Published:Updated:

`மோடியா? லேடியா? என்று முழங்கிய ஜெயலலிதாவை இவர்கள் மறந்துவிட்டார்களா?’ - கொதிக்கும் தமீமுன் அன்சாரி

`மோடியா? லேடியா? என்று முழங்கிய ஜெயலலிதாவை இவர்கள் மறந்துவிட்டார்களா?’ - கொதிக்கும் தமீமுன் அன்சாரி
`மோடியா? லேடியா? என்று முழங்கிய ஜெயலலிதாவை இவர்கள் மறந்துவிட்டார்களா?’ - கொதிக்கும் தமீமுன் அன்சாரி

`கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான நிலைபாட்டை எடுத்து கர்ஜித்த ஜெயலலிதாவை இவர்கள் மறந்துவிட்டார்களா? அ.தி.மு.கவைச் சீரிழித்த கட்சியுடன் கூட்டணி வைப்பதா?’ எனக் கொந்தளிக்கிறார் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி.


நாடாளுமன்றத் தேர்தல் ரேஸூக்குத் தமிழகக் கட்சிகள் தயாராகிவருகின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.கவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. தொடர்ந்து பா.ஜ.க கூட்டணி குறித்து முடிவு செய்ய சென்னை வந்த பியூஷ் கோயல், 2 மணி நேரம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸூடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டணி குறித்து கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரியுடன் பேசினோம். ``நான்கரை ஆண்டுக்காலம் தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவே செயல்பட்ட கட்சி பா.ஜ.க. டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளைச் சந்திக்க மறுத்தவர்தான் பிரதமர். கஜா புயல் வீசிய போது ஆறுதல் வார்த்தைகளை கூட கூறாதவர்தான் அவர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம், மீனவர்கள் போராட்டம், நீட் தேர்வு விவகாரம், இப்படிப் பல விவகாரங்களில் தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால்தான், பிரதமருக்கு எதிராக கறுப்புக்கொடி புரட்சிகள் ஏற்பட்டன. ஒரு பிரதமர் தன் சொந்த நாட்டில் தரைவழியே செல்லமுடியாத நிலை தமிழகத்தில்தான் ஏற்பட்டது. நாடு முழுக்க பா.ஜ.க எதிர்ப்பு அலை வீசுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க வெறுப்பலை வீசுகிறது.

இந்த நிலையில், நோட்டாவுக்கும், பா.ஜ.கவுக்கும்தான் தமிழகத்தில் போட்டி எனப் பலரும் வர்ணித்தனர். அப்படி வாக்குவங்கி இல்லாத கட்சிக்கு வலிமையூட்ட நினைப்பது எந்த வகையிலும் தமிழக மக்களின் நலனுக்கு நன்மை சேர்க்காது. அதுமட்டுமன்றி, கடந்த தேர்தலில் மோடியா, லேடியா எனக் கூறி நாட்டையே அதிர வைத்தவர் ஜெயலலிதா. அந்த ஒரு கேள்விக்குத்தான் 37 தொகுதிகளை தமிழக மக்கள் பரிசாக வழங்கினார்கள். அதுமட்டுமன்றி, அ.தி.மு.கவை சீரழித்து சின்னாபின்னாமாக்கியதே பா.ஜ.கதான். அ.தி.மு.கவின் பலகீனத்தின் மூலமாக தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளலாம் என அவர்கள் கணக்குப்போட்டார்கள். தங்களை சீரழித்தவர்களுடனே, அ.தி.மு.கவினர் கூட்டணி வைப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த 3 மாதங்களாக நானும், தனியரசும், கருணாஸூம் இதை வலியுறுத்தினோம். ஆனால் எங்களுடைய வார்த்தைகளை அவர்கள் கேட்கவில்லை. அ.தி.மு.கவின் பெரும்பாலான தொண்டர்களுக்கு இதில் உடன்பாடே இல்லை என்பதுதான் உண்மை. அ.தி.மு.கவின் அமைச்சர்களும் தலைவர்களும் தங்கள் தலைமைக்குக் கட்டுபட்டிருக்கிறார்களே தவிர, அவர்களின் உள் மன ஓட்டம் வேறாகவே உள்ளது. கவலையாக உள்ளது. மாநிலக் கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது 15 இடங்களை இவர்கள் வென்றிருக்க முடியும். இப்போது பெரும் தோல்வியை நோக்கி இவர்கள் பயணம் தொடங்கியுள்ளது. அதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும். இவர்களுக்காக நாங்கள் பரிதாபப்படுகிறோம். சமூக நீதிக்கு எதிரான கட்சிகள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். பா.ஜ.க சமூக நீதிக்கு எதிரான கட்சி. அந்தக் கூட்டணியில் நாங்கள் இருப்பது என்பது துளியும் சாத்தியமில்லை. எங்கள் கட்சியின் அடுத்தகட்ட முடிவு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமை நிர்வாகக் கூட்டம் 28-ம் தேதி சென்னையில் நடக்கிறது அதில் நாங்கள் முடிவு செய்வோம்.