Published:Updated:

இங்கே பா.ம.க... அங்கே சிவசேனா! கூட்டணி கோல்மால் ரிட்டர்ன்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இங்கே பா.ம.க... அங்கே சிவசேனா! கூட்டணி கோல்மால் ரிட்டர்ன்ஸ்
இங்கே பா.ம.க... அங்கே சிவசேனா! கூட்டணி கோல்மால் ரிட்டர்ன்ஸ்

இதுவரையிலும் கடும் விமர்சனங்களால் மோதிக்கொண்டிருந்த பிஜேபியும் சிவசேனாவும், அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் தேர்தல் கூட்டணி வைத்திருப்பது, சமூக ஊடகங்களில் மிக மோசமாக விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

``அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை” என்பது, அரசியல் லாபம் அடைய விரும்புவோரின், எக்காலத்துக்குமான ஏமாற்றுச் சொல். 

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக, அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் மராட்டியம். மொத்தம் 48 தொகுதிகள் இருக்கின்றன அங்கு. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பையை உள்ளடக்கிய மாநிலம் என்பதால், மராட்டிய அரசியல் நிகழ்வுகள் கூடுதல் முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். இப்போது சில நாள்களாக, அங்கே டிரெண்டிங்கில் இருக்கும் வார்த்தை, ’கோல்மால் ரிட்டர்ன்ஸ்’. பி.ஜே.பி - சிவசேனா கூட்டணியைத்தான் அப்படி அடையாளப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில், வலதுசாரித்துவம் வலுவாக இருக்கும் மாநிலங்களில் மராட்டியத்தை முதலிடத்தில் வைக்கலாம். உத்தரப்பிரதேசத்தில்கூட, பி.ஜே.பி-க்கு எதிராக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற சமூகநீதிக் கட்சிகள் சமமான பலத்தில் இருக்கின்றன. ஆனால், அதுபோன்ற வாய்ப்புகள் மராட்டியத்துக்கு அருகிவிட்டன. ஒருபுறம் ‘மரு’ இல்லாத பி.ஜே.பி, இன்னொரு புறம், ‘மரு’ வைத்த சிவசேனா. இந்த இரண்டும் தான் மராட்டிய மக்களின் முன்னால் இருக்கும் இரண்டே ஆப்ஷன்கள். ``மராட்டிய மக்களுக்கு முதல் சாய்ஸே எங்கள் கூட்டணிதான்” என்கிறார் பிரதமர் மோடி. அப்படியும் இருக்கலாம். காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும், அங்கே அடித்தளத்தை இழந்து மாமாங்கம் ஆகிவிட்டதால், மோடியின் அறிவிப்பில் அர்த்தம் இருக்கவே செய்கிறது.

அரசியல் களத்தில், பி.ஜே.பி-யைவிட சீனியர் சிவசேனா. `அந்நியனை அடித்து விரட்டுவோம்’ என்ற கொள்கை(?)யுடன், பாலா சாகேப் தாக்கரே ஆரம்பித்த கட்சி. அவரது, அபாயகர அரசியல் முழக்கங்கள் வாங்கிய காவுகளுக்கு கணக்குச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. அதை நாடே அறியும். கார்ட்டூனிஸ்டாக இருந்தபோதே கலவர ஸ்பெஷலிஸ்ட் அவர். கட்சி எனும் அமைப்பே வாய்க்கும்போது சும்மா இருப்பாரா என்ன? சிவசேனாவின் 52 ஆண்டுக்கால வரலாறு நெடுகிலும், வன்முறை அரசியலின் கோரத்தடங்கள் நிறைந்து கிடக்கின்றன. 

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னணியில் இருந்த பெருமைக்கும் சொந்தக்காரர் அவர். எப்போது ‘மண் அரசியல்’ பேச வேண்டும், எப்போது ‘மத அரசியல்’ பேச வேண்டும் என்பதை அறிந்தவர். ஒரு தேர்தலில் ‘ஜெய் சிவாஜி’ என்று முழங்கினால், இன்னொரு தேர்தலில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குவார். அப்படிப்பட்ட தாக்கரேவின் அருகிருந்து பாடம் படித்து அரசியலுக்கு வந்தவர் உத்தவ் தாக்கரே. 

