில்லை. இவர்கள் தேவையற்றவர்கள் என்ற விமர்சனத்தை நாம் முன்வைக்கும்போதுதான், நம்மைப் பற்றிய அவர்களின் விமர்சனங்கள் அர்த்தமற்றுப் போகும். மக்களும் அவர்களைப் புறம்தள்ளிவிடுவார்கள். பா.ம.க-வைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க-வுடன் சேர்ந்தாலும் அந்த அணி 30 சதவிகித வாக்குகளைத் தாண்டப் போவதில்லை" என தி.மு.க தலைமையில் உள்ளவர்கள் விவாதித்தையும் குறிப்பிட்டிருந்தோம். 

6) தொடர்ந்து, கடந்த 6/12/18 அன்று வெளியிட்ட செய்தியில் `கூட்டணியில் வைகோ, திருமாவளவன் நீடிப்பார்களா?!' - ஸ்டாலின் மௌனம் ஏன்? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில், "துரைமுருகன் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டபோது, திருமாவளவனையும் வைகோவையும் அறிவாலயத்துக்கே அழைத்துப் பேசினார் ஸ்டாலின். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, `தி.மு.க கூட்டணியில் வைகோவும் திருமாவளவனும் இருக்கிறார்களா?' என ஸ்டாலின் தெளிவுபடுத்தவில்லை. அவர் அப்படிச் சொல்ல வேண்டும் என இந்த இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் எதிர்பார்க்கின்றனர். கூட்டணி தொடர்பான வார்த்தைகளை வெளியிடுவதில் மிகுந்த கவனத்தோடு இருக்கிறார் ஸ்டாலின். `பா.ம.க உள்ளே வந்தால் வடமாவட்டங்களில் அதிக இடங்களில் வெல்ல முடியும்' என துரைமுருகன் விரும்பினார். இதற்கு ஆ.ராசா மூலமாக செக் வைத்தார் ஸ்டாலின். `அவர்கள் வந்தால் எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு' என பா.ம.க, தே.மு.தி.கவுக்கு எதிராகப் பேட்டியளித்தார் ராசா. தி.மு.க அணிக்குள் ராமதாஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு" எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம். 

7) அதேநேரம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க தோல்வி குறித்து ராமதாஸ் எந்தக் கருத்தையும் பதிவு செய்யாமல் இருந்தார். இதைப் பற்றி, தினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன்? - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ் (12/12/2018) என வெளியான கட்டுரையில், "காங்கிரஸ் கூட்டணியை எதிர்பார்த்த ராமதாஸும் தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து சொல்லவில்லை. இவர்கள் இருவரும் மோடி எதிர்ப்பில் உறுதியாக இல்லை. தே.மு.தி.க-வும் உறுதியாக இல்லை. இவர்கள் உறுதியற்றவர்கள் என்பதை இதன்மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவர்கள் பா.ஜ.க-விடம் கூட்டணி வைப்பதற்கும் தயங்க மாட்டார்கள். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகள் மட்டுமே பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துள்ளன" எனச் சுட்டிக் காட்டியதையும் குறிப்பிட்டிருந்தோம். 

8) இதன் தொடர்ச்சியாக, தி.மு.க தரப்புக்கு பா.ம.க வைத்த டிமாண்டுகளை ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற தகவலும் கிடைத்தது. `ஸ்டாலின் எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை!'  - எடப்பாடியோடு நெருங்குகிறாரா ராமதாஸ்?' என்ற தலைப்பில் (16/01/2019) வெளியான கட்டுரையில், அ.தி.மு.க, பா.ம.க தரப்பில் நடக்கும் பேச்சுவார்த்தையை சுட்டிக் காட்டியிருந்தோம். அதில், `நீங்கள் விரும்புகிற தொகுதிகளை எல்லாம் தருவது சிரமம். உங்களுக்கு முதல் தொகுதியை ஒதுக்கினால், அடுத்த வடமாவட்டத் தொகுதியை நாங்கள் எடுத்துக் கொள்வோம். சேலம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் போன்ற தொகுதிகளைக் கேட்க வேண்டாம். தருமபுரி தருகிறோம். சிதம்பரத்தில் எங்களுக்குச் சிக்கல் இருக்கிறது. எங்களுக்குச் செல்வாக்கில்லை என ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால், சி.வி.சண்முகம், அன்பழகன், வீரமணி உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுடைய மாவட்டங்களை ஸ்ட்ராங்காக வைத்துள்ளனர். இந்தக் கூட்டணி நல்லபடியாகச் செல்லும் வகையில் அரசுக்கு உங்கள் ஆதரவு வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருப்பதால்தான், கொடநாடு உட்பட தமிழக அரசை விமர்சிக்கும் எந்த அறிக்கைகளும் ராமதாஸிடமிருந்து வரவில்லை. ஆளுநர் உரையையும் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் ராமதாஸ்' எனக் குறிப்பிட்டிருந்தோம். அ.தி.மு.க, பா.ம.க தொகுதிப் பங்கீடு எப்படி நடக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். 

