Published:Updated:

``டி.டி.வி.தினகரனை நம்பிய 18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர்!" - திண்டுக்கல் சீனிவாசன்

``கஜா புயலில் பாதிக்கப்பட்ட நபர்கள் சோத்துக்கு வழி இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு 2,000 பணத்தை நேரடியாக அக்கவுன்டில் அனுப்பத் திட்டங்கள் வகுக்கப்பட்டன" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

``டி.டி.வி.தினகரனை நம்பிய 18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர்!" - திண்டுக்கல் சீனிவாசன்
``டி.டி.வி.தினகரனை நம்பிய 18 எம்.எல்.ஏ-க்கள் ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர்!" - திண்டுக்கல் சீனிவாசன்

துரை மாவட்டம் மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக்கழகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மதுரை வடக்குச் சட்டமன்ற உறுப்பினரும் புறநகர் மாவட்டச் செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா, மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேடையில் அமைச்சர் ஒருபக்கம் பேசிக்கொண்டிருக்க மற்றொரு பக்கம் தொண்டர்களுக்குக் கறி விருந்து அளிக்கப்பட்டது. எம்.பி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேடையில் செங்கோட்டையன் பேசுகையில், ``அ.தி.மு.க வரலாற்றுச் சிறப்புமிக்க கட்சி. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பெரும் தலைவர்களின் வழிவந்த கட்சி. தற்போது அவர்களின் வழியில் அ.தி.மு.க-வை அண்ணன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் வழிநடத்துகின்றனர். மக்களின் கண்ணீரைத் துடைத்தவர் அம்மா (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா). அவர் தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்களால் இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அந்நிய முதலீடு, வேலைவாய்ப்புகளில் மிகப்பெரும் சாதனைகளைச் செய்துள்ளார். 6 மொழிகள் பேசிய மாபெரும் தலைவர் ஜெயலலிதாதான். அவருக்குப் பின்னால் 100 ஆண்டுகள் கழகம் விளங்கும். அதைப்போல், சிந்தாமல் சிதறாமல் கட்சி இயங்குகிறது. கட்சியிலிருந்து பறவைகள், பூச்சிகள் பிரிந்தாலும் அ.தி.மு.க-வை  அசைக்க முடியாது. தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியை அ.தி.மு.க அமைத்திருக்கிறது. பௌர்ணமி நாளில் மிகச்சிறந்த முடிவுகளை எடுத்துள்ளது. கண்டிப்பாக அ.தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும். கேட்காமல் கொடுத்து வரும் அரசு அ.தி.மு.க அரசுதான். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்றைக்கும் அக்கட்சிக்கு தளபதியாக மட்டுமேதான் இருப்பார். அதைத் தாண்டி வேறு எதுவும் செய்ய முடியாது. ப்ளஸ் டூ முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான மகத்தான சாதனைகளை அ.தி.மு.க அரசு செய்ய உள்ளது. இதனால் மக்களின் குறைதீர்க்கும் ஆட்சி அ.தி.மு.க ஆட்சி என்று சொல்வார்கள்" என்றார்.

அடுத்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ``அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அணியினருக்கு மிகப்பெரும் சவால் காத்திருக்கிறது. `ஒழிந்து போவோம்' என்று கூறியவர்கள் இன்று ஒழிந்துபோய்விட்டார்கள். ஜெயலலிதா இறந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாகச் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க தலைமையில் அகில இந்திய கட்சியான பி.ஜே.பி. இன்று கூட்டணி அமைத்திருக்கின்றனர். பாரத பிரதமரே அ.தி.மு.க-வோடுதான் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்பியுள்ளார். அதேபோல், பா.ம.க-வும் கூட்டணிக்கு வந்துள்ளனர். இந்தியாவின் புகழை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லும் பிரதமர் மோடி, அ.தி.மு.க-விடம் கூட்டணி வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதனால் நமது வெற்றிக்கூட்டணி கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும். வட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பி.ஜே.பி சில இடங்களில் தோல்வியடைந்தது. உடனே, காங்கிரஸ்தான் இனி வெற்றி பெறும் என்று எண்ணி, `அடுத்த பிரதமர் ராகுல்தான்' என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது ஸ்டாலின் கூறினார்.

ஆனால், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் ராகுல்தான் அடுத்த பிரதமர் என்று முன்மொழியவில்லை. ஏனென்றால் ராகுலைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழியும் கட்சிகளுக்கு அழைப்புகள் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இப்படி ஸ்டாலின் இரட்டை வேடம் போடலாமா? பணத்துக்காக ராமதாஸ் அ.தி.மு.க-வுடன் விலைபோய்விட்டார் என ஸ்டாலின் பேசுகிறார். தி.மு.க-வுடன் கூட்டணி என்றால் கொள்கை! அ.தி.மு.க என்றால் பணமா? அவர் என்ன வேண்டுமானாலும் வாய்க்கு வந்ததைப் பேசலாம். ஆனால் மக்கள் சக்தி அ.தி.மு.க-விடம்தான் உள்ளது. அதனால்தான் பா.ம.க., அ.தி.மு.க-வைத் தேர்வுசெய்துள்ளது. பா.ம.க மற்றும் ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் சின்னங்களுக்கு அங்கீகாரம் தந்தவரே ஜெயலலிதாதான். நாவலர் நெடுஞ்செழியன் வரவேண்டிய இடத்தில் கருணாநிதி வந்தார், எப்படித் தெரியுமா? எம்.ஜி.ஆர் காலில் விழுந்து. ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டுப் பேசுகின்றனர். வாடகை சைக்கிளுக்கு காசு இல்லாதவர்கள்தான் தி.மு.க-வினர். ஆனால், இன்று பைக், கார் என்று மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துச் சுற்றுகின்றனர்.

சாக்கடை வசதி செய்யாதது, மின்விளக்கு எரியாதது போன்றவை உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததே காரணம் என ஸ்டாலின் நடத்தும்  கிராம சபைக் கூட்டத்தில் அ.தி.மு.க அரசைக் குறை கூறுகிறார். உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தக் காரணம் நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கே ஆகும். ஆனால், அ.தி.மு.க அரசைக் குறை கூறுகிறார். ஆட்சிக்குக் கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார். கஜா புயலில் பாதிக்கப்பட்ட நபர்கள் சோத்துக்கு வழி இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு 2,000 பணத்தை நேரடியாக அக்கவுன்டில் அனுப்பத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தை, மக்கள் விரும்பவில்லை. 10,000 ரூபாய்க்கு வேலை செய்ய லட்சக்கணக்கான இளைஞர்கள் பாடம் எடுக்க முன்வந்தனர். ஸ்டாலின் தூண்டுதல் நிறைவேறவில்லை. அவரது வேஷம் கலைந்துபோய் மண்ணைக் கவ்வினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள், டி.டி.வி.தினகரனை நம்பி ரோட்டில் பிச்சை எடுக்கின்றனர். அவரை நம்பி நாசம் போய்விட்டனர். தற்போது இடைத்தேர்தல் வைத்தாலும் ஜெயித்துவிடுவோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 40 இடங்களிலும் 21 இடைத்தேர்தல் இடங்களிலும் வெற்றிபெறும் என்றார்.