ஆண்டுதோறும் அக்டோபர் 17-ம் தேதி ‘தசரா பேரணி’யைப் பிரமாண்டமாக நடத்தும் சிவசேனா. சிவாஜி பார்க் பகுதியில் மேடையமைத்து, அரசியல் இலக்குகளை அறிவிப்பார்கள். ஆரம்பித்த காலத்திலிருந்து அதே முழக்கம்தான்... ``மராட்டியம் மராட்டியருக்கே, இந்தியா இந்துக்களுக்கே.” கடந்தாண்டு, அரங்கேறிய பேரணியில், ‘இந்துத்துவா’ முகத்தை அதிகமாகவே காட்டினார்கள். அங்கே, உத்தவ்வை நோக்கி எழுந்த முழக்கம், 'ஹிந்து ஹிருதய் சாம்ராட்' என்பதுதான். அதில் மகிழ்ந்த உத்தவ் தாக்கரேவின் கண்ணுக்கு, முதலில் தெரிந்த கனி ‘ராமர் கோயில். அடுத்த சில நாள்களில் அயோத்திக்கு வண்டி ஏறியவர், அங்கே வைத்து ‘பிஜேபி இந்துக்களை ஏமாற்றுகிறது” என்று போட்டுத்தாக்கினார். “அயோத்தியில் ராமர்கோவிலை பி.ஜே.பி கட்டவில்லை என்றால், சிவசேனா கட்டும்” என்றும் அறிவித்தார். இப்போது “இருவரும் இணைந்து கட்டுவோம்” என்கிறார் கூட்டணி அறிவிப்புக்குப் பின். 

இவர்களின் கூட்டணிக்கு வயது 25. இவ்வளவு காலம் கைகோத்திருக்கும் இன்னொரு கூட்டணி, இந்தியாவில் இல்லையென்றே சொல்லலாம். 1999 - 2014 வரைக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த பெருமையும் இக்கூட்டணிக்கு உண்டு. ஆனால், 2014-ம் ஆண்டில், மோடி அலையில் பகையாளிகளோடு சேர்த்து, பங்காளி சிவசேனாவும் காலியானது. 63 இடங்களுக்குச் சுருங்கினார்கள். 'சிவாஜிக்குச் சிலை வைப்போம்' போன்ற அறிவிப்புகளின் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக சிவசேனாவிடமிருந்து சிவாஜி பிம்பத்தையும் பறித்தார்கள். முதலுக்கே மோசம் வருகிறது என்று அறிந்ததும், மோடி ஆட்சியைப் பிரித்து மேய்ந்தார் உத்தவ். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பொருளாதாரத் தாக்குதல்களின்போது, உத்தவ் எழுப்பிய எதிர்ப்புக்குரல் முக்கியத்துவம் பெற்றது. 

பிரதமர் மோடியை `சாம்னா’ விமர்சித்த அளவுக்கு, இந்தியாவின் வேறெந்த பத்திரிகையாவது விமர்சித்திருக்குமா என்பதும் சந்தேகமே. கடந்த வாரம் வரைகூட, ``பிரதமர் மோடியென்ன பெரிய இவரா?” என்று காய்ச்சி எடுத்தார்கள். ஆனால் இப்போது, ``மோடி போல வருமா?” என்று பாசமழை பொழிகிறார்கள். ``அதெப்படி, இத்தனை ஆண்டுகளாக வில்லனாகத் தெரிந்தவர், ஒரே இரவில் ஹீரோவாகத் தெரிகிறார்?” என்ற, மராட்டிய மக்களின் கேள்விக்குத்தான் பதிலில்லை. “இது நமக்கு வழக்கம்தானே!” என்று அமைதியாக இருக்கிறார்கள் இருவரும். 

இப்போது, பி.ஜே.பி, ``காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்கிறது” என்று, கூட்டத்துக்குக் கூட்டம் வறுத்தெடுக்கிறார் மோடி. இப்போது, அவர் கூட்டணிக்கு கைகுலுக்கி இருக்கும் உத்தவ் தாக்கரே, பால் தாக்கரேவின் புத்திரன். கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில், உத்தவுக்கு அருகே அளவில்லாப் புன்னகையுடன் நின்றிருந்தவர், அவரின் புத்திரன் ஆதித்யா தாக்கரே. `யுவசேனா’ தலைவராக இருக்கும் அவர்தான், சிவசேனாவின் அடுத்த தலைவர். காங்கிரஸ் செய்தால் கசக்கும் வாரிசு அரசியல், சிவசேனா செய்தால் மட்டும் இனிப்பது எப்படியென்று தான் புரியவில்லை. 

