Published:Updated:

`எங்களோடு தி.மு.க-வும் பேசுகிறது!' - கறார் காட்டிய சுதீஷ்; நீடிக்கும் கூட்டணி இழுபறி

`எங்களோடு தி.மு.க-வும் பேசுகிறது!' - கறார் காட்டிய சுதீஷ்; நீடிக்கும் கூட்டணி இழுபறி
`எங்களோடு தி.மு.க-வும் பேசுகிறது!' - கறார் காட்டிய சுதீஷ்; நீடிக்கும் கூட்டணி இழுபறி

ஒரேநாளில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து அ.தி.மு.க தரப்பு நேற்று அதிரடி காட்டியது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க கட்சியும் இடம்பிடித்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றனர். அங்கு விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லாமல் போனதாலே கூட்டணி அறிவிப்பை அறிவிக்கமுடியாமல் போய்விட்டதாகக் கூறுகின்றனர் அ.தி.மு.க தரப்பினர்.

தே.மு.தி.க-வுக்கு  நான்கு தொகுதிகள் கொடுக்கும் முடிவில் அ.தி.மு.க தலைமையிலான குழு விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு விஜயகாந்திடம் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். அதன்பிறகு  கூட்டணி குறித்துப் பேச்சு எழுந்துள்ளது. தே.மு.தி.க தரப்பில், ``ஆறு தொகுதிகளை எதிர்பார்க்கிறோம்” என்று சொன்னதுமே, பா.ஜ.க தரப்பு அப்செட்டாகிவிட்டது. `` நான்கு தொகுதிகள் உங்களுக்குக் கொடுக்க வாய்ப்புள்ளது” என்று சொன்னதும், ` தி.மு.க தரப்பிலிருந்தே எங்களுக்கு மூன்று தொகுதிகள் தருவதாக சொன்னார்கள். பா.ம.க-வுக்கு 7 தொகுதிகள் கொடுத்தீர்கள், ஒரு ராஜ்யசபா கொடுத்துள்ளீர்கள். இதைதாண்டி பணமும் பேசப்பட்டுள்ளது. அதேபோல், எங்களுக்கும் ராஜ்யசபா சீட்டும் செலவுக்குப் பணமும் தேவை. அதை ஒப்புக்கொண்டால் கூட்டணி அறிவிப்பை இப்போதே வெளியிட்டுவிடலாம்' என தே.மு.தி.க தரப்பில் தெரிவித்துள்ளனர்.

நேற்று சுதீஷை தனியாக அழைத்துப் பேசியுள்ளார் பியூஷ் கோயல். அப்போது, `` இப்போது கூட்டணியை ஒப்புக்கொள்ளுங்கள், பிறகு எல்லாவற்றையும் பேசி முடித்துக்கொள்ளலாம்” எனக் கூறியிருக்கிறார். இதற்கு சுதீஷ், `` எங்கள் கோரிக்கையை ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை” என்று சொல்லியதும், `சரி பேசிவிட்டு வருகிறோம்' என்று இரண்டு கட்சித் தலைவர்களும் கிளம்பிவிட்டார்கள். இந்தத் தகவல் தி.மு.க தரப்புக்கு எட்டியுள்ளது. வட மாவட்டங்களில் பா.ம.க பிரிக்கும் வாக்கை தே.மு.தி.க-வை வைத்து சரிக்கட்டலாம் என்று கணக்கு போடுகிறது. நான்கு சீட் கொடுத்து தே.மு.தி.க-வை கூட்டணிக்குள் கொண்டுவரும் வேலையை தி.மு.க தரப்பிலிருந்து ஒரு டீம் கையில் எடுத்துள்ளதால் அணி மாற்றம் நடந்தாலும் ஆச்சர்யப்படவேண்டாம்' என்கிறார்கள் தே.மு.தி.க-வினர்.