9) இருப்பினும், தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் போன்ற தோற்றத்தை பா.ம.க உருவாக்கியது. ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை தனியார் ஓட்டலில் வைத்து நள்ளிரவு நேரத்தில் அன்புமணி சந்தித்துப் பேசுவதாகவும் தகவல் வெளியானது. இதன் மூலம், தி.மு.க கூட்டணிக்குள் குழப்பம் உண்டாக்கும் வேலைகள் நடப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். கடந்த 07/02/2019 அன்று `ஜெயிக்கப் போவது துரைமுருகனா...ஆ.ராசாவா?' - ராமதாஸுக்காக அறிவாலயத்தில் மோதல் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், `அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி அமைந்தாலும் சேலம், தருமபுரி ஆகிய 2 தொகுதிகளைத் தவிர, வேறு எங்கும் நமக்குப் பிரச்னைகள் இல்லை. அவர்களைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. ஒருவேளை இவர்கள் தி.மு.க-வோடு சேர்ந்து வெற்றி பெற்றாலும், நாளை நம்மைப் பயன்படுத்தி மத்திய அமைச்சர் ஆவதற்கும் முயற்சி செய்வார்கள். அட்டவணை சமூக மக்கள் மத்தியில் பா.ம.க-வுக்குக் கடுமையான எதிர்ப்பு உள்ளது" என தி.மு.க தரப்பில் நடந்த விவாதத்தைப் பதிவு செய்தோம். 

10) பா.ம.க நடத்தும் குழப்பங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். தி.மு.க கூட்டணியில் இருந்து திருமாவளவனைக் கழட்டிவிட வேண்டும் என்ற அடிப்படையிலேயே பா.ம.க இதுபோன்று செய்வதாக வி.சி.க நிர்வாகிகள் நினைத்தனர். கடந்த 11/02/2019 அன்று வெளியான கட்டுரையில், திருமாவளவனைச் சீண்டுகிறாரா துரைமுருகன்?  - திருக்குறள் உதாரணத்தைச் சுட்டிக் காட்டிய வன்னியரசு என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், "உண்மையில், தி.மு.க தரப்பில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா.. இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், தி.மு.க தரப்பில் பேசுவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கும் வேலையைச் சிலர் சரியாகச் செய்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தோம். இதற்கு பா.ம.க தரப்பில் எந்தப் பதிலும் வெளியாகவில்லை. 

11) தி.மு.கவுடன் பேசுவதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் அ.தி.மு.க-வில் தன்னுடைய டிமாண்டை உயர்த்திக் கொண்டது பா.ம.க. `தினகரன் வந்தால் அவருடனும் பேசுவோம்!' - கூட்டணி கறார் பா.ம.க என்ற தலைப்பில் 05/02/2019 அன்று வெளியான கட்டுரையில், "பா.ம.க-வுடன் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். காரணம், ஓட்டு வங்கியை நிரூபித்த கட்சியாகவும் காங்கிரஸ் கட்சியைவிடவும் செல்வாக்கு இருக்கும் கட்சியாகவும் பா.ம.க-வை அவர் பார்க்கிறார். தவிர, பா.ம.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் ஸ்டாலினுக்கு எதிரி நாம்தான் என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாகிவிடும் எனவும் நம்புகிறார். எனவே, இப்போது வரையில் பேச்சுவார்த்தையில் எந்தவிதச் சிக்கலும் இல்லை. படையாட்சியாருக்கு மணிமண்டபம், வன்னியர் நல வாரியம் அமைத்தது ஆகியவற்றோடு பா.ம.க-வுடன் கூட்டணி அமைந்தால் வடக்கில் பெரும்பாலான தொகுதிகளை வெல்ல முடியும் எனவும் ஆளும்கட்சி கணக்கு போடுகிறது. `பா.ம.க வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வந்து சேரும்' எனவும் உறுதியாக நம்புகிறார்" என எடப்பாடி பழனிசாமி மனநிலையை பிரதிபலித்தோம். 