ஓர் ஆங்கில ஊடகம் வெளியிட்ட சமீபத்திய செய்தி இது. கடந்த வாரம், அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் அமித் ஷா. அப்போது, “இனிமேல் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை” என்று சொல்லியிருக்கிறார் அத்வானி. பதிலுக்கு அமித் ஷா, “உங்கள் தொகுதியில் உங்கள் பிள்ளைகளை நிறுத்துவோம்” என்றொரு ஆப்ஷனை சொல்லியிருக்கிறார். அத்வானிக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மகள் பிரதிபா, மகன் ஜெயந்த். இதில், ஜெயந்துக்கு அரசியல் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அமித் ஷாவை நோக்கி அத்வானி சொன்ன வார்த்தை... “நோ தேங்க்ஸ்.” ஆயிரம் அர்த்தம் கொடுக்கிறது, அந்த `நோ தேங்க்ஸ்!’

25 இடங்களில் பி.ஜே.பி-யும் 23 தொகுதிகளில் சிவசேனாவும் போட்டியிடப் போகின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கும் சேர்த்தே தொகுதி உடன்பாடு செய்துகொண்டுள்ளனர். அதிலும், ஆளுக்குப் பாதியென பிரித்துக்கொண்டுள்ளனர். இதற்குத்தான், இத்தனை நாட்களாக, யூடர்ன் அடித்து டேபிளை உடைத்திருக்கிறார் உத்தவ். `புலி’யின் வேஷம் கலைந்திருக்கிறது!

அங்கே உத்தவ் என்றால், இங்கே ராமதாஸ். யோசித்துப் பார்த்தால், சிவசேனாவுக்கும் பா.ம.க-வுக்கும் நிறையவே ஒற்றுமை இருப்பது புரியும். ஒரு கட்சிக்கு மதம் அடிப்படை என்றால், இன்னொரு கட்சிக்கு சாதி அடிப்படை. உத்தவ், `ராமர் கோவில்’ கேட்கிறார். அன்புமணி ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு’ கேட்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். அதுபோக, இரண்டு கட்சிகளின் நிறுவனர்களுமே அரசியல் பதவிக்கு வந்ததில்லை. இருவருமே, “என் குடும்பத்தில் இருந்து எவரும் பதவிக்கு வரமாட்டார்கள்” என்று அறிவித்துவிட்டு, அப்புறம் அதைக் காற்றில் பறக்கவிட்டவர்கள். ஒப்பீடு சரிதானே?

”கார் உள்ளளவும், கடல்நீர் உள்ளளவும், பார் உள்ளளவும்” வசனத்தை, இனிமேல் மறந்துவிடுவார் ராமதாஸ். அது அவருக்கு வாடிக்கைதான். ஆனால், அ.தி.மு.க ஆட்சியின் அவலங்கள் பற்றியும், ஊழல்கள் பற்றியும் கொஞ்சப் பேச்சு பேசினாரா, கொறைஞ்ச பேச்சு பேசினாரா? அடுக்கடுக்காக அவர் அறிக்கைகள் விட்டதில் ஆடிப்போன அமைச்சர்கள்தான், இப்போது அவரை வரவேற்று பொன்னாடை போர்த்தி புன்னகையோடு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, அய்யா பொழியப்போகும் அடுத்த பொன்மொழி என்னவாக இருக்கும் என்ற ஆவல் அதிகரிக்கிறது. 

இன்றைய இளைஞர்களுக்கு இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் மீது வெறுப்பும் வேதனையும் ஏற்பட முதல் காரணம், அவர்களின் சந்தர்ப்பவாதம் என்று சொல்லலாம்தான். ஆனால், ``சந்தர்ப்பவாத கூட்டணி என்று எதுவுமில்லை. எல்லாக் கூட்டணிகளும் சந்தர்ப்பவாதம் தான்” என்று, விளக்கம் தருவார்கள். இத்தனை நாள்களாக அந்தக் கட்சியின் மீது வைத்துவந்த விமர்சனங்களுக்கு என்ன அர்த்தமென்றும் கேட்கலாம்தான். அதற்கும், “கோரிக்கைகள் அடிப்படையில் கோத்தோம் கரம்” என்று, வசனம் வார்ப்பார்கள். எதற்கு வம்பு? 

ஆகட்டும், போகட்டும். மக்களிடம் ஒரு மன்னிப்பாவது கேட்பான், தார்மிகம் கொஞ்சமேனும் கொண்ட தலைவன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு