Published:Updated:

போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!

போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!
போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கெனவே பா.ஜ.க, பா.ம.க. கட்சிகள் இணைந்துவிட்டன. தே.மு.தி.க. சேருவதில் சில பிரச்னைகள். இவைதான் முக்கிய கட்சிகள். டெல்லி பா.ஜ.க தலைவர்களுடன் எடப்பாடி உத்தரவின் பேரில் மணி அண்டு கோ (அமைச்சர் தங்கமணி, வேலுமணி இருவரைத்தான் அப்படி கட்சியில் அழைக்கிறார்கள்) ரகசியமாகச் சந்தித்திருக்கிறார்கள். கட்சியின் சீனியர் தலைவர்களை புறக்கணித்துவிட்டு, மணி அண்டு கோ ப்ளஸ் அவுட் ஸோர்ஸிங் முறையில் கட்சிக்குச் சம்பந்தமில்லாத கோவை தொழில் அதிபர், கேரள வி.வி.ஐ.பி, கோவை சாமியார், டெல்லி சாமியார் என இந்த நால்வர் கூட்டணிதான் அ.தி.மு.க-வின் தலைவிதியை நிர்ணயித்ததாகக் கட்சியினர் புலம்புகிறார்கள். 

போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!

திரைமறைவில் நடந்த சீட்டு எண்ணிக்கை, பண பேரங்கள் உள்ளிட்டவற்றை இவர்கள்தான் கவனித்துக்கொண்டார்கள். ஆனால், எல்லாம் முடிந்து மீடியாக்களிடம் அறிவிக்கும் கட்டத்தில் போஸ் கொடுக்கும் வகையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்தார்களாம். 'அண்ணே.. எல்லாம் பேசி முடிச்சாச்சு. நீங்க வாங்க' என்று மணி அண்டு கோ அழைத்தார்களாம். என்ன பேசினார்கள் என்ன நிபந்தனை என்றெல்லாம் கேட்க ஓ.பி.எஸ்ஸுக்கு அதிகாரமில்லை. இதைக் கேள்விப்பட்ட 25 அமைச்சர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். தமிழகத்தில் பரவலாக அ.தி.மு.க. ஓட்டுகளைத் தினகரன் நிச்சயம் பிரிப்பார். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க, மத்தியில் ஆளும் பா.ஜ.க என இரண்டு கட்சிகள் மீது அதிருப்தியில் இருக்கும் நடுநிலையாளர்களின் ஓட்டு கணிசமானது. இந்த தேர்தலில் மோடிக்கு ஆதரவு... மோடி எதிர்ப்பு? என்கிற இரண்டு கேள்விதான் பிரதானமானது. அப்படியிருக்க, மோடியின் ஆதரவு ஓட்டுகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரலாம். ஆனால், எதிர்ப்பு ஓட்டுகள் தமிழகத்தில் யாருக்கு விழும் என்பதையும் அரசியல் விமர்சகர்கள் அலசிக்கொண்டிருக்கிறார்கள். இதையல்லாம் கணக்குப்போடும் சீனியர் அமைச்சர்கள், தற்போதுள்ள கூட்டணியை 'பொருந்தாத கூட்டணி' என்றே வர்ணிக்கிறார்கள். 

போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!

இதுபற்றி ஓ.பி.எஸ் கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கூறும்போது, ``21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளிப்போக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பில் அதைச் சரிவர கவனிக்கமுடியாது என்பது மட்டுமே எங்கள் தரப்பு கோரிக்கை. பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்கிற கொள்கையில் தீவிரமாக ஓ.பி.எஸ்ஸும் 25 அமைச்சர்களும் இருந்தனர். அதனால், அவர்களை ஓரங்கட்டிவிட்டார் எடப்பாடி. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வந்தபோது, எங்கள் தலைவரை அழைத்தனர். பேச்சுவார்த்தையில் க்ளைமாக்ஸ் நெருங்கியபோது, இவரை வெளியே போகச் சொல்லிவிட்டு பியூஸ் கோயலும், எடப்பாடியும் தனியாகப் பேசவேண்டும் என்றனர். அப்போது ஓ.பி.எஸ்ஸின் முகம் மாறிவிட்டது. வேறு வழியில்லாமல், அங்கிருந்து நகர்ந்தார். இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்தான். இதுபோல, நிறைய நடந்துகொண்டிருக்கின்றன. மனதளவில் பொங்கிக்கொண்டிருக்கும் ஓ.பி.எஸ் இரண்டாவது முறையாகத் தர்மயுத்தம் அறிவிக்க அம்மா சமாதிக்குப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை" என்கிறார். 

போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!