12) இன்று நந்தனம் பகுதியில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் 7 ப்ளஸ் 1 என்ற உடன்பாட்டுக்கு பா.ம.க வந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதனைக் கடந்த 14-2-19 அன்று வெளியான விகடன் இணையத்தள கட்டுரையில், `6 ப்ளஸ் 1 அல்லது 7 ப்ளஸ் 1...’ - அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி நிலை என்ன? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்தது இதைத்தான்: "அ.தி.மு.க, பா.ம.க கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடியும் தருவாயில் உள்ளன. `அக்கட்சிக்கு 5 இடங்கள் வரையில் ஒதுக்கலாம்' என முதல்வரின் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், ராஜ்யசபா சீட்டோடு சேர்த்து 6 ப்ளஸ் 1 அல்லது 7 ப்ளஸ் 1 என்ற அடிப்படையில் பேச்சு நடந்து வருகிறது. இதில், பா.ம.க தரப்பு தூதுவர்களுக்குப் பதில் அளித்த முதல்வர் தரப்பினர், `உங்கள் தகுதிக்கேற்ப சீட்டுகளை ஒதுக்குகிறோம். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, `விஜயகாந்த் வேண்டாம்' என்பதால், உங்களுக்கு 7 சீட்டுகளை ஒதுக்கினார் அம்மா. அப்போது உங்களை ஜெயிக்க வைக்க முடியவில்லை. இந்த முறை உங்களுடைய வெற்றிக்காக உறுதியாகப் பாடுபடுவோம். 

தர்மபுரியில் பா.ம.க உறுதியாக வெல்லும். அதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், நிச்சயமாக ராஜ்யசபா தருகிறோம். எங்களை நம்புங்கள். உங்களை நம்பித்தான் வளர வேண்டிய சூழல் உள்ளது. உங்கள் சமுதாய வாக்குகளால்தான் எடப்பாடி எம்.எல்.ஏ ஆனார். அம்மாவே படையாட்சியாருக்குச் செய்யாததை அவர் செய்திருக்கிறார். உங்களுக்கு இணையான சீட்டை தே.மு.தி.க-வும் கேட்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வலுவான சக்தியாக மாறிவிட்டீர்கள். அதை நான் மதிக்கிறேன். அவரும் நம்முடைய கூட்டணிக்கு வேண்டும். நீங்களும் வேண்டும். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மிகவும் கீழே இறங்கிப்போனால், வெளியில் எங்களை பலவீனமானவர்களாகப் பார்ப்பார்கள். எங்கள் வாக்குகளை உங்கள் பக்கம் கொண்டு வருகிறோம்" என உறுதியளித்துள்ளனர். 

தொகுதிப் பங்கீட்டில் விருப்பமான தொகுதிகளைப் பெறுவதற்கு தி.மு.க-வுடன் பேசுவது போலக் காட்டிக் கொண்டால், அ.தி.மு.கவில் டிமாண்ட் அதிகமாகும் என்பதை முன்னிறுத்தியே தேர்தல் களத்தில் பா.ம.க செயல்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் அதைச் சாதித்தும் காட்டிவிட்டார் ராமதாஸ். இரட்டை இலையோடு மாம்பழம் இணைவதால் ஏற்படப் போகும் சாதக, பாதகங்கள் என்ன என்பதைப் பற்றி அலசி ஆராயத் தொடங்கியிருக்கிறது அண்ணா அறிவாலயம். 

பின்குறிப்பு: பா.ம.க-வின் கூட்டணி நகர்வுகள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட போதெல்லாம், விகடன் மீது வசைகளும் அவதூறுகளும் பரப்பிவிடப்பட்டன!