Published:Updated:

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கக் கோரி பந்த்!

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கக் கோரி பந்த்!
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்கக் கோரி பந்த்!

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளுடன் தேவர் அமைப்புகள் ஒன்றிணைந்து, இன்று பந்த் நடத்தியதால் மதுரையின் இயல்பு நிலை மாறியது. அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் செயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில், பல்வேறு தேவர் சமூக அமைப்புகள் மதுரை நகரில் பந்த் நடத்தினர்.

தங்களது நீண்ட கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைக்க மத்திய அரசு அனுமதித்தும், தமிழக அரசு அதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும், சீர்மரபினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், பள்ளிப் பாடத்தில் தேவரின் உண்மையான வரலாற்றை இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்து, இன்று  பந்த் அறிவித்தனர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்ரீதர் வாண்டையார், பாண்டி கோயில் அருகே கைதுசெய்யப்பட்டார். 

காலை முதல் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலை முன்பு, கதிரவன், கருணாஸ், திருமாறன், முருகன்ஜி போன்ற பல்வேறு தேவர் அமைப்பினர் குழுமியதால் பரபரப்பு ஏற்பட்டது. நகருக்குள் பல பகுதிகளில் வாகனப்  போக்குவரத்து தடைபட்டது. முக்கியமான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.  போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்தது.