அவரே தொடர்ந்து கூறும்போது, ``கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் ஓட்டுகளைக் கவருவதற்காக, தங்கமணி, வேலுமணிக்கு முக்கியத்துவம் தரலாம். ஆனால், செங்கோட்டையன் போன்ற வேறு சில கவுண்டர் சாதி தலைவர்கள் நொந்துபோயிருக்கிறார்களே. கொங்கு மண்டலத்தில் கவுண்டருக்கு இணையாக மற்ற சாதியினர் இருக்கிறார்கள். நாயுடு, செட்டியார், ஆதி திராவிடர் போன்ற ஏராளமான சாதிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டு எடப்பாடிக்கு வேண்டாம் போலிருக்கிறது" என்றார்.

``கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பு, தனது கருத்தை ஓ.பி.எஸ். வெளிப்படுத்தி இருக்கவேண்டியதுதானே. அப்போதெல்லாம் பேசாமல் இருந்துவிட்டு இப்போது அவர் டென்ஷன் ஆவது சரியாக இல்லையே. வேறு ஏதோ அரசியல் திட்டத்துடன், எடப்பாடியிடம் இயல்பாகப் பழகாமல், அவரை மாட்டிவிடுவது போல் தெரிகிறதே'' என்றோம்.

போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!

அதற்கு அவர், `` எடப்பாடிக்கு ஓ.பி.எஸ் அட்வைஸ் தேவைப்படாது. அவருக்குத் தெரிந்த கார்ப்பரேட் பிரமுகர்கள் பலர் இருக்கிறார்கள். மத்திய அரசின் அஸ்திரங்கள் ஐ.டி, சி.பி.ஐ ஆகியவை எங்களில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் போன்ற சிலர் மீதுதான் பாய்ந்துள்ளன. மற்றவர்கள் மீது இல்லை. பிறகு ஏன் நாங்கள் பா.ஜ.க-வுக்கு பயப்பட வேண்டும். ஓ.பி.எஸ். கூட மத்திய அரசு நம்மில் சிலரை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது. அதற்கு இடங்கொடுக்காதீர்கள். சட்டப்படி பார்த்துக்கொள்வோம் என்றுதான் நெருங்கிய சகாக்களிடம் கூறிவந்தார். ஆனால், எடப்பாடி கேட்கவில்லை. ஒரு சிலருக்காக அம்மா உருவாக்கிய கட்சியை பா.ஜ.க.விடம் சரண்டர் செய்துவிட்டார்கள். தமிழக மக்கள் எவ்வளவு பெரிய மெகா கூட்டணி அமைத்தாலும் பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறிந்துவிடுவார்கள். காரணம், மின்கோபுரம் அமைப்பது, நியூட்ரினோ, மீத்தேன் வாயு எடுப்பது, கெயில் குழாய் இப்படி ஏகப்பட்ட மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். 

போஸ் கொடுக்க மட்டும் தான்... ரகசியம் பேச மணி அண்ட் கோ - அப்செட்டில் ஓ.பி.எஸ்!

அரசு ஊழியர்கள் மட்டும் 15 லட்சம் பேர். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தத் தேர்தலை நிர்ணயிப்பவர்கள். அவர்களும் அதிருப்தி. இவை போக, கடந்த தேர்தலில் பா.ஜ.க அறிவித்த நதிநீர் இணைப்புத் திட்டம் கிடப்பிலேயே கிடக்கிறது. முஸ்லிம், கிறிஸ்துவர் போன்ற மைனாரிட்டி ஓட்டுகள் ஆர்.கே. நகர் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் விழவில்லை. தினகரனுக்குத்தான் விழுந்தது. அதுவே ஒரு ட்ரையல். நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்கும் என்று தெரிகிறது. பணம் மதிப்பிழப்பு அறிவிப்பு, ஜி.எஸ்.டி. குளறுபடிகளால் மேற்கு மாவட்டங்களில் பெரிய முதலாளிகளைத்தவிர நடுத்தர, குறுந்தொழில்களைச் செய்து வந்தவர்கள் தொழில் செய்யவே முடியவில்லை. அகில இந்திய அளவில் கார்ப்பரேட் முதலாளிகளின் தாக்கம்தான் தமிழகத்தில் தெரிகிறது. பரவலாக, தொழில் வளர்ச்சி அறவே முடங்கிவிட்டது. இதையெல்லாம் ஓ.பி.எஸ்ஸிடம் மற்ற அமைச்சர்கள் தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தனர். சந்தர்ப்பம் வரும் பேசுகிறேன் என்றுதான் அவரும் பதில் சொன்னார். ஆனால், பா.ஜ.க-வுடன் எல்லாம் பேசி முடித்துவிட்டு, பிறகுதான் ஓ.பி.எஸ்ஸுக்கே தகவல் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கட்டத்தில், வேறு என்ன செய்வது. அமைதியாக இருந்துவிட்டார். இஷ்டமில்லாமல் மீடியாக்களுக்கு போஸும் கொடுத்தார்"  என்கிறார்.