Published:Updated:

`இப்படிச் சொல்வது எந்த வகையில் சரியானது?!' - தி.மு.க முடிவால் அ.தி.மு.க-வை நாடிய ஜி.கே.வாசன்

2001 தேர்தலின்போது, ஜெயலலிதாவிடம் பேசி 15 சட்டமன்றத் தொகுதிகளை த.மா.கா சார்பில் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தது மூப்பனார்தான். ஆனால், அவர் மகனுக்கு 2 சீட் கூட கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியதுதான் விநோதமாக இருக்கிறது.

`இப்படிச் சொல்வது எந்த வகையில் சரியானது?!' - தி.மு.க முடிவால் அ.தி.மு.க-வை நாடிய ஜி.கே.வாசன்
`இப்படிச் சொல்வது எந்த வகையில் சரியானது?!' - தி.மு.க முடிவால் அ.தி.மு.க-வை நாடிய ஜி.கே.வாசன்

அ.தி.மு.க அணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ். `எங்களுக்கு 2 இடங்களை ஒதுக்குவதற்கு தி.மு.க தயாராக இருந்தது. காங்கிரஸ் மேலிடத்தின் கண்டிப்பான உத்தரவால், எங்களைப் புறம்தள்ளிவிட்டது தி.மு.க' என்கின்றனர் த.மா.கா வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணியில் பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்துவிட்டன. இதற்கான தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் நேற்று கையொப்பமானது. தே.மு.தி.க முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க தயக்கம் காட்டுவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டிருக்கிறது. அதேநேரம், அ.தி.மு.க அணியில் இணைவது என்ற முடிவை எடுத்திருக்கிறார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். `மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால், பா.ஜ.க அங்கம் வகிக்கும் அணியில் இடம்பெற மாட்டோம்' என த.மா.கா நிர்வாகிகள் பேசி வந்த நிலையில், இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதை அக்கட்சியின் நிர்வாகிகள் பெரிதாக விரும்பவில்லை. 

`ஜி.கே.வாசன் முடிவின் பின்னணி என்ன?' என த.மா.கா நிர்வாகிகளிடம் கேட்டோம். ``தொடக்கத்திலிருந்தே தி.மு.க கூட்டணியைத்தான் விரும்பினோம். இதன் ஒருபகுதியாக தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருந்தோம். எங்களுக்கு 2 இடங்களை ஒதுக்குவார்கள் எனவும் எதிர்பார்த்தோம். ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தி.மு.க நிர்வாகிகள் டெல்லி சென்றதிலிருந்தே காட்சிகள் மாறிவிட்டன. `த.மா.கா-வுக்கு சீட் ஒதுக்கக் கூடாது, தமிழ்நாட்டில் ஒரே ஒரு காங்கிரஸ் கட்சி மட்டும்தான். டி.எம்.சி-க்குத் தருவதாக இருந்த 2 தொகுதிகளையும் சேர்த்து எங்களுக்கு 9 தொகுதியாகக் கொடுத்துவிடுங்கள்' எனக் கூறியுள்ளனர். இதற்கு தி.மு.க தரப்பில் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதே நேரத்தில், தி.மு.க தரப்பை நாங்கள் தொடர்புகொண்டபோது, `உங்களுக்குத் தரக் கூடாது என டெல்லி காங்கிரஸ் சொல்கிறது' எனக் கூறியுள்ளனர். இதை எதிர்பார்க்காத ஜி.கே.வாசன், `நான் உங்களை நம்பித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களை எதிர்பார்த்து அல்ல. இப்போது திடீரென இப்படிச் சொல்வது எந்த வகையில் சரியானது?' எனக் கேட்டிருக்கிறார். `வேறு வழியில்லை' எனத் தி.மு.க தரப்பில் கூறிவிட்டனர். 

இதன்பிறகே, அ.தி.மு.க ஆப்ஷனைத் தேர்வுசெய்தார் ஜி.கே.வாசன். `2 தொகுதிகள் பிளஸ் ஒரு ராஜ்யசபா சீட்' எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். தேர்தலில் வேட்பாளராக ஜி.கே.வாசன் களமிறங்குவதற்கும் வாய்ப்பு குறைவு. தேர்தலுக்குப் பிறகு வரக்கூடிய மாநிலங்களவைத் தேர்தலில், 6 இடங்கள் வரை காலியாக இருக்கப்போவதால், எங்களுக்கும் ஒரு சீட் ஒதுக்குவார்கள் என உறுதியாக நம்புகிறோம். அ.தி.மு.க அணியில் ஜி.கே.வாசன் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். அந்தக் கூட்டணியில் ஒரு காங்கிரஸ் கொடி பறப்பதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கின்றனர். இதைப் பற்றி எங்களிடம் பேசிய ஜி.கே.வாசன், `பா.ஜ.க இருந்தாலும்கூட, சிறுபான்மையினரைக் காப்பாற்றவேண்டிய இடத்தில் த.மா.கா இருக்கிறது. இந்த அணியில் இருப்பதன்மூலம், அந்தக் கடமையைச் செய்யவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது' என்றார். 

எந்தக் காலத்திலும் சிறுபான்மையினருக்கு எதிரான நிலையை ஜி.கே.மூப்பனார் எடுத்ததில்லை. அப்படியிருக்கும்போது, இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சிதான். சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என விமர்சித்த சரத் பவாரோடு அவர்கள் கூட்டணி வைப்பார்கள்; பா.ஜ.க-வோடு கூட்டு வைத்த மம்தாவையும் காங்கிரஸ் ஆதரிக்கும்; பா.ஜ.க-வோடு சேர்ந்து ஆட்சி நடத்திய மாயாவதியையும் காங்கிரஸ் ஆதரிக்கும். ஆனால், எங்களை மட்டும் அவர்கள் நிராகரிப்பார்கள். 2001 தேர்தலின்போது, ஜெயலலிதாவிடம் பேசி 15 சட்டமன்றத் தொகுதிகளை த.மா.கா சார்பில் காங்கிரஸ் கட்சிக்குப் பெற்றுக்கொடுத்தது மூப்பனார்தான். ஆனால், அவர் மகனுக்கு 2 சீட் கூட கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியதுதான் விநோதமாக இருக்கிறது. த.மா.கா-வை அழிக்கும் நோக்கில் காங்கிரஸ் செயல்படுகிறது. இதே இடத்தில் கருணாநிதி இருந்திருந்தால், எங்களுக்கான இடங்களை அவர் ஒதுக்கியிருப்பார். அ.தி.மு.க அணியை நோக்கி எங்களைத் தள்ளியதில் தி.மு.க-வுக்கும் பங்கு இருக்கிறது" என்கின்றனர் ஆதங்கத்துடன்.