Published:Updated:

``உலகம் முழுவதும் தமிழர்கள் சிறந்துவிளங்க இதுதான் காரணம்!" பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

``உலகம் முழுவதும் தமிழர்கள் சிறந்துவிளங்க இதுதான் காரணம்!" பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்
``உலகம் முழுவதும் தமிழர்கள் சிறந்துவிளங்க இதுதான் காரணம்!" பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

"தமிழகம் வரும் முன்னர் வரை மகாராஷ்டிராதான் வளர்ச்சிபெற்ற மாநிலம் என நினைத்திருந்தேன். ஆனால், ஆளுநராகப் பதவி ஏற்றபின் இரண்டு மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்துள்ளேன். உண்மையில், தமிழ்நாடு மகாராஷ்டிராவைவிட வளர்ச்சி அடைந்துள்ளது!”

``இந்தியா ஓர் ஏழ்மையான நாடு, அந்த நாட்டின் மக்கள் உணவில்லாமல் தவிக்கின்றனர். ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்கிறார்கள் என்பது மாதிரியான காட்சிகள் அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. அந்தக் காட்சிகள்தாம் தமிழ்நாடு அறக்கட்டளையைத் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்தது" என்கிறார், தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவனர் பழனி.ஜி.பெரியசாமி. தமிழ்நாடு அறக்கட்டளையானது, அமெரிக்க வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து நடத்தும் அறக்கட்டளையாகும். இதன் ஆண்டு விழாவானது,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கஸ்தூரி ஶ்ரீனிவாஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பழனி. ஜி.பெரியசாமி, கஸ்தூரி & சன் குழுமத் தலைவர் என்.முரளி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவரும் 'மண்வாசனை' திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான சோமலெ சோமசுந்தரம்  உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதில் பழனி.ஜி.பெரியசாமி பேசுகையில், ``அனைவரும் மாதம் 5 டாலர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நான்கு பேர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, இன்று மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. உலகின் பெரிய அறக்கட்டளையான போர்ட், அறக்கட்டளை பெற்றுள்ள அமெரிக்காவின் வரி விலக்கைக் கடந்த 1976-ம் ஆண்டே தமிழ்நாடு அறக்கட்டளை பெற்றுள்ளது. இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பார்த்து கடந்த 1983-ம் ஆண்டு 2.9 லட்சம் ரூபாய் செலவில், டெய்லர்ஸ் ரோட்டில் 4 கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டது. இன்று, அதன் மதிப்பு பல கோடி ரூபாய். நாங்கள் இந்தியாவில் பெற்ற கல்விதான் எங்களின் வெற்றிக்குக் காரணம். அந்தக் கல்விக்குப் பின்னால் இந்தியாவின் வரிப்பணம் மறைந்துள்ளது. நாங்கள் பெற்றதை நாட்டுக்குத் திரும்பச் செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்” என்றார்.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம், ``தமிழ்நாடு அறக்கட்டளையானது இதுவரை 9 வருவாய் மாவட்டங்களில் உள்ள 51 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து, கிட்டத்தட்ட 4,500 அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், அரசுப் பள்ளிகளோடு இணைந்து பயிற்சி அளித்து வருகிறோம். இப்போது இந்த அறக்கட்டளையில் 1,000 உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல், 9,000-க்கும் அதிகமானோர் தற்போது இந்த அறக்கட்டளைக்குத் தொடர்ந்து பண உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் அறக்கட்டளையின் செயல்பாடுகளைத் தொடங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். அவற்றுக்காக, வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணின் வளர்ச்சிக்கு நிதி திரட்டும் வகையில் `மண்வாசனை’ என்ற அமைப்பைத் தொடங்க உள்ளோம்” என்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியபோது, `` `திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களின் பழமொழி. சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் வசித்த கோவலன் கடல்கடந்து வணிகம் செய்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சோழர்கள் வலிமையான கடற்படையைக் கொண்டு தங்களுடைய ராஜ்ஜியங்களை இலங்கை, இந்தோனேஷியா எனப் பல்வேறு நாடுகளுக்கும் விரிவடைய வைத்துள்ளனர். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அதிகமான தமிழர்கள் வசிக்கின்றனர். அதேபோல், தற்போது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இது, கிட்டத்தட்ட இந்தியாவின் மக்கள்தொகையில் 1 சதவிகிதமாகும். இதுமாதிரி, தமிழர்கள் உலகம் முழுவதும் சென்று சிறந்து விளங்குவதற்குக் காரணம், தமிழர்களின் கடின உழைப்பு, நம்பகத் தன்மை, அனைவரிடமும் நட்பு பாராட்டுவது உள்ளிட்டவையே ஆகும். அதனால்தான் இந்தியாவின் முதல் மூன்று பாரத ரத்னா விருதுகளானது மூன்று தமிழர்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழக அரசுடன் உடன்படிக்கை செய்து 5,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வருவது என்பது மிகச் சிறந்த செயல்பாடாகும். இந்தியாவின் மக்களவைத் தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்குப் பணம் தேவைப்படும். அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் தேர்தல் நிதி கேட்பார்கள். யாரும், இதுமாதிரி நிதி கேட்கும் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுக்காதீர்கள். அப்படி நீங்கள் கொடுக்கும் பணம், வாக்காளர்களிடமிருந்து ஓட்டுகளைப் பெறத்தான் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தால் இதுமாதிரியான தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளித்து உதவுங்கள். நான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவன். தமிழகம் வரும் முன்னர் வரை மகாராஷ்டிராதான் வளர்ச்சிபெற்ற மாநிலம் என நினைத்திருந்தேன். ஆனால், ஆளுநராகப் பதவி ஏற்றபின் இரண்டு மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்துள்ளேன். உண்மையில், தமிழ்நாடு மகாராஷ்டிராவைவிட வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு