Published:Updated:

மாசி மகத்தில், நட்சத்திர விடுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி... பின்னணி என்ன?

கூட்டணி குறித்த அறிவிப்பை இதுவரை போயஸ்கார்டனில் அறிவித்தே பழக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை முதல்முறையாக நட்சத்திர விடுதியில் இந்தக் கூட்டணி அறிவிப்பை வெளியிட முனைந்தது.

மாசி மகத்தில், நட்சத்திர விடுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி... பின்னணி என்ன?
மாசி மகத்தில், நட்சத்திர விடுதியில் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி... பின்னணி என்ன?

ஜெயலலிதாவின் பிறந்த நட்சத்திரத்தமான மாசி மகத்தில் அ.தி.மு.க வின் முதல் கூட்டணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதையும் சென்ட்டிமென்ட் பார்த்துச் செய்யும் அ.தி.மு.க, பா.ம.க-வுடன் கூட்டணி விஷயத்திலும் அதைக் கடைப்பிடித்துள்ளது. 

அ.தி.மு.க அணியில் பா.ம.க இடம் பெறும் என்கிற தகவல் கடந்த ஒரு மாதமாகவே பரவிவந்தது. ஆனால், பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை எந்த யூகத்திற்கும் பதில் சொல்லமுடியாது” என்று சொல்லியிருந்தார். அதற்குக் காரணம் அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு கட்சிகளுடனும் பா.ம.க பேச்சுவார்த்தை நடத்திவந்தது. 

அ.தி.மு.க-தரப்பு எப்படியும் பா.ம.க-வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. முதல்வருக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் மூலமும், அமைச்சர் வேலுமணியின் அண்ணன் மூலமும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே நேரம் தி.மு.க தரப்பில் துரைமுருகன் பா.ம.க-வை எப்படியும் தி.மு.க கூட்டணிக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தினார். மறுபுறம் அன்புமணியின் மைத்துனரும் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவருமான விஷ்ணுபிரசாத் அன்புமணியிடம் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வந்துவிடவேண்டும் என்று அன்புக்கட்டளையும் விடுத்தார். இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க -பா.ம.க கூட்டணி அமைந்தது ராமதாஸ் பிடிவாதத்தினாலே என்கிறார்கள். 

தி.மு.கவுடன் பா.ம.க தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளுக்கு தி.மு.க தரப்பு பிடிகொடுக்கவில்லை. அதே நேரம் அ.தி.மு.க தரப்பு எப்படியும் பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முனைப்புடன் இருந்தது. இதற்காக இரண்டு முறை தைலாபுரத்தில் அ.தி.மு.கவின் மூத்த தலைவர்கள் இருவர் ராமதாஸைச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அந்தப் பேச்சு வார்த்தையில் ஆரம்பகட்டத்தில் பா.ம.க தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. அதனால் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை இழுபறியில் சென்றது.

இந்நிலையில், பி.ஜே.பி தரப்பிலிருந்து அ.தி.மு.க தரப்பைத் தொடர்பு கொண்டு பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமையவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பியூஷ் கோயல் கடந்த வாரம் தமிழகம் வந்து அ.தி.மு.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், இதுகுறித்த விவரங்களையும் அப்போது பகிர்ந்துள்ளார். அதன்பிறகே பா.ம.க-வின் டிமாண்டுகளுக்கு அ.தி.மு.க தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தைலாபுரத்திலிருந்த ராமதாஸ் அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தார். அன்று இரவு அ.தி.மு.கவின் மூத்த அமைச்சர்கள் இருவர் அன்புமணியின் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அப்போது, ராமதாஸ் தரப்பிலிருந்து 10 கோரிக்கைகள் கொண்ட பட்டியலை நீட்டியுள்ளார்கள். அதைப் பார்த்த அ.தி.மு.க தரப்பு அவற்றில் சிலவற்றை இப்போது நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று சொல்லியுள்ளது. அதற்கு ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை. கோரிக்கைகள் ஏற்றுக்கொண்டால் இப்போதே ஒப்பந்தம் போடலாம் என்று சொல்லியுள்ளார். அதோடு முதல்வரைத் தொடர்பு கொண்டு கோரிக்கை விஷயங்களைத் தெரிவித்ததும் முதல்வர் தரப்பு எப்படியாவது கூட்டணியை முடிவு செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார். அதற்குப் பின்னே கோரிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டதும், ஒப்பந்தம் டைப்செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே பா.ம.க 7 தொகுதி ப்ளஸ் ராஜ்யசபாவில் ஒன்று என்கிற கணக்கில் உறுதியாக இருந்ததால், அந்தத் தொகுதியை ஒப்புக்கொண்டே ஒப்பந்தம் தயாராகியுள்ளது. அதன்பிறகு செவ்வாய்க்கிழமை அன்று மாசி மகம் நட்சத்திரம் நல்ல நாள் நட்சத்திரப்படி ஜெயலலிதாவின் பிறந்தநாளும் அதுவே. எனவே, அன்றே கூட்டணி குறித்த அறிவிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்க ராமதாஸ் அதற்கு ஒப்புக்கொண்டார். கூட்டணி குறித்த அறிவிப்பை இதுவரை போயஸ்கார்டனில் அறிவித்தே பழக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை முதல்முறையாக நட்சத்திர விடுதியில் இந்தக் கூட்டணி அறிவிப்பை வெளியிட முனைந்தது. மாசி மகம் தினத்திலே தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அறிவிப்பையும் அறிவித்துவிட வேண்டும் என அ.தி.மு.க தரப்பு வைத்த கோரிக்கையை பி.ஜே.பி தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. மாசி மகத்தில் கூட்டணி மலர்ந்தன பின்னணி இதுதான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.